புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே (1787-1851)
உலக உயிர்களின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாகத் திகழ்வது நல்ல எண்ணங்களும், உண்மையை வடிவமைக்கும் எழுத்துகளும் ஆகும். ஆதிகாலம் முதல் இக்கருத்தை நிலைப்படுத்துவதற்கு எழுத்துக் கலையையும், ஓவியக் கலையையும் பயன்படுத்தினர். கால வளர்ச்சியில் ஓவியம், உலகியலைப் படம் பிடிக்கவும், பண்பாட்டைச் சித்தரிக்கவும் உகந்த ஆவணமாகத் திகழ்ந்தது.
இயற்கையின் எழில் காட்சிகளை உள்ளபடியே பதிவு செய்ய ஓவியர்களால் பல தொடர் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த அரிய முயற்சியில் முதன்முதலில் வெற்றி கண்டவர் லூயிஸ் டாகுரே ஆவார். ஆம்! புறக்காட்சிகளைப் புகைப்படமாக எடுக்கும் முறையை உலகுக்கு விளக்கிய திறனாளரும் இவரே! 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் என்ற அமைப்பு இவரது கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தது. இந்த நாள் உலகப் புகைப்பட தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இளமைக்காலம்
லூயிஸ் டாகுரே 1787ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் உள்ள கோர்மிலெஸ் (Cormeilles) என்னும் ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் ஓவியம் வரைவதில் சிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் தம் 13ஆம் வயதில் ஒரு கட்டடக்கலை (Architect) வல்லுநர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டார்.
இவ்வாய்ப்பு அவரைச் சிறந்த ஓவிய வல்லுநராக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து 1804ஆம் ஆண்டு இவருக்கு நாடக அரங்கங்களுக்கு ஓவியத் திரைகள் வரைவதற்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. இதன் பின்னர் இவர் முழுநேர ஓவியராகவும், பகுதி நேரத்தில் ஓவியத் திரைகள் வரைந்த நாடக அரங்கங்களில் நாடக நடிகராகவும் உயர்ந்தார்.
ஓவியக்கூடம்
இயற்கையின் எழில் காட்சிகளையும், நகர வாழ்க்கையையும் மய்யமாகக் கொண்டு இவர் வரைந்த சிறந்த ஓவியங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இவரது ஓவியங்களைக் காட்சிப்படுத்த முதன்முதலாக இவர் ஒரு புதிய முறையைக் கையாண்டார். அந்த முறை டையோரமா (Diorama) என்று அழைக்கப்பட்டது. அதாவது, வட்டவடிவில் ஓவிய அரங்கு வடிவு அமைக்கப்பட்டது; மக்களிடம் இம்முறை நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆதலால் இவர் தொடர்ந்து பல ஓவியங்கள் வரைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டார்.
புதிய முயற்சி
இயற்கைக் காட்சிகளை உள்ளபடியே வரைவதற்கு அப்ஸ்கியூரா (Obscura) என்ற ஒளிப்படப் பெட்டியைப் பயன்படுத்தினார். இந்த ஒளிப்படப் பெட்டியின் முற்பகுதியில் காட்சியைக் காணுவதற்கு ஏற்ற லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும், ஒளிபுகாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட இந்தப் பெட்டியின் பிற்பகுதியில் காட்சியைக் காணுவதற்கு ஏற்ப ஒரு தாள் (Paper) பொருத்தப்பட்டிருக்கும். இந்த முறையில் தாளில் (அதாவது Paperஇல்) விழும் காட்சியை ஓவியமாக மாற்றும் நுட்பத்தைக் கண்டறிந்தார். இதன்மூலம் இயற்கைக் காட்சிகளை நேரடியாகக் காண்பதுபோல் வடிவமைத்தார். இந்த முயற்சிதான் புகைப்படக் கலையை இவர் கண்டுபிடிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
முதல் புகைப்படம்
அப்ஸ்கியூரா (Obscura) ஒளிப்படப் பெட்டியில் பேப்பர் மீது விழும் காட்சியை நிலைநிறுத்துவதற்கு இவர் பல வேதிப்பொருட்களைப் பயன்படுத்தினார். இவரைப் போலவே ஜோசப் நைஸ்போர் (Joseph Nicebore) என்பவரும் இவரது துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். 1829ஆம் ஆண்டு இவ்விருவரும் இணைந்து தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர்.
ஜோசப் நைஸ்போர்
இந்தச் சூழலில் நைஸ்போர் மறைவுற்றார். ஆனாலும் டாகுரே தனியராக மனம் சோர்ந்து போகாமல் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1839ஆம் ஆண்டு வெற்றியும் கண்டார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ – இவரது ஆராய்ச்சியின் முடிவை பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் (France Academy of Science) ஏற்றுக்கொண்டு, வாழ்நாள் முழுதும் சிரமமின்றி வாழ்வதற்கான சன்மானம் தந்து மகிழ்வித்தது. 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் இவரது கண்டுபிடிப்பை பிரான்ஸ் நாட்டின் அரசு உலகிற்கு அர்ப்பணித்து நீடித்த புகழைப் பெற்றது.
பயன்பாடு
இந்த அரிய கண்டுபிடிப்பு அறிவியலுக்கும், வாழ்வியலுக்கும் பெரிதும் துணைநின்றது. இதைத் தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவே இப்புகைப்படக் கலையை ஏற்றுக் கொண்டனர். அறிவியல் உலகில் புகைப்படக் காட்சிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றுவதற்குக் காரணமாக அமைந்தன. அதாவது, வியட்நாம் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படம் அப்போரையே முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத ஓர் உண்மை.
சுருங்கச் சொன்னால், இன்று புகைப்படம் இல்லா நிகழ்வுகள் இல்லை; புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள்; இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வரப்போகும் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் பெட்டகங்கள். இதனைக் கண்டு நம்மையெல்லாம் ஒன்றாக இணைத்த லூயிஸ் டாகுரே 1851ஆம் ஆண்டு மறைவுற்றார்; எனினும் அவரது புகைப்படக் கலை என்றென்றும் நீடித்து மனித சமுதாயத்திற்கு நிலையான மகிழ்வினை அளித்து உயர்ந்துள்ளது.