ஏழைக்கே உதவ வேண்டும்!
உன்னழுக்கை நீதானே நீக்க வேண்டும்
உள்ளத்தைத் தூய்மையாய்க் காக்க வேண்டும்!
சின்னஞ்சிறு கவலைகளை மறக்க வேண்டும்
சிறுமைக்குணம் கொண்டோரை வெறுக்க வேண்டும்!
இன்முகமாய் இருந்திடவே பழக வேண்டும்
இன்னல்வந் தபோதும்நீ ஏற்க வேண்டும்
தென்னகத்தின் பெருமைகளைப் போற்ற வேண்டும்
தெளிவுடனே பொதுத்தொண்டை ஆற்ற வேண்டும்!
பண்பாடு நாகரிகம் மதிக்க வேண்டும்
பைந்தமிழை நாளும்நீ வளர்க்க வேண்டும்!
உண்மையுடன் வாழ்க்கையிலே உழைக்க வேண்டும்
உரிமைகளை அஞ்சாமல் கேட்க வேண்டும்!
மண்ணுலகை வலம்வந்தே மகிழ வேண்டும்
மாநிலத்தின் வளர்ச்சியிலே கவனம் வேண்டும்!
விண்ணாய்வில் மேன்மேலும் வெல்ல வேண்டும்
வீண்பேச்சு இனபேதம் தவிர்க்க வேண்டும்!
இல்லாத பேர்களுக்கே உதவ வேண்டும்
இயன்றவரை பிறர்க்கீந்து மகிழ வேண்டும்!
சொல்லாமல் நன்மைகளைச் செய்ய வேண்டும்
சோம்பலின்றி நற்பணிக்கே செல்ல வேண்டும்!
நல்லோரை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்
நன்றிகெட்ட பேர்வழியைத் தள்ள வேண்டும்!
எல்லாரும் வாழ்ந்திடவே எண்ண வேண்டும்
ஏழைக்கே உதவிகள், நீ பண்ண வேண்டும்!.
– பாவலர் அழகுநிலவன்,
புதுக்கோட்டை.