ஏப்ரல் 23 – உலகப் புத்தக நாள்: புத்தகங்கள் படி
அறிவு நூல்கள் படித்ததனால்
அண்ணா அறிஞர் ஆனாரே;
செறிவு நூலால் பெரியாரும்
சீர்தி ருத்தம் செய்தாரே;
பலபுத் தகங்கள் படித்திட்டால்
பகுத்தே அறியும் மனமிங்கே
பலபே ருக்கும் வந்திடுமே;
பழமை மூடம் ஒழிந்திடுமே!
மனித நேயத் தலைவர்தம்
மாண்பை உரைக்கும் புத்தகங்கள்
தனித்து வத்தை உன்நெஞ்சுள்
தமிழ்போல் வளர்த்துச் சிறப்பிக்கும்!
எந்த நூலைப் படித்தாலும்
எதிலும் மெய்யைக் கண்டுணர்ந்து
சொந்த முடிவைக் கொள்ளுதற்காய்ச்
சுயசிந் தனையைக் கொண்டிடுக!
தலைசி றந்த நூல்களெலாம்
தமிழில் உண்டு பலகோடி;
விலையே யற்ற அவற்றை நீ
விரிவாய் வாசித் துயர்ந்திடுக!
பொன்னோ மணியோ நிதியல்ல;
புத்த கங்கள் தாம்செல்வம்;
என்றும் நூலைச் சுவைப்போரை
இந்த உலகம் வணங்கிடுமே!
– கே.பி.பத்மநாபன், கோவை,