’சும்மா மொக்க போடாதீங்க’
’சும்மா மொக்க போடாதீங்க’
நாங்கள்லாம் வெயிட்டன ஆளு!
-ஹுவாமை
சிறிசு சிறிசுதான். பெரிசு பெரிசுதான். சிறிசு என்னிக்குமே சிறிசுதான். பெரிசு என்னிக்குமே பெரிசில்ல என்று உளறிக்கொண்டு நடந்துசென்ற ஒருவரை பெரியார்பிஞ்சு யாழினி தடுத்து நிறுத்தி, நானும் ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டு இருக்கேன். சிறிசு சிறிசுதான்.
பெரிசு பெரிசுதான். சிறிசு என்னிக்குமே சிறிசுதான். பெரிசு என்னிக்குமே பெரிசில்ல_ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே, ஏன் இப்படிச் சொல்றீங்க. புரியவே மாட்டேங்குதே? என்று கேட்டாள். அவர் யாழினியைப் பார்த்துவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தார். அதைப் பார்த்து யாழினியே, நான் எங்கப்பா, அம்மாகூட கடைக்கு வந்தேன்.
பக்கத்துக் கடையில இருக்காங்க. அவங்க வாங்றதுக்குள்ள இதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிடணும்னு இங்க வந்துட்டேன் -என்று கூறியதும், அவர் யாழினி உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தார்.
ம்.. இது கேள்விகளின் காலம்தான். கேள்விகளின் காலம்தான். நான் உளறுனது உனக்கு என்னன்னு தெரியணும் அவ்வளவுதானே? யாழினி அவசரமாக ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினாள். அவர் முகத்தில் புன்னகை அரும்புவிட்டது. சொல்றேன் செல்றேன்னு குதுகலமாகக் கூறியவாறே, உங்க பேரு என்ன? என்று கேட்டார்.
இவள், யாழினி என்று கூறியதும், ம்… யாழினி, எம் பேரு ஹுவாமை. உங்க எடை என்ன? அவள் சற்றுத் தடுமாறியதும், வெய்ட், வெயிட் என்றார். 15 கிலோ என்றாள். என்னோட எடை 70 கிலோ என்றதும், யாழினியின் கண்கள் விரிந்தன. எங்கப்பாகூட 72 என்றாள். உடனே இவர், அப்படின்னா, அதாவது, எடையில நீங்க சிறிசு, நான் பெரிசு, உங்கப்பா என்னைவிட பெரிசு.
இப்பப் புரியுதா? என்று அவர் யாழினியின் முகத்தை ஆவலுடன் பார்த்தார். அவள் உதட்டைப் பிதுக்கி ஏமாற்றமாகத் தலையை இடம் வலமாக இல்லை என்பதுபோல ஆட்டினாள்.
சரி, இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்ல முயற்சி பண்றேன். அதாவது, இந்த பிரபஞ்சத்தோட முதல் துகள்னு சொல்லப்படற ஹிக்ஸ்போசான்தான் இருக்கிறதுலேயே சிறிசு. அதுக்கும் சிறிசு இப்போதைக்கு இல்லே. அதிலேர்ந்து பெருசாகி, பெருசாகி யாழினி வரைக்கும் வந்துட்டாலும், உங்க எடை என்னைவிடச் சிறிசுதான்.
என்னோடு ஒப்பிடும்போது நீங்க சிறிசு சிறிசுதான். நான் பெரிசு பெரிசுதான். ஆனா, உங்கப்பாவோட என்னை ஒப்பிடும்போது நான் சிறிசாயிட்டேன். அதனால பெரிசு என்னிக்குமே பெரிசு இல்லே. சரியா? என்றதும், ஏதோ கொஞ்சம் புரிந்தது போல யாழினி முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
ஆனால், இன்னமும் இதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவள் முகத்தில் குமிழியிட்டது. அதைப் பார்த்துப் புரிந்துகொண்ட ஹுவாமை, இப்ப, யானைக்கு முன்னால நீயும் சிறிசு. நானும் சிறிசு. உங்க அப்பாவும் சிறிசு. இல்லையா? ஆமாம் என்ற குரலைத் தொடர்ந்து, திமிங்கலத்துக்கு முன்னால யானையே சிறிசு.
இப்படிப் போய்க்கிட்டே இருக்கும். அதனாலதான் சிறிசு என்னிக்கும் சிறிசுதான். பெரிசு என்னிக்குமே பெரிசில்ல. புரியுதா என்றதும், ஓரளவு புரிந்துகொண்ட யாழினி,
சரி, உருவத்திலையும், எடையிலையும் திமிங்கலம்தான் பெரிசு. அதுக்குமேல எடையுள்ளது இந்தப் பூமியில இப்ப இல்லையே? என்றதும், ஹுவாமை மிகுந்த உற்சாகமாக, ஏன் பூமியே இருக்கே? என்றதும், யாழினி அதிர்ச்சியே அடைந்துவிட்டாள். பூமியா… ஓ!.. ஆமா, எடையின்னா பூமியைச் சேர்த்துக்க வேண்டியதுதான்.
அட! அடுத்தது சூரியக் குடும்பத்தையும் சேர்த்துக்குவீங்களா? என்றதும். அதேதான் என்று பொதுஇடம் என்றும் பாராமல் கூத்தாடினார் ஹுவாமை. ஆவல் தாங்காமல் யாழினி, எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் ப்ளிஸ் என்றாள்.
ம்… கண்டிப்பா சொல்றேன். பூமியோட எடையை விண்வெளியில நிறைன்னு சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தா பூமியோட நிறை 5.97219 ஜ் 1024 கிலோ கிராம் என்று கூறியதும் அவளுக்குப் புரியவேயில்லை.
அதைப் புரிந்துகொண்ட இவர் மாற்றிக்கூற எண்ணி, 5.972190000000000000000000 கிலோ கிராம் என்று வரிசையாக விரல்விட்டு எண்ணி சுழியம் சுழியம் என்று சொல்லி முடிப்பதற்குள் யாழினி முகத்தைச் சுழித்தாள். இவர் சற்று யோசித்து, 6 பில்லியன் குவாடிரில்லியன் என்றார் இறுதியாக. அதற்குமேல் அவரைச் சோதிக்க விரும்பாத யாழினி.
சரி எனக்குப் புரிந்துவிட்டது. எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
பூமியும், ஏழு கோள்களும், அதன் துணைக் கோள்களும் இவை எல்லாம் சேர்ந்தே சூரியனோட எடையில் வெறும் 1 விழுக்காடுதான். சூரியன் 99 விழுக்காடு. யாழினி கண்களைப் பெரிதாக விரித்து இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவ்….வளவு பெ…..ருசு நம்ம சூரியன்.
இவ்வளவு பெரிய சூரியக் குடும்பம் போல, ஆயிரமாயிரம் குடும்பங்கள் சேர்ந்தது பால்வெளி அண்டம். இதேபோல ஆயிரமாயிரம் பால்வெளி அண்டம் சேர்ந்தது பேரண்டம். இன்னும், இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு எல்லையே கிடையாது என்று இவர் சொல்லிக்கொண்டேயிருக்க யாழினி வியப்பின் எல்லைக்கே போய் பேச்சு வராமல் சிலையென நின்றுவிட்டாள்.]
யாழினி, யாழினி என்ற குரல் கேட்டபிறகுதான் கலைந்தாள். துறுதுறு வென்று அவரருகில் சென்று கமுக்கமாக, எங்க அப்பா அம்மா தேடறாங்க. நான் வர்றேன். ஆமா, மறுபடியும் உங்கள எங்க பார்க்கிறது என்றாள். இவரும் கமுக்கமாகவே, அடுத்த பெரியார் பிஞ்சு மாத இதழ்ல பார்க்கலாம் என்று கூற, யாழினி ஓடிச் சென்று தனது பெற்றோருடன் சேர்ந்து கொண்டாள்.
இரு சக்கர வாகனத்தில் மூவரும் சென்று கொண்டிருக்க, யாழினி இருவருக்கும் கேட்கும் விதமாகவே, சிறிசு சிறிசுதான். பெரிசு பெரிசுதான். சிறிசு என்னிக்குமே சிறிசுதான். ஆனா, பெரிசு என்னிக்குமே பெரிசு இல்ல என்று கூறினாள்.
அவளுடைய அப்பா, குழப்பதுடன், என்னம்மா இது. யார் சொல்லிக் குடுத்தா? என்று கேட்க, யாழினி சொல்லத் தொடங்கினாள். யாழினி சொன்னதை நீங்கள் கேட்க வேண்டுமா? இதை மேலிருந்து மீண்டுமொருமுறை படித்துவிடுங்கள்.