மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?
ஒரு குழந்தை கணக்குப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும், இதற்குக் காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.
மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின்படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஒரு சிறப்புத் தன்மைக்குக் காரணமான சிறப்புக் காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன்படி, பள்ளி சென்று படிப்பதற்குப் பொது நுண்ணறிவுக் காரணியும் அதோடு ஏதோ ஒரு படத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்புக் காரணியும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லாப் பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்தப் பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஓவியம், இசை, நடனம், சமூக சேவை என வேறு ஏதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்குச் செல்லலாம் என்று தெரிந்து கொள்ள வசதியாக பணி விவர அகராதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களைக் கண்டறிந்து விடுகிறார்கள். பின்பு, அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்குப் பெற்றோர் உதவி செய்கிறார்கள்.
சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக் கொண்டிருக்கவே விருப்பப்படுவர்.
பேசாமல் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவெனப் பேசக் கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும். தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தேர்ந்தெடுத்துப் படித்தார்களோ அதே துறையைத் தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்தத் துறையைச் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதைப் புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியாது. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்!
_ நன்றி: அணுஅறிவியல் துளி
//