சிறார் கதை: ஈயும் எறும்புகளும்

எப்போதும் வரிசையாகச் செல்கிறார்களே? இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே” மனதுக்குள் பேசிக் கொண்டது ஈ. சிதறியிருந்த உணவுப் பொருளைப் பொறுக்கி உண்ண ஆரம்பித்தன எறும்புகள்.
‘காதின் அருகே செல்வோம். ஈ… என கத்துவோம். இரைச்சல் தாங்காமல் ஓடுவார்கள்’ என தனக்குள்ளே மீண்டும் பேசிக் கொண்டது ஈ.
வரிசையாகச் சென்ற எறும்புகளின் அருகில் சென்றது. “ஈ…ஈ…” என கத்தியது.
இரைச்சல் தாங்காமல் காதைப் பொத்திக் கொண்டன எறும்புகள். அப்போதும் வரிசையாகச் சென்றன.
“என்ன இது? இவ்வளவு கத்தியும் இவை வரிசையாகவே செல்கின்றன” தலையில் கை வைத்துக் கொண்டே அங்குமிங்கும் அலைந்தது ஈ.
என்ன செய்யலாம்? என்று யோசித்தது.
வரிசையாகச் செல்லும் எறும்களின் வழியில் நின்றது ஈ. எறும்புகள் ஈ நின்றன. அங்குமிங்கும் அலைந்தது. ஈ போகட்டும் என வழியை விட்டன எறும்புகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஊர ஆரம்பித்தன.
“என்ன செய்தும் எறும்புகள் கலையவே இல்லையே?” மீண்டும் யோசித்தது ஈ.
ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் இருந்தது. ஈ தனது மொத்த ஆற்றலையும் ஒருசேர வைத்து. கோப்பையை இழுத்து வந்தது. எறும்புகளின் அருகே வந்தும், கோப்பையைக் கவிழ்த்தது.
“திடீரென வெள்ளம் வந்துவிட்டதே!” அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடின எறும்புகள். வெள்ளத்தைத் தாண்டின. மீண்டும் வரிசையாகச் சென்றன.
“அட! மீண்டும் வரிசையாகச் செல்கிறார்களே!” என்ன செய்யலாம்?” ஆழ்ந்து யோசித்தது ஈ. நீண்ட நேரம் யோசித்தது.
அப்போது திடீரென வேகமாகத் தன் தலையை நோக்கி ஏதோ விழுவதை உணர்ந்தது. ஈயை அடிக்க ஒரு கை வந்தது.
“அய்யோ! இன்று அவ்வளவு தான். நம் கதை முடிந்தது” என நினைப்பதற்குள் கை நின்றது.
“ஆ… ஆ…” என்று கத்தினான் மனிதன்.
“அய்யோ! எறும்பு கடித்து விட்டதே!” அலறினான்.
“ஆகா! பிழைத்தோம்!” என்று சொல்லி பறந்தது ஈ.
“நாம் எவ்வளவு தீயது செய்தோம். ஆனாலும் நமக்கு நன்மை செய்தன இந்த எறும்புகள். ஆபத்தான காலத்தில் என் உயிரைக் காப்பாற்றியன. இனி அவற்றின் முகத்தில் எப்படி முழிப்பேன்” ஈ மனம் வருந்தியது.
எறும்புகள் தேநீர்க் கோப்பையில் இனிப்பைக் கொஞ்சம் ஈ க்கு மிச்சம் வைத்தன.
மீண்டும் வரிசையாகச் செல்ல ஆரம்பித்தன.
இனிப்பைச் சுவைத்தது ஈ. பின்பு அவர்களுக்காக “ஈ… ஈ…” என ரீங்காரமிட்டு அழகாக பாட்டுப் பாடியது.<