உணவைப் பாதுகாப்போம்!
உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு வீணாகும் உணவும் பூமிப்பந்தின் பாதுகாப்பும் என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டது. உணவைப் பாதுகாப்பீர், அதன் மூலம் பூமியைப் பாதுகாப்பீர், உணவை வீணாக்குவது உலகை வீணாக்குவதைப் போன்றதாகும் என்ற மய்யக் கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர்களுக்காக நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியை அய்.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஜப்பானில் உள்ள உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பும் நிக்கான் நிறுவனமும் இணைந்து நடத்தின. மொத்தம் 63,700 ஓவியங்கள் வந்து சேர்ந்தன.
இவற்றுள் இலங்கையைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி கந்தகே கியாரா செனுவி பேரேரா வரைந்த ஓவியம் ஆசியா_பசிபிக் நாடுகளில் சிறந்த ஓவியமாகத் தேர்வு செய்யப்பட்டது. சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியுடன் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு பெரிய உண்டியலில் சேமிப்பதைப் போன்று பெரேரா வரைந்துள்ளார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே நாணயங்களை உண்டியலில் சேகரிக்கும் பழக்கம் உடைய பெரேரா, அந்தப் பழக்கத்தை அப்படியே காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவு உண்டியலில் சேமிப்பதன் மூலம் இந்த உலகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை விளக்கும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், உலகச் சிறுவர்கள் அனைவரும் சிறு எறும்புகளைப் போல உணவைச் சேமித்தால் எதிர்காலத்தில் இந்த உலகத்தை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை இந்த ஓவியத்தின்மூலம் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் முதல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சமி ஆசிம் கானும், இரண்டாம் பரிசை ரோமானியாவைச் சேர்ந்த 10 வயது ஷ்ஆடா மரியா கியோன்டுவும் பெற்றுள்ளனர்.