அறிஞர்களின் வாழ்வில்….
மில்டனின் சொல்லாற்றல்
லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.
இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.
நாவலாசிரியரின் நகைச்சுவை
இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.