சிறார் பாடல்: வாடும் வானம்

சிங்கம், புலி யானை எல்லாம் வனத்தில் வாழுது
சிங்கார வனத்தில் வாழுது!
ஒற்றுமையாய் ஓரிடத்தில் தனித்து வாழுது
ஓரினமாய்த் தனித்து வாழுது!
குட்டிபோட்டுத் தன்இனத்தைப் பெருக்கிக் கொள்ளுது
குறைவின்றிப் பெருக்கிக்கொள்ளுது!
காட்டையெல்லாம் சுயநலத்தில் மனிதர் அழிக்கவே
நாட்டுக்குள்ளே கோபத்துடன் வீட்டை அழிக்குது!
அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகுது
காட்டில் அழிந்து வருகுது!
அதைத் தடுக்க சரணாலயம் இயங்கி வருகுது
சரணாலயம் இயங்கி வருகுது!

இயற்கையோடு வாழும் அதை மறக்கக்கூடாது
இனிமேலும் மனிதயினம் மறக்கக்கூடாது
சுற்றுச்சூழல் நலமாக காடுகள் வேண்டும்
சூழலையே உறவாக்கி வாழ்ந்திட வேண்டும்
காட்டு வளமே நாட்டு வளம் அறிந்து வாழ்வது
நாட்டில் உள்ள மனிதருக்கு நன்மை சேர்ப்பது
அதன் இடத்தில் அவை இருந்தால் நலம் சேர்க்குமே
அழகான புவிப்பந்தில் சுகம் பூக்குமே!
– கவிஞர் விண்மீன்