சிறுவர் கதை: எலி மேல உட்கார முடியுமா?
மு ழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள். பள்ளிக்கு செல்ல வேண்டியது இல்லை. எனவே சற்று கால தாமதமாகவே எழுந்தான் குமரன். எழுந்ததும் அவன் அன்றாட வேலைகளில் ஒன்று அவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில், கிடைத்த இடத்தில் அவன் வைத்துப் பராமரிக்கும் தொட்டிச் செடிகள். ஒவ்வொரு நாளும் எத்தனைப் புதிய இலைகள் முளைத்திருக்கின்றன என்று கூட சொல்லுவான் குமரன். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவாறே அவற்றோடு உரையாடுவான். பூக்களைச் செடியிலேயே வைத்து அழகு பார்ப்பான்.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய பின்பு அம்மாவிற்கு வீட்டைச் சுத்தம் செய்வது, சமைப்பதற்குக் காய்கறிகளைக் கழுவிக் கொடுப்பது, விளையாட்டுச் சாமான்களை எடுத்த இடத்தில் அடுக்கி வைப்பது, அப்பாவின் இருசக்கர வாகனத்தை அப்பாவுடன் சேர்ந்து கழுவுவது போன்ற சிறு சிறு உதவிகளை செய்துவிட்டுத் தொலைக்காட்சியைச் சிறிது நேரம் பார்ப்பதற்காக உட்கார்ந்தான்.
விடுமுறை நாட்களுக்கென்றே இந்தத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் ஒரே மாதிரியாக சொல்லிவைத்தாற் போல விநாயகர் கதைகளை ஒளிபரப்பிக் கொண்டு இருந்தன. குமரனுக்கு ஏற்கனவே அவன் நண்பன் அந்த கார்ட்டூனைப் பார்த்து விட்டு வகுப்பில் கதை சொன்னது நினைவு வந்தது. குமரனுக்கு அவன் நண்பர்கள் இதுபோன்ற நம்ப முடியாத கதைகளைச் சொன்னாலே “க்ளுக்” என்று சிரித்து விடுவான். “அது எப்படி நடக்கும்? இதே இதெல்லாம் சும்மா புருடா டா….கேக்க யாரும் இல்லனு கத விடாத டா, நம்புற மாதிரி எதாவது சொல்லு” என்பான்.
அன்று வீட்டிலும் அந்தக் கார்டூனை பார்த்துச் சந்தேகங்கள் வரவே… அப்படியே தொலைக்காட்சியை அணைத்து விட்டு அம்மாவைத் தேடினான். தனது வேலைகளை முடித்துவிட்டு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்.
“அம்மா…”
“என்னமா குமரா சொல்லு!”
“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்… என் பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு கதைய நம்புறாங்க. ஆனா எனக்கு அதுல ஒரு சந்தேகம் இருக்கு.
“என்ன சந்தேகம்? சொல்லு கேப்போம்”
“ஒரு பெரிய ஆளு எப்படிம்மா ஒரு சின்ன எலி மேல உக்கார முடியும்?”
“குமரா நீ என்ன கேக்குறேனு அம்மாக்குப் புரியுது. ஒரு சின்ன எலி மேல ஒரு கடவுள் ஏறி உட்கார்ந்து இருக்கிற மாதிரி சொல்லுறாங்களே அது தான உன் சந்தேகம்.”
“ஆமா மா..”
“நல்ல கேள்வி.. இப்போவாது கேக்கணும் னு தோணுச்சே!”
“முதல் ல அது ஒரு கட்டுக்கதை குமரா! அதை நீ புரிஞ்சுக்கணும்!”
“கதைகள் – ல இளவரசனாக மாறும் தவளையும், பேசும் நரியும் எப்படியோ அப்படித் தான் இந்தக் கதையும்!” குமரனுக்கு அம்மா எலி வாகனத்தின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இந்த உலகத்துல மனிதர்கள் முதல்ல இந்த மாதிரி ஃபேமிலி, ஃபேமிலி – லாம் இல்ல. கூட்டம் கூட்டமா, ஆறு, நதி, அருவி – னு எங்கெல்லாம் நீர் நிலைகள் இருந்ததோ அங்கெல்லாம் குழுக்களா வாழ்ந்தாங்க. நீர்நிலைகள் பக்கத்துல இருந்ததால விவசாயம் செய்றதெல்லாம் கண்டு பிடிச்சாங்க. விவசாயம் கண்டுபிடிக்கிறதுக்குலாம் முன்னால, வேட்டையாடி தான் அவங்களுக்குத் தேவையான உணவைக் கொண்டு வந்தாங்க. நீ கூட சோஷியல் – ல படிப்பியே ஸ்டோன் ஏஜ், மெட்டல் ஏஜ் னு, அதெல்லாம் அப்போ தான் வந்துச்சு, கற்களைக் கொண்டு வேட்டைக் கருவி, மெட்டல் வச்சு கருவி எல்லாம் செஞ்சது அப்போ தான். சாப்பாட்டுக்கு விலங்குகளை வேட்டையாடுறதுக்கு கல்லை எடுத்து கூர்மையான ஈட்டிய செஞ்சு வச்சிருப்பாங்க. ஒவ்வொரு குழுவும் அவங்களுக்குனு ஏதாவது ஒரு அடையாளம் வச்சிருப்பாங்க.”
“சரிம்மா….அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க?”
“இருக்கு டா, அதான் ஒன்னொன்னா சொல்லிட்டே வரேன்… இதெல்லாம் சொன்னாதான உனக்கு முழு கதையும் புரியும்…”
“சரிம்மா சொல்லுஙங்க.”
“ஒரு குழு அடையாளமா, புலியை வச்சிருக்கலாம், ஒரு குழு யானை வச்சிருக்கலாம், எலி வச்சிருக்கலாம். இந்த டைம் – ல கூட்டம் கூட்டமா வாழுற மக்கள் தங்களோட கூட்டத்தைப் பாதுகாக்கவும், விரிவாக்கவும் வேற வேற இடங்கள் – ல உள்ள கூட்டங்களைப் போய்த் தாக்குவாங்க, அந்தக் கூட்டத்தோட ஆட்களை தன் கூட்டத்தோட சேர்த்துக் கிட்டுப் பெரிய குழுவா வாழுவாங்க, இல்ல அடிமை ஆகிப்பாங்க. எப்படி ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டைப் போரிட்டு தன் வசம் ஆக்குவாங்களோ அதே மாதிரி தான், அந்த ஆதிகாலத்துலயும் ஒரு குழு மக்கள் இன்னொரு குழுவோட சண்டைப் போட்டு தன்னோட சேர்த்துக்கும். இப்படி இரண்டு குழுக்கள் சண்டை போடுறாங்கள்ல, அந்த இரண்டு குழுவுக்கும் தனி தனி விலங்கு குறியீடு இருக்கும்.
இப்போ எந்த குழு அந்த சண்டையில் ஜெயிக்குதோ, அந்த குழுவோட விலங்கு தோற்கடிக்கப்பட்ட குழுவோட விலங்குக்கு லீடர் மாதிரி.
இப்போ புரியுதா?
சோ, முன்னால ஆதி காலத்துல, இப்படி எலியையும், யானையையும், தனக்கான விலங்கு குறியீடா வச்சிருந்த இரண்டு குழு சண்டை போட்டிருப்பாங்க. யானைக் குழு ஜெயிருச்சுப்பாங்க, எலிக் குழு தோத்துருப்பாங்க அதனால யானை எலியோட லீடர் ஆயிருக்கும், அப்புறம் இந்த பழைய கதை காலம் காலமா மாற்றம் அடைந்து இப்போ நீங்க இப்படி கார்ட்டூன் பாக்குறீங்க! யானைத் தலையை மனுஷனுக்கு வச்சு, கடவுளாக்கி அவருக்கு எலியையும் வாகனம் னு சொல்லி வச்சிருக்காங்க.”
“ஓகோ…. இப்போ புரியுது மா நல்லா…”
ஸ்கூல் தொறந்ததும் முதல்ல இந்த கதையை என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்ல போறேன் மா…
அவங்களாம் இது உண்மை னு நினைச்சுட்டு இருக்காங்க.”
அம்மாவின் விளக்கம் குமரனுக்கு நன்றாக புரிந்துவிட்டது,
விடுமுறை முடிந்து முதல் வேலையாக இந்தப் பார்வையைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதாக அம்மாவிடம் சொன்னான் குமரன்.