பட்டினிக்குப் பாதி! பருக நீரின்றி மீதி!!
கதிரவன் கண்ணில் சீற்றம்
காலநிலையால் மண்ணில் மாற்றம்
அய்ந்தில் நான்கு ஒழியப்போகுது
அய்ந்தாவது நிலமட்டும் மலியப்போகுது
வானம் அழும்போது மட்டும்
பூமிக்கு சிரிப்பு கிட்டும்
வானம் சிரிக்குது இன்று
பூமி அழுவதைக் கண்டு.
ஆற்றுப் பெருக்கற்றுப் போச்சு
அள்ளிய மணலும் விலையாச்சு
ஊற்றில் நீரும் ஊறவில்லை
உறுபசி போக்க உணவில்லை
வெள்ளம் வந்தால் மோசம்
விளைபொருள் எல்லாம் நாசம்
வெள்ளத்தைச் சேமிப்பதில் வேசம்
உள்ளத்தில் அதற்கில்லை பாசம்
நிலத்தடி நீரோ படுபாதாளம்
நீரின் செலவோ வெகுதாராளம்
காடுகள் விளையாமல் மலடானது
மாடுகள் சந்தையில் அடிமாடானது
மக்கட் தொகைப் பெருக்கத்தால்
மரங்களை வெட்டினான் விருப்பத்தால்
காட்டையும் கழனியையும் வீடாக்கினான்
நாட்டைத்தான் பொட்டல் காடாக்கினான்
இயற்கையை மனிதன் ஒழித்தான் இயற்கை மனிதனைப் பழித்தது
செய்நன்றி மறந்தது மானுடம்
செத்துமடியப் போகுது உயிரினம்
நீரின்றி அமையாது உலகம்
நினைக்கையில் நெஞ்சுக்குள் கலக்கம்
பட்டினிக்குப் பலியாகப்போகுது பாதி
பருகநீரின்றி அழியப்போகுது மீதி
– மின்சாரம் வெ. முருகேசன், விருதுநகர்