‘விடுதலை’ ஆசிரியர் 50
பிஞ்சுகளே… பிஞ்சு வாசகர்களே !
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே என்று செய்தி ஏடுகளைப் பற்றிப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பத்திரிகை என்ற தொடர்பு ஊடகம் தான் உலகை இணைத்ததில் முக்கியப் பங்காற்றியது என்று கூறலாம்.ஓரிடத்திலிருந்து செய்திகளை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றது பத்திரிகைதான்.
அச்சு இயந்திரம் உருவாக்கப்படுவதற்கு முன் செய்திகளை,படைப்புகளை ,தகவல்களை கைகளால் எழுதி பலருக்கும் கொடுத்து படிக்கச் செய்தார்கள்.
அச்சுத் தொழில் நுட்பம் வந்த பிறகு 17 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் செய்தி ஏடுகள் தயாரிக்கப்பட்டன.அதுவும் முதலில் அரசின் அறிவிப்புகள்,ஆணைகள்தான் அச்சிடப்பட்டு அரசினர்க்கு மட்டும் விநியோகிக்கப்பட்டன.பின்னர்தான் மெல்ல மெல்ல அனைத்துச் செய்திகளையும் தாங்கிய செய்தி ஏடுகள் வெளியிடப்பட்டன.
18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக்குப் பின் பரவலாக பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன.இந்தியாவில் பிரிட்டன் ஆட்சியின் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து பல பத்திரிகைகள் வந்த நிலையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்திற்கென குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
விடுதலைஇதழ் 1935 ஜூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 77 ஆண்டுகளை நிறைவு செய்து 78 ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடருகிறது.பெரியாரின் கொள்கைகளைத் தாங்கி தொடர்ந்து பயணம் செய்துவரும் விடுதலையின் ஆசிரியர்களாக டி. ஏ. வி. நாதன், பண்டித எஸ். முத்துசாமி, அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தியுள்ளனர்.
இத்தகைய பெருமக்களுக்கு அடுத்ததாக அய்யா பெரியாரால் விடுதலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் நம்முடைய பெரியார் பிஞ்சு இதழின் நிறுவனர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடுமையான நட்டம் ஏற்பட்ட சூழலில் விடுதலை இதழை நிறுத்திவிடுவது என்று கருதிய தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய ஆசிரியர் அவர்களை முழுமையாக நம்பி அவரது ஏக போகத்தில் விடுகிறேன் என்று அறிவித்தார்.
அந்த ஆண்டுதான் 1962. இதே ஆகஸ்ட் மாதம் 10 ஆம் நாள் விடுதலைக்கு ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்றார்.இந்த 2012 ஆகஸ்ட் 10 இல் 50 ஆண்டுகளை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரே கொள்கை;
ஒரே தலைவர்;
ஒரே இலட்சியம்;
ஒரே நாளேடு;
ஒரே ஆசிரியர்…. அவர்தான் கி.வீரமணி.
பத்திரிகை உலகம் பார்த்திராத அதிசயம். உலகப் பத்திரிகை வரலாற்றில் ஒரு நாளிதழின் ஆசிரியராக ஒருவரே 50 ஆண்டுகள் தொடர்ந்து பொறுப்பேற்று நடத்தியிருக்கும் சாதனை ஏடு விடுதலை,அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களாகத்தான் இருக்கமுடியும்.
விடுதலை வழக்கமான செய்தி ஏடு அல்ல; உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ். வணிக ரீதியாக இலாபகரமாக நடத்தமுடியாத கொள்கை ஏடு; பொதுமக்கள், பொதுவான பத்திரிகை வாசகர்கள் விரும்பும் வழக்கமான செய்திகள் இதில் இருக்காது. மாறாக மக்களுக்குக் கசப்பு மருந்து அளிக்கும் ஏடு.இத்தகைய ஏட்டினைத் தொடர்ந்து நடத்த எத்தனைத் துணிச்சல் வேண்டும்.
தன்னுடைய கொள்கைப் பரப்பல் பணி தனக்குப் பின்னாலும் நடக்கவேண்டும் என்று எண்ணி, எவர் கையில் விடுதலையை ஒப்படைத்தால் அது நிறைவேறும் என்பதைச் சரியாகக் கணித்து தந்தை பெரியார் அவர்கள் கி.வீரமணி அவர்களிடம் விடுதலையை ஒப்படைத்தார்கள். அய்யாவின் நம்பிக்கை பொய்க்கவில்லை. 77 ஆண்டுகால விடுதலையின் வரலாற்றில் 50 ஆண்டுகளாக வெற்றிகரமாக கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக வழிநடத்து கிறார். அந்த விடுதலைக் குழுமத்தின் சின்னஞ்ச் சிறு குழ்ந்தையாக நம்முடைய பெரியார் பிஞ்சு இதழும் நடைபோடுவதில் பெருமை கொள்கிறது.
ஆசிரியர் தாத்தாவிற்கு வாழ்த்துரைப்போம்; பெரியார் கொள்கை உலகை ஆள அவருடன் பயணிப்போம்.
– மணிமகன்