பெண்ணுக்கு உரிமை பெற்றுத் தந்தவர்!

சின்னப் பெண்நான் பள்ளியிலே
சிறப்பாய்ப் படித்து வருகின்றேன்!
இன்னும் பெரிய படிப்பெல்லாம்
இனிமேல் படிப்பேன் உயர்வேனே!
என்றன் தாத்தா படிக்கவில்லை
என்பாட் டிக்கும் படிப்பில்லை
என்அப் பாவும் அம்மாவும்
ஏதோ கொஞ்சம் படித்துள்ளார்!
என்ன காரணம் தெரியுமா?
அன்றைய நிலைமை அப்படியாம்!
“பெண்கள் படிக்கக் கூடாது
பெரிய பாவம் அதுவாகும்”
என்று சொல்லி வைத்திருந்தார்
ஏமாந் தார்கள் முன்னோர்கள்!
இன்று பெண்களைப் “படிக்காதே”
என்று சொல்ல எவருள்ளார்?
கொஞ்சம் படித்தால் போதுமென்றும்
குறுக்கே யாரும் நிற்பதில்லை
அஞ்சி நடுங்கத் தேவையில்லை
ஆணும் பெண்ணும் சமமாமே!
பெண்கள் இந்த உரிமையினைப் பெற்றது யாரால் தெரியுமா?
இந்த உலகே மதிக்கின்ற
எங்கள் பெரியார் அவரால்தான்!
ஆணாய்ப் பிறந்த பெரியார்தான்
அத்தகை யோரை அடக்கிடவே
தானாய் வந்து போராடித்
தழைக்கச் செய்தார் பெண்ணினத்தை!
நன்றி யோடு பெரியாரை
நாமெல் லாரும் நினைத்திடுவோம்!
என்றும் தந்தை பெரியாரை
இனிதே ஏற்றுப் போற்றிடுவோம்!
– முனைவர் முரசு நெடுமாறன்