நினைவில் நிறுத்துவோம்:இளம் வயதிலேயே இலக்குடன் செயல்படுங்கள்
வாழ்க்கையென்பது உண்ணுவது, உறங்குவது, ஊர் சுற்றுவது என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது. அது உயரிய குறிக்கோள்களை உடையதாய் இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோள்கள் இளம் வயதிலிருந்தே இருக்க வேண்டும்.
இளமையில் கல்:
நம் பெரியோர் ‘இளமையில் கல்’ என்றனர். கல்விதான் ஒருவர் வாழ்வின் அடித்தளம். இக்கல்வி நம் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மறுக்கப்பட்டது. கல்வி ஒரு சில உயர் ஜாதியினருக்கு மட்டுமே உரியது என்று உரிமை கொண்டாடப்பட்டது. 95% மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்குத் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் பெரும் போராட்டங்களால், முயற்சிகளால் அனைவரும் கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளம் வயதிலே கற்பதையே பிஞ்சுகள் தங்களின் முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும்.
அய்ந்தாம் வகுப்பு வரை கற்றல், உடல் நலம் பெற விளையாடுதல், நல்ல அறிவுரைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றி நடத்தல் வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, படிப்போடு, தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கலைத்திறன், விளையாட்டுத் திறன், ஆய்வுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புக் கிடைக்கும்போது, விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பெற வேண்டும். பொது அறிவை அதிக அளவில் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
தன்னம்பிக்கை வேண்டும்:
நம் வாழ்வின் இலக்குகளை அடைய, சாதிக்க, முதலில் ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை ஆழமாக, உறுதியாக உள்ளத்தில் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கைக்கு எதிரானது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை என்பது காரணமின்றி ஆதாரமின்றி எதையும் நம்புவது.
“நம்மைக் கடவுள் படைத்தார்” என்றும், “நம் வாழ்வில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கடவுளே தீர்மானித்து நம் விதியை எழுதியுள்ளார்” என்றும், “அந்த விதிப்படியே நம் வாழ்வு அமையும்” என்பன போன்ற நம்பிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இப்படிப்பட்ட கருத்துகளை ஆராயாமல், உறுதி செய்யாமல் அப்படியே உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதும், தாயத்தும், தகடும் கட்டினால் சக்தி வரும், நன்மை, உயர்வு வரும் என்பதும், பிரார்த்தனையும் வேண்டுதலும் நமக்கு வெற்றியைத் தரும் என்று நம்புவதும் மூடநம்பிக்கைகளே!
இந்த நம்பிக்கைகள் வந்தால், நம் கையில் எதுவும் இல்லை. எல்லாம் கடவுள் விதித்த விதி என்ற எண்ணம் வரும். இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் வந்தால் தன்னம்பிக்கைகள் தகர்ந்து போகும்.
எனவே, நம் அறிவு, திறமை, உழைப்பு, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் துணை, வழிகாட்டல் போன்றவைதான் நம் வாழ்வையும் சாதனைகளையும் தீர்மானிக்கின்றன என்பதை உள்ளத்தில் உறுதியாய்ப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் கடவுளுக்கோ விதிக்கோ எந்த தொடர்பும் இல்லை. கடவுளும் இல்லை, விதியும் இல்லை என்பதை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தெளிவுடன் உள்ள உறுதியுடன், திட்டமிட்டு உழைத்தால் நாம் நம் இலக்கை எட்ட முடியும், சாதிக்க முடியும். மேல்நிலைக் கல்வி பயிலும் போது உயர் கல்வியில் நாம் எந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதை உறுதியாய் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உயர்கல்வியும் உயர் இலக்கும்:
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி அல்லது உயர்கல்வியில் ஒரு துறையைத் தேர்வு செய்த பின், அத்துறையில் ஆழ்ந்த புலமையும், ஆய்வுத் திறனும் கொண்டிருத்தல் வேண்டும். ஏன்? எதற்கு? எப்படி? என்று ஒவ்வொன்றுக்கும் வினா எழுப்பி விடைகாண வேண்டும், படிக்கும் உயர்கல்வியை இந்த உலக முன்னேற்றத்திற்கும் நலத்திற்கும் எப்படி பயன்படச் செய்யலாம் என்று முயன்று, அதைச் செயல்படுத்த வேண்டும். நீங்கள் தேர்வு செய்த துறையில் சாதனைகள் பல புரியும் அளவிற்கு உயர்கல்வியை நீங்கள் கற்க வேண்டும்.
உயர்கல்வியைக் கற்கும் போதே உங்களை உலகம் அடையாளம் காணும் அளவிற்கு படிப்போடு ஒரு கூடுதல் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்பியல் (Physics) படித்தவர். ஆனால், அவர் படைத்த “மனோன்மணியம்” என்ற காவியந்தான் அவரை உலகறியச் செய்தது. இன்றும் என்றும் அவர் புகழ் நிலைக்கக் காரணமாயிற்று. எனவே, ஒவ்வொருவரும் உயர் கல்வி பயிலும் போதே கல்வியோடு தனித்திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிழைப்பிற்கு மட்டும் கல்வியல்ல
படிப்பு என்பது வேலை பெறவும், வருவாய் ஈட்டவும், அதை வைத்து வளமான வசதியான வாழ்வை அமைத்துக் கொள்வதற்காகவும் மட்டுமே என்று எண்ணக் கூடாது. அது சுய நல வட்டத்தில் உங்களைச் சுருக்கிவிடும். எனவே, பொதுநலம், உலகநலம், உடன் வாழ்வோர் நலம் என்று இவற்றையும் கருத்தில் கொண்டு அதற்காகப் பாடுபட வேண்டும். மனித வாழ்வு என்பது மற்றவர்களை, வாழ்விப்பதேயாகும். “வாழ்வித்து வாழ்வோம்” என்பதே சரியான மானுட இலக்காக இருக்க முடியும். பிறரையும் வாழச்செய்து நாமும் வாழ வேண்டும் என்பதே அதன் பொருள். அதற்கு உலகை, மனிதர்களை, மற்ற உயிரினங்களை நேசிக்க வேண்டும். அந்த நேசம் இந்த இலக்கை அடையச் செய்யும்.
ஆதிக்க எதிர்ப்பும் சமத்துவ ஏற்பும்:
மனிதனை மனிதன் அடிமைப்படுத்துதல், அடக்கி ஆளுதல், உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது என்பதில் தெளிவாய், உறுதியாய் இருத்தல் வேண்டும்.
பிறப்பால் பேதம் காட்டுதல் என்பது ஒரு கொடிய செயல் என்பதை பிஞ்சுப் பருவத்திலிருந்தே உள்ளத்தில் கொள்ள வேண்டும். ஆண் உயர்ந்தவன் என்றும், பெண் தாழ்ந்தவள் என்றும் பிறப்பால் உயர்வு தாழ்வு கொள்வதோ, ஜாதியால், வர்ணத்தால் உயர்வு தாழ்வு கொள்வதோ, இந்த உயர்வு தாழ்வு அடிப்படையில் உரிமை மறுக்கப்படவோ கூடாது என்ற மனிதநேய எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். அப்படி யார் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
படிக்கும் காலத்தில் இந்த வேற்றுமை உணர்வுகள் ஊட்டப்பட்டால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். சில ஆசிரியர்கள் அப்படி தப்பாக உணர்வு ஊட்டியபோது சில மாணவர்கள் அதை எதிர்த்துப் பேசினர். அப்படிப்பட்ட மாணவர்களை நாடே பாராட்டியது. இப்படிப்பட்ட துணிவும், தியாக உணர்வும் பிஞ்சுகள் உள்ளத்தில் கொள்ள வேண்டியது கட்டாயம். அத்தோடு அஞ்சாது நியாயத்தைப் பேச வேண்டும்.
திசை மாறக்கூடாது:
பள்ளிப் பருவத்திலும் சரி, கல்லூரிக் காலத்திலும் சரி, உங்களைத் தப்பான வழியில் கொண்டு செலுத்த சிலர் முயல்வர். அவர்கள் உடன்படிப்பவர்களாகவோ, உற்றார் உறவினர்களாகவோ, சுற்றியுள்ளவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை உருவாக்குபவர்களாகவும், உடலுக்குக் கேடான உணவுப் பழக்கத்திற்கு இட்டுச் செல்பவர்களாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடியவர்களாவும் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட சூழலில், உள்ள உறுதியுடன் அவற்றைத் தவிர்த்து அவர்களிடமிருந்து விலகி வந்து, நீங்கள் நல் வழியில் நடக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அவர்கள் செயல்பட்டால் உரியவர்களிடம், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். திறமை மிக்க பல மாணவர்கள் இது போன்ற தீய பழக்கங்களால் திசை மாறி சீரழிந்த நிகழ்வுகள் பலவுள்ளன. எனவே, அது போன்றவர்களின் வாழ்வைப் படமாகக் கொண்டு, தங்களைத் தற்காத்து, சரியான, ஒழுக்கமான வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
விடா முயற்சி:
தங்கள் இலக்கை அடைய விடாமுயற்சி கட்டாயமாகும். தொடக்கத்தில் ஆர்வத்தோடு இருந்துவிட்டு, பின்னர் ஆர்வம் குறைந்து செயல்களைத் தள்ளிப் போடும் போக்கை அறவே தவிர்க்க வேண்டும். இலக்கு நிறைவேறும் வரை தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இலக்கை எட்ட முடியும். சரியாகத் திட்டமிடுதலும் இலக்கை அடைவதில் முக்கியம். எப்படி, எவ்வளவு நேரம், எங்கு என்பன போன்ற பலவற்றைச் சரியாகத் திட்டமிட்டு அதன்படி தங்கள் செயல்களைச் செய்ய வேண்டும்.
பொது அறிவு:
நாளேடுகள், இதழ்கள், உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறு இவற்றைப் படிப்பதோடு, நாடு, உலகு பற்றிய பொது அறிவையும் நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அறிவு போட்டித் தேர்வுகளுக்குப் பெரிதும் பயன்படும்.
கவனச் சிதைவு கூடாது:
விடாமுயற்சியைப் போலவே கவனச் சிதைவின்றி உங்கள் செயலில் ஈடுபடுவதும் கட்டாயமாகும். கேடானவை எப்போதும் இன்பம் தருவதாயும், கவர்ச்சியாகவும் இருக்கும். எனவே, அந்த நாட்டத்தில் அவற்றை நோக்கித் தங்கள் கவனத்தைத் திசை திருப்பினால், இலக்கு நோக்கிய உங்கள் முயற்சி திசை திரும்பிவிடும். எனவே, தீய செயல்களில் தோன்றும் விருப்பம் கூட, இலக்கு நோக்கிய முயற்சியைப் பாதிக்கும்.
எனவே, பிஞ்சுகள் இளம் வயதிலேயே இலக்கை நிர்ணயித்து அது நோக்கி தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வாழ்வில் உயர வேண்டும்; மக்களுக்குப் பயன்பட வேண்டும்.