புகை நமக்கு பகை!
குமரேசன் ஏழாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். அவனுடைய அப்பாவுக்கு புகையிலை பழக்கம் இருந்தது. அதன் விளைவாக புற்றுநோய் ஏற்பட்டு உயிர் இழந்தார். அவன் அப்பாவை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தான். தன் அப்பா இறந்ததை நினைத்து பள்ளிக்கூடமும் செல்லவில்லை. சிறிது நாட்கள் கழித்து தன்னுடைய அம்மா, ஆசிரியர், வகுப்பு நண்பர்கள் வற்புறுத்தியதால் மீண்டும் வகுப்புக்கு வந்தான். எதிரிலுள்ள டீக்கடையில் தண்ணீர் குடிக்கச் செல்லும்போது. ஒருவர் புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.
என்ன நினைத்தானோ குமரேசன் அந்த சிகரெட்டை தட்டிவிட்டான். புகைபிடித்துக் கொண்டு இருந்தவர் அவனை அடித்துவிட்டார். குமரேசனோ, “எதற்கு அடித்தீர்கள்?’’ என்று கேட்டான். அதற்கு அந்த சிகரெட்காரர், “ஏன்டா என்னோட சிகரெட்ட தட்டிவிட்ட?’’ என்று எகிறினார்.
“இல்ல அண்ணா எங்க அப்பா புகைபிடிச்சதாலதான் இறந்தாரு. அதனால தான் நான் தட்டிவிட்டேன்’’
“உங்க அப்பா இறந்துட்டாருன்னு என்னோட சிகரெட்ட ஏன்டா தட்டி விடுற”
“இல்ல சிகரெட்டு பிடிச்ச உங்களுக்கும் நோய் வரும். எங்களுக்கு நோய் வரும், அதாண்ணா’’
“எனக்கு நோய் வரும் சரி! உங்களுக்கு எப்படி நோய் வரும்”
“அதுவா நீங்க வெளிவிடுற புகைய நாங்க சுவாசிச்சா அது எங்களுக்கு நோய் ஏற்படுத்தும். பொதுமக்களுக்கும் அதிகமாக நோய் வரும் அதனால் புகைபிடிக்காதிங்கண்ணா’’
“சரிப்பா சிகரெட் பிடிக்கமாட்டேன்பா! சரி நீ போப்பா!’’ என்றார்.
”சரி நா போயிட்டுவரேன்’’ என்று கூறிவிட்டு தன் அப்பாவைப் போல மற்றொருவர் இறந்து போவதை தடுத்துவிட்ட மனநிறைவுடன் குமரேசன் நடந்து சென்றான்.
– அ.ம.வேலவன்