பிஞ்சுகள் பக்கம்
பாக்டீரியாவின் அமைப்பு
பாக்டீரியா ஒரு செல்லால் ஆன ஒரு நுண்ணுயிரி ஆகும். அவை நுண்ணுயிர் தொகுதியைச் சார்ந்தது. பாக்டீரியாவைக் குறித்த அறிவியல் பாக்டீரியாலஜி என்றழைக்கப் படுகிறது. பாக்டீரியாவை 1675ஆம் ஆண்டு டச்சு அறிவியல் அறிஞரான ஆன்டன் வான் லூவன் ஹீக் என்பவர் கூட்டு நுண்ணோக் கியின் மூலமாகக் கண்டறிந்தார். அதன் பிறகு லூயிபாஸ்டியர், இராபர்ட் கோச் மற்றும் லாட் லிஸ்டர் பாக்டீரியங்களைப் பற்றி விரிவாகக் கண்டறிந்தனர்.
பாக்டீரியாவின் உடல் அமைப்பை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் அறிந்து கொள்ளலாம். பாக்டீரியாவின் செல் புரோகேரியோட்டிக் செல் எனப்படும். இதற்கு விறைப்பான செல்சுவர் உண்டு. செல்சுவரானது பாக்டீரியாவிற்குப் பாதுகாப்பு மற்றும் நிலையான வடிவத்தைக் கொடுக்கிறது. செல் சுவருக்குள் உள்ள உயிருள்ள பொருள் புரோட்டோபிளாசம் என்றழைக்கப்படுகிறது.
புரோட்டோபிளாசமானது செல் சவ்வு, நியூக்ளியஸ் பொருட்கள் மற்றும் சைட்டோ பிளாசம் எனப் பிரிக்கப்படுகிறது. புறச் சவ்வுடைய செல்லின் பகுதிப் பொருட்களான கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்ட்ரியா, என்டோ பிளாஸ்மிக் வலைப்பின்னல், லைசோசோம் போன்றவை காணப்படுவதில்லை.
பாக்டீரியோ குளோரோபில் நிறமிகள் சைட்டோபிளாசத்தில் காணப்படுகின்றன. நியூக்ளியஸ் பொருட்கள் வட்டவடிவிலான டி.என்.ஏ. ஆகும். இது உட்கரு உறையால் சூழப்படவில்லை.
நூல் போன்ற துணை உறுப்புகளான கசையிழைகள் காணப்படுகின்றன. இவை இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. மிகவும் மெல்லியதான, முடிபோன்ற அமைப்புகளுக்குப் பைலங்கள் என்று பெயர். இவை இணைவு உறுப்பாகச் செயல்படுகிறது.
பாக்டீரியாக்களை மைக்ரான் என்னும் அலகால் அளக்கலாம்.
பாக்டீரியாவின் வடிவத்தை வைத்து அவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்
1. காக்கஸ் (உருளை வடிவம்)
2. பேசில்லஸ் (குச்சி வடிவம்)
3. ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்)
4. விப்ரியோ (கால்புள்ளி வடிவம்)
க. கார்த்திகா, எட்டாம் வகுப்பு, அருப்புக்கோட்டை
காலமறிந்து செயல்படு
காலமறிந்து செயல்படு_அப்துல்
கலாம் போல் வாழ்ந்திடு
சிட்டுக் குருவிபோல் பறந்திடு _ வெற்றிச்
சிகரம் நோக்கி நடந்திடு
அன்றாடம் படித்திடு
அறிவை நீயும் வளர்த்திடு
மாணவப்பருவம் படிப்பதற்கே
மதித்து நீயும் நடந்திடு
விரைந்து நீயும் செயல்பட்டால்
வெற்றிப் பதக்கம் எட்டிடலாம்
முயன்று நீயும் படித்திட்டால்
முதல் மதிப்பெண் பெற்றிடலாம்
முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால்
உலகமெல்லாம் உனை அறியும்
உன் பள்ளி கட்டவுட்டில்
உன் பெயரும் இடம்பெறுமே.
ஆதலால்
காலம் அறிந்து செயல்படு அப்துல்
கலாம் போல் வாழ்ந்திடு.
– சா.மஞ்சுமிதா,/10ஆம் வகுப்பு, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, திருச்சி -21.