நினைவில் நிறுத்துவோம் : ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக எண்ணாதீர்!
உலகில் பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கும், உள்ளூரில், குடும்பத்தில் சிக்கல் எழுவதற்கும் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதும், அதன் வழி நம்மைத் தாழ்வாக எண்ணுவதும் காரணமாக அமைந்து விடுகிறது.
அந்த நாடு வல்லரசாக இருக்கிறதே! அவர்களைக் கண்டு பல நாடுகள் அஞ்சுகின்றனவே! நாமும் அப்படி வர வேண்டும் என்ற வேட்கையே நாடுகளுக்கிடையேயான மோதலுக்குப் பெருங்காரணம். அதுவே, உலக அமைதியைக் குலைக்கிறது; அழிவையும் ஏற்படுத்துகிறது.
இப்படி ஒப்பிட்டு வெறிகொள்வதற்கு, வேகம் கொள்வதற்கு, முயற்சி செய்வதற்கு மாறாக, நம் நாட்டுக்கு என்ன தேவை நம் நாடு எதில் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும்? நம் நாட்டில் என்ன வளங்கள் சிறப்பாகவுள்ளன? அவ்வளங்களை எப்படிப் பயன்படுத்தி நாம் எப்படி உயர வேண்டும்? வேலை வாய்ப்பை, வருவாயைப் பெருக்க வேண்டும்? நாம் புதிதாக என்ன கண்டுபிடிக்க வேண்டும்? நம்மை எதிர் நோக்கியுள்ள சிக்கல்கள் என்ன? அதற்கு எப்படி தீர்வு காண்பது? மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது என்பதன் அடிப்படையில் சிந்தித்து, திட்டமிட்டு முயன்றால் நாடும் முன்னேறும். அந்த நாட்டிற்கு பிற நாட்டால் அல்லது நாடுகளால் பாதிப்பும் இருக்காது; நாடும் பாதுகாப்பாக இருக்கும்.
அப்படித்தான் ஒரு வீடாக இருந்தாலும், ஒரு தனி மனிதனாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும்; திட்டமிட வேண்டும்; முயற்சிக்க வேண்டும். மாறாக, அடுத்தவர்களோடு ஒப்பிட்டு நம்மைத் தாழ்வாக எண்ணுவதோ, கவலைப்படுவதோ முயற்சி செய்யாமல் இருப்பதோ கூடாது.
மதிப்பெண் ஒப்பீடு:
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒருவர் 100 மதிப்பெண் பெற்றிருப்பார்; இன்னொருவர் 99 மதிப்பெண் பெற்றிருப்பார்; மற்றொருவர் 98 மதிப்பெண் பெற்றிருப்பார். இந்த மூவரும் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, கவலையோ மகிழ்ச்சியோ, பெருமையோ, தாழ்வோ கொள்வர். அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் பெற்றோரும் இதை ஒரு கவுரவப் பிரச்சினையாக எண்ணிக் கொண்டு கவலைப்படுவர், கண்டிப்பர்.
இது மிகப்பெரிய அறியாமை. அடுத்த மாணவர் என்ன மதிப்பெண் பெற்றால் நமக்கென்ன? நாம் மேற்படிப்புக்குச் செல்ல, வேலை வாய்ப்பைப் பெற நமக்குத் தேவையான மதிப்பெண் இருக்கிறதா? நாம் பெற்ற மதிப்பெண் போதுமா? இன்னும் கூடுதல் முயற்சியெடுத்து அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? என்று சிந்தித்து, திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
10ஆம் வகுப்பில் சிறப்பாகப் படித்த மாணவன், 12ஆம் வகுப்பில் சிறப்பாகப் படிக்காமல் போகலாம். 12ஆம் வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவன் கல்லூரியில் படிக்கும் போது சிறப்பாகச் சாதிக்கலாம். எனவே, உடன் படிக்கும் மாணவனோடு நம்மை ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்வது தேவையற்றது; அர்த்தமற்றது.
மதிப்பெண் மட்டும் தகுதியல்ல!
படிப்பில் பெறும் மதிப்பெண் மட்டும் ஒருவரின் வாழ்வின் உயர்வைத் தீர்மானித்து விடாது. பொது அறிவு, ஆளுமைத் திறன், சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல், நுட்பமாக முடிவெடுத்தல், பேச்சாற்றல், அணுகுமுறை, பிறரைக் கவரும் திறன் என்று பல காரணிகள் உள்ளன. ஒருவர் படிப்பில் சற்றுக் குறைவான மதிப்பெண் பெற்றால், அதனால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்படுவதில்லை; மதிப்பெண் என்பது ஒருவரின் நினைவாற்றலுக்கான ஒரு மதிப்பீடு மட்டுமே! எனவே, ஒருவரின் அறிவாற்றலை, நுண்ணறிவை, புரிதலை, தெளிதலை அது மதிப்பிடுவதாகக் கொள்ள முடியாது; கொள்வது சரியல்ல.
எனவே, மதிப்பெண் சற்று குறைவதால் அவர்கள் அறிவில், ஆற்றலில், ஆளுமையில் குறைந்தவர்கள் அல்ல. இந்த உண்மைகளை ஒவ்வொரு மாணவரும் ஆழமாகக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாய், சாதனையாளர்களாய், வல்லுநர்களாய், ஆளுமையாளர்களாய், சிறந்த நிர்வாகிகளாய், ஆற்றலாளர்களாய் வந்தவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் தாம்!
தலை சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், ஆய்வறிஞர்கள் எல்லாம் சராசரி மதிப்பெண் பெற்றவர்களாய் இருந்தவர்கள்தாம்! நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் எதிர்காலத்தில் சாதித்தவர்கள் இல்லை என்பதை நடைமுறையில் நாம் அறியலாம்.பாடங்களை அய்யத்திற்கு இடமின்றிக் கற்றலும், கற்றவற்றை நன்கு புரிந்து கொள்ளுதலும், அதை நடைமுறை வாழ்வில் சாதித்துக் காட்ட எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடுவதுமே ஒரு மாணவரை வாழ்வில் உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்; சாதனை படைக்கவும் செய்யும் என்பதை மாணவர்கள் ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
திறன் வளர்த்தல்
மதிப்பெண் அதிகம் பெற்றவர்களெல்லாம், எதிர்காலத்தில் திறன் உடையவர்களாய் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, உயர் மதிப்பெண் பெற்று, மருத்துவம் பயின்று, மருத்துவர் ஆனவர்கள் சிறந்த மாணவராகச் சாதிப்பதில்லை. எந்த மருத்துவர் தன் ஆற்றலை மருத்துவத் துறையில் வளர்த்துக் கொள்கிறாரோ அவரே சாதிக்கின்றார். பி.ஆர்.முருகேசன் என்ற என்னுடைய மாணவர் மேல்நிலை வகுப்பில் சராசரி மதிப்பெண் பெற்று மருத்துவம் படித்தவர் (அப்போது நீட் தேர்வு இல்லை). அவருடைய பெற்றோர் படிக்காதவர்கள். ஏழைக் குடும்பம். கிராமப்புறப் பள்ளியில்தான் படித்தார். அவர் மருத்துவத்தைத் திறமையாகக் கற்று, இதய அறுவை சிகிச்சை மருத்துவராகி தற்போது 2000 இதய அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டே படித்து, இடையிலே கல்வி தடைபட்டு, அதன்பின் ஊரார் உதவியுடன் மருத்துவம் படித்து, இன்று குடல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் உலக அளவில் சாதனை படைத்து வருகிறார். உலக அளவில் சிறந்த வல்லுநராக அறியப்படுகிறார்.
மற்றவரோடு உங்களை ஒப்பிட வேண்டாம்!
உருவம், நிறம், ஏழ்மை, ஊனம் என்று எந்த ஒன்றையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு, உங்களைத் தாழ்ந்தவராக எண்ணக் கூடாது. இயற்கையில் நாம் எந்தக் குறைவுடன் இருந்தாலும், நம் முயற்சியால் அதைப் புறங்கண்டு சாதிக்க முடியும். அப்துல்கலாம், அவர்கள் அப்படிச் சாதித்தவர்தான்! அறிவியல் சாதனையாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் அனைத்து உறுப்புகளும் செயலிழந்த பின்னும் உலகம் வியக்கும் விஞ்ஞானியாய்ச் சாதனை படைத்ததை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும். அதன் மூலம், தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, ஊக்கம் பெற்றுச் சாதிக்க வேண்டும்!