எழில் மிகுந்த ஏதென்ஸ்
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரம் சாக்ரடீஸ் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் எழில் நகரம்தான். அது கிரேக்கத்தின் தலைநகரம். மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறு உடையது.
மக்களாட்சி என்று சொல்கிறோமே அந்த ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகம் செய்த நகரம். மேலை நாட்டிற்குரிய பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் தொட்டிலாகவும் விளங்கிய நகரம் அது.
ஏதென்ஸ் என்னும் பெயர் வந்தது எப்படி? கிரேக்கர்களுடைய பெண் கடவுள் ஏதெனா ஆவார். ஏதெனா என்பதிலிருந்து ஏதென்ஸ் வந்திருக்க வேண்டும் என்பது வரலாறு கூறும் செய்தி இது.
ஏதென்ஸ் நகரினைப் பல மரபினர் ஆண்டார்கள். ஏதென்ஸ் நகரம் கிரேக்க இலக்கியம், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றின் மய்யமாக விளங்கியது.
சாக்ரடீஸ் மட்டுமல்லாது பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய உலகப் புகழ்பெற்ற தத்துவ ஞானிகள், கலைஞர்கள், அரசியல் விற்பன்னர்கள் வாழ்ந்து மறைந்த பெருஞ்சிறப்புடைய நகரம் அது.
சரி, இன்றைய ஏதென்சின் நிலை என்ன? அது அய்ரோப்பாக் கண்டத்தின் எட்டாவது பெரிய நகரம். மக்கள் தொகை நாற்பது இலட்சம் மட்டுமே.
ஏதென்ஸ் நகரில் மே, ஜூன் நம் ஊர்போல வெப்பம் மிகுந்த காலம். செப்டம்பர், அக்டோபர் மிதமான குளிர்காலம். இந்த ஏதென்ஸ் மய்ய நிலக்கடலுக்கும், ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கும் இடையில் அமைந்து உள்ளதால் இந்தத் தட்பவெப்ப நிலை.
ஒலிம்பிக் ஆலயம்
கிரேக்க நாட்டிலே உள்ள மிகப் பெரிய ஆலயம் ஒலிம்பிக் கடவுளுக்குக் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கி கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை சுமார் நானூறு ஆண்டுகள் கட்டப்பட்ட கட்டடம்.
ஒரு காலத்தில் அய்ம்பத்தாறு அடி உயரமுள்ள நூற்றி நான்கு சலவைக் கல் தூண்களே இந்தக் கட்டடத்தைத் தாங்கி நின்றிருக்கின்றன. ஆனால் இன்று இருப்பவை பதினைந்து தூண்கள் மட்டுமேதான். இந்த ஆலயத்தில் தங்கத்தினாலும், தந்தத்தினாலும் செய்த ஒலிம்பஸ் கடவுள் சிலையையும், தன் சிலையையும் ஏட்ரியன் அரசர் நிறுவியதாக வரலாறு மட்டும் உள்ளது. ஆனால் சிலைகள்தான் இல்லை.
சின்டக்மா சதுக்கம்
ஏதென்ஸ் நகரத்தின் மய்யத்தில் அதன் இதயத் துடிப்பாக விளங்குவது இது. கிரீஸ் நாட்டு நாடாளுமன்றம், அமைச்சகங்கள் ஆகியன இங்கே உள்ளன. இந்தச் சதுக்கத்தில் பூங்கா; பூங்காவில் பளிங்குச் சிலைகள், பாய்ந்து தாவும் நீர்ச்சுனைகள், நெடிய மரங்கள் தவிரச் சிறகடித்துப் பறந்து திரியும், பல்லாண்டுகள் வாழும் வண்ணப் புறாக்கள் காணத்தக்கவை.
அக்ரோபோலிஸ் குன்று
கிரேக்கர்கள் புனிதமான குன்று என்று கருதும் அக்ரோபோலிஸ் குன்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று விளங்கியது. கடல்மட்டத்திலிருந்து நூற்று அய்ம்பத்தாறு மீட்டர் உயரத்தில் மூன்று எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கே கிரேக்கப் பேரரசின் மாமன்னர்கள் எழுப்பிய சிலைகளும், கலைப்பொருட்களும் எழில் சேர்க்கின்றன.
பார்த்தினான்
அக்ரோபோலிசில் ஏதெனா பெண் தெய்வத்திற்கு கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களில் பார்த்தினான் மிகவும் முக்கியமானது. இது பழமைச் சிறப்பையும் பண்பாட்டையும் அறிவிக்கும். இதனை உலகின் சிறந்த கிரேக்கக் கட்டடக் கலை நிபுணர்கள் கட்டி முடித்தனர்.
இதனைக்கட்டி முடிக்கவே பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று என்றால் நேரில் பார்த்தாலே இதன் பிரம்மாண்டத்தை உணர இயலும். ஏதென்ஸ் நகரைச் சுற்றி உள்ள பல குன்றுகளில் மிகவும் உயரமானதான லிகாபட்டஸ் குன்றினை ஏதெனா தேவி, வானிலிருந்து தூக்கி எறிந்தது என்னும் மூடநம்பிக்கை நிலவுகிறது. இதன் மேலிருந்து பார்த்தால் ஏதென்சின் முழு அழகினைக் காணலாம்.
சின்டக்மா சதுக்கத்துக்குத் தென்மேற்கில் கள்ளி மர்மரோ விளையாட்டு அரங்கம் பழைய ஒலிம்பிக் மைதானத்தை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டது. 1896ஆம் ஆண்டில், முதல் புதிய ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. இதன் சிறப்பு _ உலகிலேயே சலவைக் கற்களால் கட்டப்பட்ட ஒரே அரங்கம் இதுவே என்பது.
அக்ரோபோலிசின் அடிவாரத்தில் உள்ள கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர் கட்டிய அரங்கில் இன்றும் பண்டைச் சிறப்பு மிக்க இசை, நடன நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கிரேக்க நாடாளுமன்ற கட்டிடம் கிரேக்கர் களின் கட்டடக் கலையின் வாழும் பிரம்மாண் டத்திற்கு இன்றும் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னம். கி.பி.1910ல் இதனைப் புதுப்பித்து இன்று நாடாளுமன்றமாகவும், நாட்டின் தலைவரின் அலுவலகமாகவும் விளங்குகிறது.
அகோரா
அகோரா என்றால் சந்தை என்று பொருள்படும். ஏதென்ஸ் நகரத்தின் பழைய அகோரா, நகரின் வாணிபம், அரசியல், சமூகம் ஆகியவற்றின் மய்ய உறுப்பாய் விளங்கியது.
பழைய அகோராவிற்குக் கிழக்கில் கி.மு. முதலாம் நூற்றாண்டில் புதிய அகோராவைக் கட்டினர். இது புதிய அகோரா அல்லது ரோமானிய அகோரா அல்லது சீசர் அகஸ்டஸ் அகோரா என்று அழைக்கப்படுகிறது.
இதன் அருகில் காற்றுக்கோபுரம் என அழைக்கப்படும் நீர்க்கடியாரம் ஒன்றை மாசிடோ னிய நாட்டு வானியல் நிபுணர்கள் அமைத்துள் ளனர். ஏதெனா நுழைவாயில் புதிய அகோராவிற்கு மேற்கில் உள்ளன.
ஏதென்ஸ் நகரில் அருங்காட்சியகங்கள் பல உள்ளன. உலகத்தின் முதல் பத்து அருங்காட்சி யகங்களில் ஒன்றாகத் தேசிய புதைபொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் கருதப்படுகிறது. பெனாகி அருங்காட்சியகம் எனும் இசுலாமிய அருங்காட்சியகம், பைசாண்டின் அருங்காட்சி யகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.
ஏதென்ஸ் நகரத்தின் கோளரங்கம் உலகின் மிகச் சிறந்த கோளரங்கங்களில் ஒன்று.
ஏதென்ஸ், கிரேக்கத்தின் பிற நகரங்களுடன் தொடர்வண்டிப் போக்குவரத்து வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம் ஆகியன உள்ளன.
ஏதென்ஸ் இன்றும் பண்டைப் பெருமை யையும், கலைச் சிறப்பையும் கொண்டு விளங்கு வதால் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் உலக நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏதென்ஸ் என்றால் எழில் என்றும் அழைக்கலாம்.
– முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்