வரலாறு அறிவோம் : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்
இன்றிலிருந்து 3000 ஆண்டுகளுக்குப் பின்னால் காலப் பயணம் சென்றால், தென் சீனாவின் மூங்கில் காட்டில் வாழ்ந்த பாண்டா கரடிகள் தின்று போட்ட சக்கைகள் காய்ந்த பிறகு அவை இன்று நாம் பயன்படுத்தும் அட்டைத் துண்டுகள் போல் காணப்படவே சீனர்கள் அவற்றைச் சேகரித்து வீட்டின் சுவர்களில் ஒட்டி அதில் எழுதத் தொடங்கியிருப்பதைக் காணலாம்.
அப்படி என்ன எழுதினார்கள்? அவர்கள் கிழக்கில் எந்த விண்மீன் தோன்றினால் மழை வரும், மேற்கில் எந்த விண்மீன் தோன்றினால் குளிர்காலம் துவங்கும், எப்போது விதைப்பது, எப்போது அறுவடைக் காலம், கால்நடைகளை மேய்ச்சலுக்கு எப்போது அழைத்துச் செல்லவேண்டும் என்பன போன்ற குறிப்புகளை எழுதத் துவங்கினர்.
ஆம், இதுவரை ஒவ்வொரு முறையும் விவசாயத்தில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் அறிவுரைகளைக் காதால்கேட்டு வாய்வழித் தொடர்பு மட்டுமே கொண்டிருந்த மக்கள், அவர்கள் கூறியதை அட்டையில் எழுதி வைக்கத் தொடங்கினர்.
அப்படி எழுதப்பட்ட ஒரு துண்டு அட்டையை ஆமை ஓட்டில் ஒட்டி, எந்தச் சிதிலமும் அடையாமல் சுமார் 3000 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்பது மிகவும் வியப்பான ஒன்று.
பாண்டாக்கள் சவைத்துப்போட்ட மூங்கில் சக்கையிலிருந்து அட்டை எடுக்கும் போது நாமே ஏன் அப்படிச் செய்யக்கூடாது என்ற சிந்தனையின் விளைவு தான் இன்று நாம் பயன்படுத்தும் காகிதம்.
முதன்முதலில் அட்டையில் சீனர்கள் எழுதத் துவங்கிய சில நூறு ஆண்டுகளிலேயே எருமைகள் பூட்டிய அரவைக் கருவிகளை இயக்கி மூங்கில் கூழ் உருவாக்கி அதனை அட்டைபோல் தட்டையாக்கிக் காய வைத்தனர்.
இப்போது பெரிய பெரிய காகிதங்கள் பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. காகிதத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்ட சீனர்கள், அவற்றை இன்று நாம் எழுதும் பல்வேறு வகையிலான குறிப்பேடுகளின் வடிவில் வெட்டி, தோல் மற்றும் அட்டைகளால் பைண்டிங் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
சீனர்களின் அதிகமான காகிதப் பயன்பாடு விவசாயம், கணிதம், வானியல் மற்றும் மருத்துவம் தொடர்பாகத்தான் இருந்தது.
இதற்கு முக்கியக் காரணம் விளைபொருளைச் சந்தைப்படுத்தக் கணிதம் தேவைப்பட்டது, வானியல் விவசாயத்திற்குத் தேவையான கால நிலை மாற்றத்தைக் கணித்தது. இவை அனைத்தையும் செய்ய உடல் நலம் பேணுவதற்கு மருத்துவம் மனிதருக்கும் கால்நடைக்கும் தேவைப்பட்டது.
அவர்களின் அரிய கண்டுபிடிப்பான காகிதத்தை மூடநம்பிக்கைக் கதைக்கும், கடவுள் கதைகளுக்கும் தொடர்புபடுத்தவில்லை.
இந்த நிலையில் காகிதங்களின் பயன்பாடு சீனம் முழுவதும் பரவத் துவங்கியது. அங்கு பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு பார்க்காமல் காகிதம் அனைவரின் கைகளுக்கும் எளிதில் சென்றது.
இதன் விளைவாக வெகு விரைவாகவே தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான பொருளாகக் காகிதத்தைச் சீனர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
(தொடரும்)