குரங்குகளின் வெந்நீர்க் குளியல்
குளிர் காலம் வந்ததும் நம்மில் பெரும்பாலோர் வெந்நீரில்தான் குளிப்போம். மனிதர்கள் மட்டுமல்ல, ஜப்பான் நாட்டில் உள்ள ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்காவில் இருக்கும் குட்டைவால் குரங்குகள்கூட வெந்நீரில்தான் குளிக்கின்றனவாம். குரங்குகளுக்கு யார் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள் என்று கேள்வி எழுகிறதா?
ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்கா யொகோபு நதி பாய்ந்தோடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா அமைந்துள்ள காடுகள் குளிர்காலத்தில் உறைந்து பனிக்கட்டிபோலக் காட்சியளிக்குமாம். மனிதர்களைப் போன்ற இயல்பினைக் கொண்ட இந்தக் குரங்குகள் பனியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைத்தன.
பூங்காவிலிருந்து 850 மீட்டர் உயரத்தில் உள்ள ஜிகோகுடானி என்ற இடத்திற்கு ஓடின. குளிர்காலத்தில் இந்தக் குரங்குகள் செல்லும்போது பூங்காவில் உள்ள காவலாளிகள் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பாறைகளுக்கு மேலே பனிக்கட்டிகள் உறைந்து கிடக்க, பாறைகளுக்கு நடுவே உள்ள குட்டைகளில் வெந்நீர் நிரம்பியுள்ளதாம். அந்த வெந்நீரில் குரங்குகள் மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடியுள்ளன.
பூமிக்கடியில் இருக்கும் வெப்பத்தினால் பாறைப் பிளவுகளில் இருந்து வரும் நீர் வெந்நீராக வெளியேறுகிறது. அந்த வெந்நீர் அங்கேயே தங்கிவிடுவதால் நீரின் சூடு தணியாமல் கொதித்து ஆவியாக வெளியேறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள பனிக்காலம் முடிந்ததும் தனது இருப்பிடத்தைத் தேடிச் சென்றுவிடுகின்றன. வெந்நீர்க் குளத்தில் குளியல் போடும் குரங்குகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்து செல்கின்றனராம்.