பல்லுயிர் : கொலுகோ சறுக்கும் லெமூர் பார்த்ததுண்டா?
இயற்கையில் உருவான ஒவ்வொரு உயிரினமும் வியப்பானவையே! அதிலும் குறிப்பிடும்படியான வேறுபட்ட உடல் தோற்றமும், தகவமைப்புகளும் கொண்டுள்ள விலங்குகள் எப்போதும் தனிக் கவனம் பெறுகின்றன.
மெல்லிய கழுத்து, மெல்லிய உடல் மற்றும் பெரிய கண்களோடு உரோமம் நிறைந்து காணப்படும் உயிரினம். காதுகளுக்குப் பின்னால் தொடங்கி, கழுத்து வரைக்கும், மணிக்கட்டு மற்றும் கணுக்கால் வரை சென்று, அதன் வால் நுனியில் முடிவடையும் வரையிலும் நீண்ட சவ்வோடு, பறப்பதற்கு ஏற்ற தோற்றமும் கொண்டிருந்தாலும் இந்த உயிரினம் பறக்காது. மாறாக இது ஒரு சறுக்கிச் செல்லும் உயிரினம். கற்பனைக்கே எட்டாத உயிரினம் போல் தோன்றுகிறதல்லவா? அது என்ன இப்படி ஓர் உயிரினம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?
அதுதான் “சறுக்கும் லெமூர்” என்று அழைக்கப்படும் கொலுகோ.
இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதா? வாங்க, கொலுகோ பற்றி பல வியப்பான தகவல்களைப் பார்ப்போம்.
சராசரி வீட்டுப் பூனையின் அளவு – அதாவது 35 – 42 செ.மீ. நீளமும், 20 – 25 செ.மீ. அளவில் வாலும் கொண்டுள்ள கொலுகோக்கள் வவ்வால்கள் மற்றும் பூச்சி உண்ணிகளின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொலுகோக்கள் அவற்றின் அடிப்படை வண்ணத்திலேயே பெரிதும் வேறுபடுகின்றன. அவற்றின் முதுகுப்பகுதி பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெளிர் மஞ்சள் புள்ளிகளுடனும், அவற்றின் அடிப்பகுதி பிரகாசமான ஆரஞ்சு, பழுப்பு, சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இவற்றின் கழுத்து நீண்டும் தலை நாய் போன்ற தோற்றத்துடனும் காட்சியளிக்கும். மேலும் மரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை மதிப்பிடுவதற்கு ஏற்ப நல்ல கண் பார்வையும் சீப்பு போல மெல்லிய முனையைக் கொண்ட கூரிய பற்களும் இவற்றுக்கு உள்ளன.
கொலுகோக்களின் பெண் இன வகைகள் ஆண் இன வகைகளை விட உருவத்தில் சற்று பெரியதாக இருக்கின்றன.
தேன் கிளைடர்கள் மற்றும் பறக்கும் அணில் போன்ற – சறுக்கும் திறன் கொண்ட மற்ற பாலூட்டிகளின் வால்கள் சவ்வு இல்லாமல் இருக்கும். இதனால் அவை தங்களது வால்களை பறவைகளைப் போல திசைமாற்றப் பயன் படுத்துகின்றன. ஆனால், கொலுகோக்களின் வால்களின் இருபுறமும் ரோமத்தால் மூடப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் சறுக்கிச்செல்ல முடிகிறது. அதே நேரத்தில் கிளைகளைப் பற்றிப் பிடிக்கக்கூடிய வலுவான நகங்களையும் இவை கொண்டிருக்கின்றன.
கொலுகோக்கள் சைவ உணவு உண்பவை. குறிப்பாக, அவை பல வகையான மரங்களிலிருந்து தளிர்கள், பழங்கள், மொட்டுகள், இளம் விதைகள், காய்கள் மற்றும் பூக்களை உண்கின்றன. மிகவும் சக்திவாய்ந்த நாக்கைப் பயன்படுத்தி கொலுகோக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை இலைகள் மற்றும் மரத்தின் குழிகளிலிருந்து நக்குவதன் மூலம் பெறுகின்றன.
கொலுகோக்களின் இனச்சேர்க்கை ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறுகிறது. இவற்றின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் ஆகும். பிறக்கும் போது, குட்டி கொலுகோவின் மொத்த உடலளவு சுமார் 25 செ.மீ. நீளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிறந்த சிறிது நாள்களுக்குத் தன் குட்டியை வாலுக்குக் கீழே வைத்து, மடித்து பத்திரமாகத் தாங்கிக்கொண்டே பயணம் செய்யுமாம். குட்டி சற்று வளரும் வரை இது தொடருமாம்.
கொலுகோவின் முக்கிய எதிரிகளாகக் கூறப்படுபவை பிலிப்பைன்ஸ் குரங்கு கழுகுகளும் ஆகும். இக்குரங்குகள் மற்ற அனைத்து வகையான உணவுகளையும் தவிர்த்து கொலுகோக்களைச் சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. மனிதர்களும் கொலுகோக்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளனர். ரப்பர் மற்றும் தென்னந்தோப்புகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் கொலுகோக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவற்றை பூச்சிகளாகவே பார்க்கிறார்கள். மேலும், கொலுகோக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. மிக முக்கியமாக, காடழிப்புக் காரணமாக கொலுகோக்களின் வாழ்விடங்கள் தொடர்ந்து சுருங்கி வருகின்றன. எந்த உயிரினமும் அழியும் நிலையில் இல்லை என்றாலும், அவற்றின் வாழ்விடங்கள் மறைந்துவிடுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைகிறது.
பல்லுயிர்களின் உலகமாகத்தான் இப்பூமி விளங்குகிறது. சூழலுக்குப் பொருத்திக்கொள்ளும் உயிரினங்கள்தான் பிழைக்கும் என்றாலும், அவை சுதந்திரமாக வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடங் களையாவது விட்டு வைக்க வேண்டியது மனிதர்களின் கடமையாகிறது.