பொங்கலில் தமிழ்ப் புத்தாண்டு!
முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
இனிய பிஞ்சுகளே…
ஆண்டு 2013 பிறந்துவிட்டது. இது உலகின் பொது ஆண்டு. உலகம் முழுதும் கொண்டாடும் ஒரே விழா. இனம் மறந்து, மதம் மறந்து,நாடு மறந்து,ஜாதி மறந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் விழாவாக இருக்கிறது. நாமும் கொண்டாடுகிறோம்.
சரி, தமிழர்களுக்கென ஒரு புத்தாண்டு வேண்டுமல்லவா…?அதற்காகத்தான் தமிழறிஞர்கள் மறைமலை அடிகள் தலைமை யில் ஒன்றுகூடி தை மாதமே தமிழர்க்குப் புத்தாண்டு என அறிவித்தார்கள். அந்தத் தமிழ்ப்புத்தாண்டுக் கணக்கை திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுத்தார்கள். அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்திருக்கவேண்டும் எனக் கணக்கிட்டு, தமிழ்ப் புத்தாண்டை உருவாக்கினார்கள்.
அந்தவகையில் வரும் தை மாதம் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044 ஆகும். (அதாவது2013+31=2044)
ஆனால், நம் மக்கள் கொண்டாடிவரும் தமிழ் வருஷப்பிறப்பு சித்திரை மாதத்தைத் தொடக்கமாகக் கொண்டது.அதற்கு சொல்லப் படும் கதையும் ஆபாசமானது. ஏனென்றால் அது தமிழர்களின் கதை அல்ல;மாறாக ஆரியப் பார்ப்பனர்கள் சொல்லிய கதை,நம் மக்கள் மீது புகுத்திய கதை. அதனால்தான் அத்தனை ஆபாசம்.
சித்திரையில் கொண்டாடும் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்றுகூடச் சொல்வதில்லை. எப்படிச் சொல்கிறார்கள் தெரியுமா? வருஷப் பிறப்பு.இந்த வார்த்தையைக் கவனியுங்கள். வருஷம் என்பது தமிழ் அல்ல; ஆண்டு என்பதுதான் தமிழ்.ஆண்டு என்னும் தமிழே இல்லாமல் ஆரிய வட மொழியில் வருஷம் எனச் சொல்லப்படுவது எப்படித் தமிழ்ப் புத்தாண்டாக இருக்க முடியும்? அதுமட்டுமா? அந்த வருஷங்களின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா?
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீ முக, பவ, யுவ, தாது, ஈஸ் வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார் வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதார ண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய இந்தப் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயரா? நம் வாய்க்குள்தான் நுழைகிறதா?
பெயர்களிலேயே தமிழ் இல்லை; பின் எப்படி அது தமிழ்ப் புத்தாண்டாக முடியும்?
நம் மக்கள் ஆரிய மத வலையில் வீழ்ந்தபோது அவர்களால் புனையப்பட்டதே சித்திரையில் தொடங்கும் வருஷப் பிறப்பு. இந்நிலையில் இந்த இழிநிலையைப் போக்க தமிழ் ஆய்ந்த புலவர் பெருமக்கள் வகுத்தளித்த திருவள்ளுவராண்டே நமக்குத் தமிழ்ப் புத்தாண்டு. இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாம் பொங்கல் விழாத் திங்களில் தொடங்கும் ஆண்டே தமிழ்ப்புத்தாண்டு எனக் கொண்டாடுவோம். தமிழின இழிவைத் துடைப்போம்.
– பிஞ்சு மாமா