புகழ் பெற்றிடுவாய்
படுக்கையை விட்டே எழுந்தவுடன் – நீ
பாயைச் சுருட்டி வைத்திடுவாய்!
துடுக்காய் காலைக் கடன் முடிப்பாய் – நீ
துணிவை மனதில் தினம்வளர்ப்பாய்!
வீட்டுப் பாடம் எழுதிடுவாய் – நீ
விரைவாய்ப் பள்ளி கிளம்பிடுவாய்!
நாட்டு நடப்பும் அறிந்திடுவாய் – நீ
நல்லவை யாவும் கற்றிடுவாய்!
பள்ளியில் அன்பாய்ப் பழகிடுவாய் – தமிழ்ப்
பாட்டை இசையாய்ப் பாடிடுவாய்!
கள்வரைக் கண்டால் அஞ்சாதே – கொடுங்
கயமை வஞ்சகம் எண்ணாதே!
அன்னை தந்தை நல்லவர்கள் – உன்மேல்
அன்பு பாசம் கொண்டவர்கள்
என்றும் பள்ளி ஆசான்கள் – பாடம்
இனிதாய்க் கசடறத் தருபவர்கள்!
மூத்தோர் வார்த்தை செவிமடுப்பாய் – எனினும்
முடிவை அறிவால் நீ எடுப்பாய்!
ஈதல் இசைபட வாழ்ந்திட்டால் – நம்மை
ஈன்றோர் வாழ்வில் பெரிதுவப்பார்!
எச்சில் எங்கும் துப்பாதே – நீ
எவரையும் பள்ளியில் ஏசாதே!
இச்செகம் போற்ற வாழ்ந்திடுவாய் – புகழ்
எட்டுத் திக்கும் அளந்திடுவாய்!
– ஆ.ச. மாரியப்பன், புதுக்கோட்டை
பண்ணமைத்துப் பாடி வாட்ஸ் அப் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்! சிறந்த பாடல்கள் பெரியார் பிஞ்சு Youtube-லும் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.