ஜூல்ஸ் வெர்ன்
– சாரதாமணி ஆசான்
வருங்கால அறிவியல் நிகழ்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கணித்து வெளியிட்ட வியத்தகு அறிவியல் புதின எழுத்தாளர்தான் ஜுல்ஸ் வெர்ன். இவரால் தீர்மானித்து எழுதப்பட்ட பல அறிவியல் கற்பனைகள், பிற்காலத்தில் உண்மைகளாகக் கண்டுபிடிக்கப்பட்டன; உலகில் நடைமுறை வாழ்வில் பயன்படும் நிகழ்வுகளாக அவருடைய படைப்புக்கள் திகழ ஆரம்பித்தன.
அதில் சிறந்தவை என அறியப்பட்டவை நிலவில் மனிதன் கால்பதித்ததும் ஆழ்கடலுக்கடியில் பிரயாணம் செய்யும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்ததும் ஆகும். இத்தகு செயல்களுக்கு இவர்தம் நூல்கள் உந்து சக்தியாக இருந்து துணைபுரிந்தன. சுருங்கச் சொன்னால் இவரது எழுத்துக்கள் சமுதாய நலம் நாடும் அனைவரையும் அறிவியல் மனப்பான்மை உள்ளவராகவும் பயனுள்ள கண்டுபிடிப்புக்களை காணும் ஆர்வம்மிக்கவராகவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தகுதி படைத்தவராகவும் உருவாக்கின எனலாம்.
தோற்றம்: ஜுல்ஸ் வெர்ன் (Jules Verne) 1828ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள நான்டிஸ் என்ற துறைமுக நகரில் பிறந்தார். அவர் தந்தையார் பியரி வெர்ன் (Pierre Verne) ஒரு சிறந்த வழக்குரைஞர். அவரது தாயார் சோபியா அலோடி (Sophie Allotte) கப்பல் தலைவர்களாகவும் – கப்பல் தயாரிப்பாளர்களாகவும் விளங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்க்குப் பிறந்த அய்ந்து குழந்தைகளில் இவர்தான் மூத்தவர்.
இவர் இளம் வயதினராக இருக்கும்போதே புவியியல் சார்ந்த நூல்களைக் கற்பதிலும் இசை சார்ந்த பாடங்களைப் பயில்வதிலும் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளைக் கற்பதிலும் பெரும் ஆர்வம் காட்டினார்.
பள்ளி முடிந்த மாலை நேரங்களிலும் – விடுமுறை நாட்களிலும் துறைமுகத்திற்குச் சென்று கப்பல்கள் அங்கு வந்து செல்வதைக் காண்பதிலும் அதன் இயக்கங்கள்பற்றி ஆராய்வதிலும் தன் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டார். இவர் படிக்கும் காலத்தில் அறிவியல் செய்திகள் கொண்ட நூல்கள் பிரயாண அனுபவம் சார்ந்த செய்திகள் ஆகியவற்றைக் கவனமுடன் கற்று வந்தார்.
எதிர்நீச்சல்: 1848ஆம் ஆண்டு இவரது பள்ளிப் படிப்பு முடிவடைந்தது.
இவரது தந்தையார் சட்டம் பயில இவரைப் பாரீசுக்கு அனுப்பிவைக்கத் திட்டமிட்டார். இவரது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க சட்டத் துறையில் பட்டம் பெற்றாலும் இவரது முழு ஆர்வமும் நாடகங்கள் எழுதுவதிலும் அறிவியல் சார்ந்த புதினங்களைப் படைப்பதிலும் கட்டுரைகளை வடிவமைப்பதிலும் இருந்தமையால் தந்தையார் இவரது செலவுக்குக் கொடுத்துவந்த பணத்தை அனுப்பாமல் நிறுத்திவிட்டார்.
இதனால் தனது அன்றாட செலவுக்குத் தானே பணம் தேடவேண்டிய சூழ்நிலைக்கு வெர்ன் தள்ளப்பட்டார். இந்த நிலையில், தான் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள் ஆகியவற்றை வெளியிடும் விருப்பமுள்ளவர்களைக்காணப் பல நிறுவனங்களுக்குச் சென்றார். செல்வர் பலரை அணுகினார். தொடர் முயற்சியின் பயனாக இவருக்குச் சில வாய்ப்புகள் வந்தன. இவர் தன் பாடக நண்பரான ஜுன் லூயிஸ் உடன் சேர்ந்து தமது நாடகங்களை நடித்தும் வெளியிட்டும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
தி புரோக்கன் ஸ்டிராஸ் (The Broken Straws) மற்றும் பிளைண்ட் மேன்ஸ் பிளஃவ் (BLIND MAN’S BLUFF) போன்ற இவரது நாடகங்கள் பலமுறை மக்கள் மன்றங்களில் நடிக்கப்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் இவரது எழுத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அறிவியல் புதினங்கள் வெளியிடல்:-
இரண்டு பெண்களுக்குத் தாயான ஆனரின் மொரிஸ் என்ற விதவைப் பெண்ணை இவர் 1857ஆம் ஆண்டு மணந்தார். இவரது மனைவி இவரது எழுத்தாற்றலுக்கு உரம் சேர்த்தார் உற்ற துணையாக இருந்தார். 1861ஆம் ஆண்டு மைக்கேல் வெர்ன் என்ற மகனை இவர்கள் பெற்றெடுத்தனர்.
அடுத்து இவர்கள் தங்கள் இங்கிலாந்து பயணத்தைத் துவங்கினர். பிரசித்திப் பெற்ற எழுத்தாளர்களான அலெக்சாண்டர் டியூமாசையும் (Alexander Dumas) விக்டர் யுகோவையும் (Victor Hugo) சந்திக்கும் அரிய வாய்ப்பு அங்கு கிட்டியது. அதன்மூலம் பல அறிஞர்களையும் பல பதிப்பகத்தாரையும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.
அப்போது (FIVE WEEKS IN A BALOON) பலூனில் அய்ந்து வாரங்கள் என்ற இவரது அறிவியல் புதினத்தை பியரி எட்செல் என்ற ஒரு சிறந்த பதிப்பகத்தினர் வெளியிட ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு இவரது முதல் முயற்சி பெரும் வெற்றி அடைந்தது. இப்புதினத்தில் மூன்று பயணிகள் தம் பயணத்தை ஆப்பிரிக்காவில் தொடர்வது போலவும் அதன் மூலம் நைல்நதியின் தோற்றம் பற்றியும் பல சுவையான செய்திகளை வெளியிட்டார்.
இப்புதினம் மாபெரும் ஆர்வத்தைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து புவியின் மையப் பகுதி நோக்கிப் பயணம் (Journey to the centre of the earth) என்ற நூலில் புவியின் மய்யத்தை ஓர் எரிமலைக் குமுறலால் மக்கள் சென்று அடைவதையும் பல சாகசங்களுக்குப் பின்னர் மற்றோர் எரிமலை வெடித்ததால் உள்ளே சென்றவர்கள் மீண்டும் புவியின் மேல்பகுதியில் உள்ள இத்தாலி நாட்டை வந்தடைவதையும் இவர் விவரித்ததின் நோக்கம் எதிர்காலத்தில் கண்டறிய வேண்டிய கவர்ச்சிமிக்க விஞ்ஞான சாதனைகளைத் தம் கற்பனைத் திறனால் எளிமையாகச் சுட்டிக் காட்டுவதற்கே!
கடலுக்கடியில் இருபதாயிரம் பதிவுகள் (Twenty thousand Leagues under the sea) என்ற புதினம் மிகச் சிறந்த படைப்பாகும். இது கடலுக்கடியில் மேற்கொள்ளும் பிரயாணம் பற்றியும் அங்கு நிகழும் சாகசங்கள் பற்றியும் எழுதியிருந்தார். இவர் தனது புதினத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், சாதனங்கள் ஊர்திகள் யாவும் பிற்காலத்தில் கண்டுபிடிப்புகளாக மாறின.
1890ஆம் ஆண்டு நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்த சைமன் லேக் தன் முயற்சிக்கு இவரது புதினம்தான் முன்னோடி என்று அறிவித்தார். இப்புதினம் 1954ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னியால் தயாரிக்கப்பட்டு சிறந்த தரத்திற்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றது.
எல்லார் உள்ளங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட (Around the World in 80 days). உலகம் சுற்றிவர 80 நாட்கள் என்ற புதினம் இவரது பெருமைக்குப் பெருமை சேர்த்தது. இந்த நூலின் கதைத் தலைவி சதி என்ற உடன்கட்டை ஏறும் கொடிய இந்துமத வழக்கத்தி லிருந்து காப்பாற்றப்பட்டு அற்புதங்கள் நிறைந்த உலகப் பயணத்தின்போது பயணிப்பதாக சமுதாயச் சீர்திருத்தப் பண்பை காட்டிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து வாழ்நாள் இறுதிவரை இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன.
அறிவியல் உலகம்
இவர்தம் நூல்களில் 65 புதினங்கள், 25 சிறுகதைகள், 30 நாடகங்கள் அடங்கியுள்ளன. அவைகளில் நடைமுறைக்கு ஏற்ப கற்பனைகள் அமைந்திருப்பதாலும் அறிவியல் ஆய்வில் அறியப்பட்ட உண்மைகள் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பளித்த காரணத்தாலும் இதன் வாயிலாக உலகம் முழுதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன எனலாம்.
வியத்தகு அளவில் விற்பனையான இவரது நூல்கள் கற்பனைக் கதைகள் அல்ல; கருத்துப் பெட்டகங்கள் மனித நாகரிகம் பேணும் கவின்மிகு எழுத்தோவியங்கள். இவரை அறிவியல் புதினங்களின் தந்தை (The Father of Science Fiction) என்று எல்லோராலும் விரும்பி அழைக்கப்படுகிறார். இவரைச் சார்ந்து நாளைய நல் உலகைக் காக்கும் பல இளம் அறிவியல் அறிஞர்களை வரவேற்க இந்த உலகம் என்றும் ஆவலுடன் எதிர்நோக்கியவண்ணம் உள்ளது.