உலகின் உயரிய நகரங்கள் – மாஸ்கோ
– முனைவர் ந.க.மங்களமுருகேசன்
ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ என்பது தெரியும். வேறு என்ன தெரியும்? மேலும் தெரிந்து கொள்வோம். ஏன்? உலகை ஆட்டிப் படைத்த வல்லரசுகள் இரண்டு. ஒன்று அமெரிக்கா, மற்றொன்று ரஷ்யா. சோவியத் முழுமையாகச் சொல்ல வேண்டுமானால் அய்க்கிய சோசலிச சோவியத் குடியரசு பெயரில்தான் குடியரசு. ஆனால் அதிகார மய்யமாக இருப்பிடமாக, பல ரகசியங்களின் புதையலாக இரும்புத்திரை நாடாகவே விளங்கிவந்தது. அதனால் அதன் அழகினை அதிசயங்களைக் கலை இலக்கியப் பெருமையைக் காணவோ கேட்கவோ முடியாமல் இருந்தது. இன்று அவை விரிந்து பரந்து விளங்குகிறது.
கி.பி. 1150ஆம் ஆண்டு நகரினைச் சுற்றி யூரி இளவரசர் என்பவர் மரத்தினால் சுவர் ஒன்றைக் கட்டினார். அப்போது தோன்றிய வளர்ச்சி தொடர்ந்தது.
அய்ரோப்பாவின் இரண்டாவது மக்கள் தொகை பெருக்கம் உடையது மாஸ்கோ நகரம். மாஸ்கோவில் கோடைக்காலமோ குறுகியது. குளிர் காலமோ நீண்டது. ஜூலை ஆகச்டு மாதங்களில் கோடைக்காலத்தில் சராசரி வெப்பநிலை 22 டிகிரிதான். ஆனால் குளிர்காலத்தில் பனிப்பொழிவுடன் வெப்பநிலை உறைநிலையையும் கடந்து செல்கிறது. மாஸ்கோவ் நதிக்கரையில் மாஸ்கோ உள்ளது. இந்த நதியின் மீது அய்ம்பது பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாஸ்கோவில் அய்ந்து விமான நிலையங்கள், ஒன்பது ரயில் நிலையங்கள் ஒரு மய்யப் பேருந்து நிலையம் ஆகியன உள்ளன. மாஸ்கோவில் பாதாள ரயில்கள் வாயிலாகத் தினமும் எழுபது இலட்சம் மக்கள் பயணிக்கின்றனர். இந்தப் பாதாள ரயில் நிலையங்கள் பாரம்பரியக் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்றவை.
மாஸ்கோவின் மய்யத்தில், சரித்திரப் புகழ் வாய்ந்த மாஸ்கோ கிரெம்லின் மாஸ்கோவ் நதியை எதிர்நோக்கியவாறு உள்ளது. இதனுள் இருப்பவை புனித பாசில் தேவாலயம், கிரெம்லின் சுவர், செஞ்சதுக்கம், அலெக்சாந்தர் பூங்கா, கிரெம்லின் கோபுரம், தேவாலயங்கள், அரண்மனைகள் ஆகும். இரஷ்ய நாட்டின் தலைவரின் இல்லம் இங்குதான் உள்ளது. அரசின் மிக முதன்மை அலுவலங்கள் தேசிய பாதுகாப்பு, படைத்துறைத் தலைமையகம், பன்னாட்டுத் தூதரகம் ஆகியன உள்ளன.
ரஷ்யாவின் வெற்றி விழாக்கள் பல நடந்த இடம் செஞ்சதுக்கம் ஆகும். செஞ்சதுக்கத்தை உருவாக்கியவன் இவான். இந்த இடம் பின்னாளில் சந்தையாகவும், அரசு பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள் நடைபெறும் இடமாயிற்று. செஞ்சதுக்கம் என்பதில் உள்ள சிவப்பு நாட்டின் தேசியக் கொடியிலுள்ள பொதுவுடைமையைக் குறிக்கிறது. லெனின் உடல் பக்குவப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள லெனின் நினைவகம் இங்குள்ளது.
நோருவாடென்சி கான்வென்டு என்பது பல்லாண்டு வரலாறு உடையதால் இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கன்னியர் பணி செய்துள்ளனர். போர்க்காலங்களில் புண்பட்ட போர் வீரர்களின் மருத்துவமனையாகவும் விளங்கியுள்ளது. இங்கு புகழ்பெற்ற ரஷ்யக் குடிமகள்களின் கல்லறைகளும், எண்கோண மணிக்கூடும் உள்ளன.
ஒஸ்டான்சிமனா கோபுரம் என்பது இங்கு உள்ள உலகின் மிக உயரமான தொலைக்காட்சிக் கோபுரம். ஆயிரத்து எழுநூறு அடி உயரமுள்ளது. இந்தக் கோபுரப் பணிகள் 1963ல் தொடங்கி 1967ல் முடிந்தன. மாஸ்கோவின் மற்ற தொலைக்காட்சிக் கோபுரமான ஷூகாள் கோபுரம் உலோகத்தால் ஆனது.
மாஸ்கோவின் மிகப் பெரும் அருங்காட்சியகம் புஷ்கின் நுண்கலை அருங்காட்சியகம் ஆகும். முதலில் அலெக்சாந்தர் மன்னர் பெயர் இருந்தது. இப்போது ரஷ்யாவின் புகழ்பெற்ற இலக்கிய மேதை புஷ்கின் பெயர் கொண்டுள்ள இதில் நுண்கலை சம்பந்தமான பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு பீட்டர் ஸ்பர்க்கிலிருந்து பல பொருட்கள் மாற்றப்பட்டுள்ளன.
போர்க்கருவிகள், ஆயுதங்கள், போருக்குரிய கனரக ஊர்திகள், பீரங்கிகள், போர்விமானங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போர் அருங்காட்சியகம் ஒன்று வெற்றிப் பூங்காவில் உள்ளது.
புராதன காலத்திலிருந்து இன்றைய நூற்றாண்டு வரை ரஷ்ய வரலாற்றோடு தொடர்புடைய லட்சக்கணக்கான அரிய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நாட்டு வரலாற்று அருங்காட்சியகம் நுணுக்கமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. வோல்கா நதிக்கரையில் தோண்டி எடுக்கப்பட்ட படகு பழங்காலத் தங்க அணிகலன்கள் பழங்காலக் காசுகள், பழங்கால இலக்கியத்தின் பிரதிகள் இங்கே பார்வைக்கு உள்ளன.
மாஸ்கோவின் நீண்ட வரலாற்றிற்கு ஆதாரமாகப் பல நினைவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது புனித ஏசு தேவாலயம் என்பதன் அருகில் அமைந்துள்ள இரண்டாம் அலெக்சாண்டர் எனும் மன்னருக்குக் கட்டப்பட்ட நினைவாலயம் ஆகும். இவர் ரஷ்யாவில் அடிமை வாழ்வு முறையை ஒழித்தவர். இவருக்குப் பதினெட்டடி உயரச் சிலை பதினெட்டடி பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு, வெற்றி ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட விண்வெளி வெற்றி நினைவாலயம் உள்ளது.
தொழிலாளியின் கையில் கத்தியும் பெண்ணின் கையில் அரிவாளுடன் காட்சி தரும் உழைப்பின் உயர்வைக் காட்டும் தொழிலாளியின் எழுபத்தெட்டடி உயர இரும்பினால் அமைக்கப்பட் பிரம்மாண்ட சிலை மாஸ்கோவில் காணத்தக்கது.
மாஸ்கோ பூங்காக்கள் நூற்றுக்கணக்கில் சிறியதும், பெரியதுமாய் நிறைந்த நகரம். நானூற்று அய்ம்பது சதுர கி.மீ. பரப்பளவு உள்ள நான்கு தாவரவியல் பூங்காக்கள் உள்ளன. இதனால் உலகின் எந்த நகரத்தை விடவும் இங்கு பச்சை நிறம் பரவி உள்ளது.
மாஸ்கோ ரஷ்யக் கலை, இலக்கியப் பண்பாடுகளின் இதயமாக விளங்கிவருகிறது. சுமார் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நடன அரங்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட திரை, இசை அரங்குகளும் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. ரஷ்ய நடனமான பாலே, ஓவியக் கலை, நாடகம், சிற்பக் கலை ஆகியன மாஸ்கோவில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாஸ்கோவில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற தேவாலயங்களில் புனித பேசில் தேவாலயம் செஞ்சதுக்கத்தின் அருகில் வித்தியாசமான மேற்கூரை அமைப்புகளுடன் உள்ளன. 1550ஆம் ஆண்டில் இவான் அரசரால் கட்டப்பட்டது எனில் இதன் பெருமை விளங்கும். 1812ஆம் ஆண்டில் நெப்போலியனைத் தோற்கடித்தார் மன்னர் முதலாம் அலெக்சாண்டர். நாட்டைக் காப்பாற்றியவர் இறைவன் என்று மூடநம்பிக்கை கொண்டும், நாட்டைக் காப்பாற்றப் போரிட்ட மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாகவும் தேவாலயம் ஒன்று அமைப்பது என்று தேவாலயம் கட்ட மன்னர் அலெக்சாண்டர் முடிவு செய்தார். ஆனல் அதைக் கட்டி முடிக்கும் முன் இறந்தார். அவர் இறந்தபின் அவருடைய வாரிசுகள் கிரெம்லின் அருகே இதனைக் கட்டி முடித்தனர். மாபெரும் ஓவியர்களின் ஓவியங்கள் உள்ளரங்கில் இருந்தன.
ரஷ்யப் புரட்சிக்குப் பின் தரைமட்டமாக் கப்பட்ட இதனை 1992ஆம் ஆண்டில் மீண்டும் எழுப்பத் தொடங்கி 2000ஆம் ஆண்டில் பழைய வடிவில் எழுப்பப்பட்டது. இதுபோல்உலகின் பழம்பெருமைமிக்க மாஸ்கோவில் காணவேண்டிய இடங்கள் பல உள்ளன.