கடல் கடந்து நடந்த விழா : புதுமை… எளிமை… இனிமை… பெரியார் பிஞ்சு புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
ப. மோகனா அய்யாதுரை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் _ பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, கடந்த 25 ஆண்டுகளாக இளம் வாசகர்களுக்குச் சுவையான பல பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது.
பிஞ்சுகளின் சமூகத் திறனை மேம்படுத்தவும், கற்பனைத் திறனை வளப்படுத்தவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் புதுமையான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்தெடுக்கும் பலவிதமான போட்டிகளையும் உள்ளடக்கியதாக பல்வேறு வடிவங்களில் பிஞ்சுகளின் உணர்வோடு கலந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது நமது பெரியார் பிஞ்சு. குழந்தைகளிடமிருந்தே அவர்களின் தேவைகளைத் தெரிந்து அவற்றைப் பல வழிகளில் பெற்று, பிற பிஞ்சுகளுக்கும் பகிர்ந்து வருகிறது நமது ‘பெரியார் பிஞ்சு.’
பெரியார் பிஞ்சின் வாசகர்களாக இருந்த இளம் பிஞ்சுகள் யாவரும் இப்போது வளர்ந்து பல துறைகளில் கால் பதித்து, சமுதாயப் பற்று கொண்ட இளைஞர்களாக வலம் வருகின்றனர். அதேபோல இன்றைய ‘பெரியார் பிஞ்சு’ வாசகர்கள் நாளைய சமூகத்தில் ஜாதி, மத, இன பேதமற்ற நிலையை உருவாக்கும் பெருமைமிகு இளைஞர்களாக வலம் வருவர் என்பதில் அய்யமே இல்லை. ஏனெனில், அதற்கான உரமிடும் பணியையே ‘பெரியார் பிஞ்சு’ செவ்வனே செய்து வருகிறது.
இதழ் வாயிலாக மட்டுமே என்றில்லாமல் நம்முடைய படைப்பு இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு பல தளங்களில் விரிவடைந்துள்ளது. இந்த டிஜிட்டல் தளங்களைக் கையாள்வதில் முன்னணியில் இருப்பதும் நமது பிஞ்சுகளே! இந்த டிஜிட்டல் புரட்சி ஊடகத்தின் பல பரிமாணங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும், தனித் திறமைகளை வெளிக்காட்டவும், நேரத்தைச் சேமிக்கவும் வழிவகை செய்து வருகிறது. ஆம். அச்சு வடிவில் மட்டுமே இருந்த ஊடகம் இப்போது சமூக ஊடகம். காட்சி ஊடகம் எனப் பலவாய் விரிவடைந்துள்ளது.
ஒவ்வொரு வினாடியும் நாம் இணைந் திருக்கவும், படைப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், நமக்குத் தெரிந்தவற்றைப் பிற பிஞ்சுகளோடு பகிர்வதற்கும் நிறையவே வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
பெரியார் பிஞ்சு இதழினை அச்சுப் பிரதியாக வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்காக https://www.periyarpinju.com/ என்ற நம் இணைய தளத்தில் இதழில் இருக்கும் அனைத்துப் பகுதிகளும் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகின்றன. எந்தப் பகுதி தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்ளலாம். அதுமட்டு மின்றி, கடந்த மாதம் வெளிவந்த இதழ், கடந்த ஆண்டில் வெளிவந்த இதழ்கள் என அனைத்தையும் ஒரே தளத்தில் படித்துக்கொள்ள நம் இணையதளம் உதவுகிறது.
25 ஆண்டுகள்
5500 படைப்புகள்
100000 பிஞ்சுகள்
25 ஆண்டுகளைக் கடந்து 5500க்கும் மேற்பட்ட படைப்புகளால் 100000க்கும் மேற்பட்ட இளம் பிஞ்சுகளை தம் வாசகர்களாகக் கொண்டு தொடர்ந்து புதுமைகளைச் செய்து வரும் நமது பெரியார் பிஞ்சுக்கு ஒரு சல்யூட்!
நம் பெரியார் பிஞ்சு இதழ் சிறப்பான முறையில் அச்சு வடிவிலும், இணைய வடிவிலும் வெளிவர அக்கறையோடு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இளம் பிஞ்சுகள், பெற்றோர்கள், படைப்புகளை அளித்துவரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், புதுமையான தகவல்களை வழங்கிவரும் ஆற்றலாளர்கள் மற்றும் இதழ்க் குழுவினர் என அனைவரது ஒத்துழைப்பும் இங்கு வரவேற்கத்தக்கது.
பெரியார் பிஞ்சு படிக்கும் செல்வங்களின் நெஞ்சில்…
விடுதலை மலரும்!
உண்மை புலரும்!!
பகுத்தறிவு வளரும்!!!
பயணம் தொடர்வோம் – இன்னும் பல புதுமைகளோடு!
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரியார் பிஞ்சு இணையதளம் செயல்பட்டு வந்தாலும், அவ்வப்போது அதைப்புதுபிப்பதும் அவசிய மாயிற்றே! புதிய புதிய வசதிகள் நாளும் இணையா கணினி அறிவியலில் உருவாகின்றன. அதை நாமும் பயன்படுத்த வேண்டாமா?
செல்பேசியில் படித்தாலும், அதற்கேற்ற பக்க வடிவமைப்பு, கணினியில் படித்தாலும் அதற்கேற்ற பக்க வடிவமைப்பு என தானாக மாறிக் கொள்ளும். கண்ணைக் கவரும் வண்ணங்கள், புதிர்களுக்கேற்ற பக்கங்கள், பிஞ்சு & பிஞ்சு ஆல்பம், எளிய முறையில் அச்சுப் பிரதிக்கு சந்தா செலுத்தும் வாய்ப்பு என புதுமையுடன் திகழ்கிறது இணையதளம்.
இந்தப் புதிய வடிவமைப்பிலான இணைதளத்தை மலேசியாவில் நடைபெற்ற ”உலகத் தமிழ் மாநாட்டில்” ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார் குழந்தைகள் எழுத்தாளரும், பாப்பா கவிஞர் என்று அறியப்படுவருமான முரசு நெடுமாறன் அவர்கள்! அப்போது விழியன் பொறுப்பாசிரியர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்ட பலரும் இருந்தனர். நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு சிங்கப்பூர் பெரியார் பிஞ்சு யாழ்பாரதி நன்றி கூறினார். நீங்கள் பார்த்துட்டீங்களா இணையதளத்தை…?
குழந்தைகள் இலக்கியத்தில் சாதனைகள் படைத்த கவிஞர் முரசு நெடுமாறன் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘பெரியார் பிஞ்சு’ இதழின் சிறப்பாசிரியராக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
பிஞ்சு இதழின் சிறப்பாசிரியர்
சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் துறைமுகத்திற்கு அப்பால் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள கேரிதீவில் 14.01.1937 அன்று பிறந்தவர் முரசு நெடுமாறன். பெற்றோர் இராசகிள்ளி சுப்புராயன் முனியம்மை இணையர். பிறந்த தோட்டத் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி ஏழாம்வகுப்புவரை கற்றுத் தேர்ந்தார்; தமிழ்மணிப் பட்டயமும் பெற்றார். சொந்த முயற்சியால் தனிப்படக் கற்று மூன்றாம் படிவம் தேர்ந்தார். 1958இல் இவரின் முதல் கவிதை தமிழ்முரசு மாணவர் மணிமன்ற மலரில் வெளிப்போந்தது. தொடர்ந்து கவிதை, கட்டுரை, கதை, நாடகங்கள் எழுதினார். 1966இல் கல்வி அமைச்சால் தொடங்கப்பெற்று, 1994வரை நீடித்த பள்ளி ஒலிபரப்பு, இவர் படைப்புத்திற மேம்பாட்டிற்கும் களமாயிற்று. புதிய புதிய உத்திகளில் பாடல், கதை, நாடகம், மொழிப் பாடம், சிறப்பு நிகழ்ச்சிகளென ஆயிரக்கணக்கான படைப்புகளை வழங்கினார். அவ்வொலிபரப்புப் பாடல்களொடு வேறு சில பாடல்களையும் தொகுத்து ‘இளந்தளிர்’ என்ற பெயரில் சிறுவர் கவிதை நூல் ஒன்றனை வெளியிட்டார் (1969). தொடர்ந்து, உமா பதிப்பகத்தின் வழி, இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுவர் படைப்புகளை வெளியிட்டார்.
மலேசியாவில் 1970களின் இறுதியில் தமிழுக்கு முறையான புதிய (பாட) கலைத்திட்டம் உருவாகத் தொடங்கியபோது, அதன் ஆய்விலும் உருவாக்கங்களிலும் தம் பங்கை ஆற்றினார். 1978 முதல் பி. கோவிந்தசாமி முதலாய ஆசிரியர் பலரின் துணையொடு, ‘மாணவர் பண்பாட்டு விழா’வைப் பெரிய அளவில் மாணவர்களைக் கொண்டே நடத்தினார். 18 ஆண்டுகள் தொடர்ந்து கட்டொழுங்கு குன்றாமல் உயர்தரத்தொடு நடந்த அவ்விழா, கல்வித்துறையில் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்திற்று. எண்ணற்ற மாணவர்கள் பண்பட்டு நல்வாழ்வு பெற வழிகாட்டிற்று. தமிழ் நெறி மன்றத்தின் மூலம் 1980 முதல் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு தேர்வெழுதும் மாணவர்க்குத் தொடங்கப்பெற்ற இலவய வகுப்புகள், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் நடந்தது. மேற்கண்ட பணிகளால் ஒரு புதிய தலைமுறை உருவாயிற்று.
கற்பதில் சோர்வு கொள்ளாத இவர், 1987ஆம் ஆண்டு தொடங்கி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் (அஞ்சல் வழி) கற்று இளங்கலை இலக்கியம், முதுகலைப் பட்டங்கள் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து (பணி ஓய்வுக்குப் பின்) முனைவர் பட்டமும் பெற்றார்.
இவர் பத்தாண்டுகளுக்குமேல் முயன்றுழைத்துத் தொகுத்து வெளியிட்ட 1080 பக்கங்களில் மலேசிய, சிங்கப்பூர் தமிழர் வரலாற்றுடன் கூடிய ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1997) மலேசிய, சிங்கப்பூர்ப் பாவலர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய முதல் நூலாகும். அப் பணிக்காகத் தமிழ்நாடு (கலைஞர்) அரசு இவருக்குப் ‘பாவேந்தர்’ விருது வழங்கிப் பெருமை சேர்த்தது (1998). ‘பாப்பாவின் பாவலர்’, ‘தமிழவேள்’, ‘வாழ்நாள் சாதனையாளர்’, ‘முத்தமிழ்அரசு’ போன்ற பல விருதுகள் பெற்றார். தொகுத்தளித்த சிறப்பிற்கும் உரியவர்.
முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டை (8 – 10.6.2018) முன்னின்று தலைமையேற்று நடத்தினார். அம் மாநாட்டில் சிறுவர்களைக் கொண்டே உருவாக்கிப் படைக்கப் பெற்ற கலைவிழா உலகப் பேராளர்களை பெரிதும் கவர்ந்தது.
2021இல் ‘சிறுவர் பாட்டமுதம்’ என்னும் தலைப்பில் மழலையர் வகுப்பு முதல் 6ஆம் வகுப்புவரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நூலை உருவாக்கினார். அது மழலை மலர், குழந்தை மலர், சிறுவர் மலர், கதை மலர், புதிய மலர் என 51 உட் பிரிவுகளைக் கொண்டது; 108 பக்கங்களில் 67 பாடல்களைக் கொண்டது.