அன்பு மடல் – 4
நாத்திக அறிவியல் மேதை
பிரியமுள்ள பேரன், பேத்திகளே,
எங்கள் அன்பு. எப்படி இருக்கீங்க…? தேர்வெல்லாம் முடிந்திருக்கணுமே?
விடுமுறை துவங்கிவிட்டதா-? முன்பெல்லாம் நாங்க எல்லாம் விடுமுறை எப்போது வரும் என்று மிகுந்த ஆவலா இருப்போம். இப்ப நீங்க…?
அதே மாதிரி இருக்க உங்க அப்பா, அம்மா, ஆசிரியர்கள் விடுவதில்லை என்பதுதான் தெரிந்த கதையாயிற்றே!
ஸ்பெஷல் கிளாஸ்,
கோச்சிங் கிளாஸ்,
அடுத்த வருட பாடங்களை முன்கூட்டியே முடிப்பதற்கான பள்ளிகளில் தனிவகுப்புகள்.
போட்டித் தேர்வுகள்! அதிலும் தேற வேண்டாமா? விளையாடிட நேரம் போதவே இல்லை! இல்லையா? பாட்டி, தாத்தா சொந்தக்காரங்க வீட்டிற்குச் சென்று தனிக்காட்டு ராஜாக்களாக, செல்லக் குழந்தைகளாக விருந்தினர் ராஜாங்கத்தில் இருக்க முடியாமல், விடுமுறைக் காலங்களில்தான் இப்போது உங்களிடம் அதிகம் வேலை வாங்குகிறார்கள் உங்கள் பெற்றோர்கள்!
என்ன செய்வது? டெக்னாலஜி வளர்ந்ததோடு போட்டியும் அதிகமாகிவிட்டதே!
அதோடு உங்களில் பலருக்கு செல்போன் – கைத்தொலைபேசி சிக்கி விட்டது!
எப்போதும் அதனையே உங்கள் இணைபிரியாத நண்பனாக ஆக்கிக்கொண்டு அதனோடேயே கொஞ்சிக் குலாவிக் கொண்டு பொழுதைச் செலவிட நேரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம்கூட என்றாலும், காலம் திரும்பவும் சம்பாதிக்க முடியாத அரிதான ஒன்று அல்லவா?
எனவே நிறைய பயனுள்ள பல செய்திகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நல்ல உடல்நலம், பலம் உள்ள பலர் உங்களில் – சும்மா சோம்பித்திரிவது, கைத்தொலைபேசியோடே கதைத்துக்கொண்டு காலத்தை வீணாக்கிவிடலாமா?
தொலைக்காட்சிக் -(டி.வி.) பெட்டிமுன் உட்கார்ந்து சதா அதனோடேயே அய்க்கியமாகி விடலாமா?
நல்ல கருத்துள்ள நூல்களைப் படியுங்கள்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற பிரபல விஞ்ஞானியை _- அறிவியல் மேதையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
இருபது – இருபத்து ஓராவது நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராகத் திகழ்ந்த இவர் ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதி. அறிவியல் சிந்தனைகளால் அகிலத்தை ஈர்த்து அவரைப் பார்த்து அது அதிசயப்பட வைத்த மேதை அவர்!
சக்கர நாற்காலியிலேயே ஒரு கணினியை ஸ்பெஷலாக வடிவமைத்துக் கொண்டு உலக விஞ்ஞான மேதைகளின் கருத்துகளுக்கே சவால் விட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த மேதை!
சர் அய்ஸக் நியுட்டன், ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் போன்றவர்களின் கருத்துகளையே எதிர்க் கேள்வி போட்டுத் திணற அடித்து, திகைக்க வைக்கும் தீரர் இவர்!
கடவுள் நம்பிக்கையற்ற முழு நாத்திகர் இவர். பிரபஞ்சம் எப்படி உற்பத்தியானது என்பது பற்றிய இவரது ஆராய்ச்சி இன்றும் பல அறிவியல் அறிஞர்களால் வரவேற்றுப் பாராட்டப்படுகிறது!
பிரபஞ்சம் பற்றி ஏற்கெனவே அய்ன்ஸ்டைன் வரையிலான கருத்துகள் மட்டுமே உலகுக்குத் தெரிந்தன. அது அவரின் ஜெனரல் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி (General Theory of Relativity)
அடிப்படையிலானது.
இந்தப் பிரபஞ்சம் (Universe) நிலையானது. அதில் மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என்பது அய்ன்ஸ்டைனின் கோட்பாடு.
ஆனால் பிக் பாங் (Big Bang) என்ற பெரு வெடிப்புக்குப் பின்னர்தான் இந்தப் பிரபஞ்சம் உருவானது; காலமும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்தப் பிரபஞ்சம் மாறிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பிரபஞ்சமும் காலமும் முடிவுக்கு வந்துவிடும் என்பது க்வாண்டம் மெக்கன்சின் கருத்து.
இவை இரண்டையும் இணைத்து ஒரு புதுக்கோட்பாட்டை உருவாக்க வேண்டும் என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து. அதற்கான நம்பிக்கை – உறுதி – வீண்போகாமல் அதிக மதிப்பெண் வாங்கி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார். திடீரென்று சரியாக நடக்க முடியவில்லை. ஒருநாள் மாடிப்படிகளிலிருந்து ஸ்டீஃபன் தலைக் குப்புற கீழே வீழ்ந்தார்.
தற்காலிகமாக நினைவாற்றலை இழந்தார். ஸ்டீஃபன் நினைவு திரும்ப பல மணி நேரங்களாகின.
ஸ்டீஃபனின் 21ஆம் பிறந்தநாளுக்கான விருந்து. முன்பே ஒரு விருந்தில் தோழி ஜேன் வைல்ட் அவர்களைச் சந்தித்தார். பிறகு அது நட்பாகி, காதலாகி கனிந்து, அவரே பலவித இன்னல்களுக்கிடையே வாழ்விணையர் ஆனார்!
இளவயதிலேயே இவரைத் தாக்கிய நோய் மிகவும் கொடுமையான நோய்.
அமியோட்ரோஃபிக் லேட்ரல் ஸ்க்லீரோசிஸ் ‘ALS’ என்ற சுருக்கப்பெயர் கொண்ட நோய்.
லூ கெஹ்ரிக் என்ற பேஸ்கட் பால் ‘Basket Ball’ விளையாட்டு வீரருக்கு வந்ததால் அதற்கு மற்றொரு பெயர் லூ கெஹ்ரிக்-கின் நோய்.
நோய் முற்றிப் போனவர்களுக்கு இயல்பாக மூச்சு விடமுடியாது; செயற்கை மூச்சுக்கருவி ரெஸ்பிரோமர் வைக்கப்படும். நிமோனியாவால் இறப்பு ஏற்படக்கூடும் அபாயம் எப்போதும் உண்டு.
கண்ணுக்குத் தெரியும் எந்தத் தசையையும் நாம் இயக்கவே முடியாது. அவைகளின் இயக்கம் நின்று விடும். அதாவது வெளியில் தெரிகிற உடல் செத்துவிடும். கண்களிலும் உதடுகளிலும் அவ்வப்போது தெரிகிற ஒருசில அசைவுகளைத் தவிர. ஆனால், ஒரு நல்ல விஷயம் இதிலும் உண்டு.
முக்கியமான உள் உறுப்புக்களான இதயம், நுரையீரல், சிறுநீரகம் (கிட்னி) போன்ற எதுவுமே பாதிக்கப்படாது-. அதுதான் முடிந்தவரை உயிரைக் காப்பாற்றி வைத்திருக்கும்.
பிஞ்சுகளே,
இப்படி ஒரு நோய் நம்மைத் தாக்கினால் நாம் தாயின் மடியை விட்டு எழுந்திருப்போமா?
அவர் பரிதாபம் தேடவில்லை. இயல்பான வாழ்க்கையை மேலும் சுறுசுறுப்புடன் நடத்திடவே முயன்றார்; வென்றார்!
‘A Brief History of Time’ என்ற நூல் உலகம் போற்றிய நூலாகும். (இதுவரை பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.)
இவர் சில ஆண்டுகாலம்தான் உயிருடன் இருப்பார் என்பதையும் மீறி வாழுகிறார் – பல ஆண்டு. துணைவி, குழந்தைகள், குடும்பம் உண்டு!
அண்மையில் பிக் பாங் (Big Bang) தத்துவம்கூட தவறு, பிரபஞ்சம் எப்படி தானே தோன்றியது என்பதை, எனது பழைய கருத்தை புதிய விஞ்ஞான ஆதாரங்களின் காரணத்தால் மாற்றிக் கொண்டேன் என்கிறார், ‘Grand Design’ என்ற இவரது அண்மையில் எழுதிய அரிய ஆய்வு அறிவியல் நூலில்.
இவர் பற்றி நாகூர் ரூமி என்பவர் எழுதிய ஸ்டீஃபன் ஹாக்கிங் – வியப்பூட்டும் வாழ்க்கை சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்ற நூலை (தமிழில் வந்தது) படித்தால் பெரிதும் பல தகவல்களை அறியலாம்!
ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கில நூல்களை இணையத்தின் வழியில் தேடிப் படித்து பயன் பெறுங்கள். ஊனம், நோய் – அதுவும் உயிர்க்கொல்லி நோயை வென்றார் நாத்திக நல்ல அறிவியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங்.
இவரல்லவா சிறந்த தலைவர்! ஏன் இன்னமும் நோபல் பரிசு தரவில்லை? இவர் நாத்திகர் என்ற காரணந்தானா?
அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி
நூல் : ஸ்டீஃபன் ஹாக்கிங் – வியப்பூட்டும் வாழ்க்கை சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்
ஆசிரியர்: நாகூர் ரூமி
வெளியீடு: வள்ளல் அழகப்பர் பதிப்பகம்,
மலர்மதி இல்லம், (பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம்) காரைக்குடி_1
கைப்பேசி : 9443492733
பக்கங்கள் : 78
விலை : ரூ.75/—