ஆரோக்கிய உணவு
ஆரோக்கிய உணவு
விளாம்பழம்
உடலுக்கு வலிமை தரும் பழங்களுள் விளாம்பழமும் ஒன்றாகும். எனினும், குறிப்பிட்ட சில நாள்களில் மட்டுமே விற்பனைக்கு அதிகமாக வரும் விளாம்பழம் என்ன காரணத்தினாலோ மக்களால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. விளாம்பழத்தில் உள்ள சத்துகளை மனதில் கொண்டு, இனியாவது உண்ணத் தொடங்குவோம்.
ரூட்டேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த விளாம்பழத்தின் தாவரவியல் பெயர் தற்போது லிமோனியா அசிடோஸ்ஸிமா (Limonia Acidossima) என்பதாகும். ஃபெரோனி எலிபேன்டம் (Ferroni Elephantam) என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்டது. யானைக்குப் பிடித்த பழங்களுள் விளாம்பழமும் ஒன்று என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மஞ்சள் விளா, கோட் விளா என இந்தியாவில் இரு வகைகள் உள்ளன. தமிழகத்தில் பெரு விளா, சித்தி விளா, குட்டி விளா என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் பெரு விளா மட்டுமே விற்பனையில் உள்ளது. வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை என்ற வேறு பெயர்களாலும் விளாம்பழம் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் உட் ஆப்பிள் (Wood Apple) என்பதாகும்.
விளாம்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, பி2 உள்ளன. விளாம்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் அணுகாது, ஆயுள் நீடிக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரித்து அறிவு வளர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் எலும்புகளும் பலப்படும். செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து நல்ல பசியைத் தூண்டும்.
வயதான காலத்தில் எலும்புகள் பலமிழந்து உடைவதால் ஏற்படும் ஆஸ்டியோபெரோலிஸ் என்ற நோயிலிருந்து பாதுகாக்கும். பற்களை உறுதியாக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். இதிலுள்ள பி-2 நரம்புகளுக்கும் இதயத்திற்கும் நல்ல பலத்தினைக் கொடுக்கும்.