சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்!

பச்சை மரங்கள் அழகாகும்
பருவ மழையை அழைத்து வரும்!
இச்சை கொண்ட பறவைகளின்
இருப்பிட மாகத் திகழ்ந்திடுமே!
உண்டு மகிழக் கனிதருமே
உட்கார்ந்தி ருக்க நிழல்தருமே
எண்ணும் இன்பம் வாழ்ந்திடுமே
எட்டுத் திசையும் குளிர்ந்திடுமே!
உணவு சமைக்க விறகாகும்
உன்னத மூச்சுக் காற்றாகும்
கனவு இல்லம் கட்டிடவே
கதவு ஜன்னல் தந்திடுமே!
உன்றன் பெருமை உரைத்திடவே
உலகில் வார்த்தை கிடைக்கலையே!
என்றும் எம்மை வாழ்விக்கும்
இயற்கை வழங்கிய பெருஞ்செல்வம்!
காடுகள் வளர்ப்போம், நலம் காண்போம்
கற்றோர் உரைக்கும் வளங்காண்போம்
கேடுகள் தொலைப்போம் சுகம் காண்போம்
கருத்தாய் நாமும் மரம் வளர்ப்போம்!
– ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை