விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பயணம்
– சரவணா இராசேந்திரன்
இஸ்ரோ (ISRO)
இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவில் இருந்து துவங்கியது. மித்திரா வானொலி அலைகள் மூலம் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்யச் சோதனைகளை நிகழ்த்தினார். பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன், மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்குப் பயனாகும் அறிவியல் கொள்கைகளை உருவாக்கினார்கள்.
இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்திய விண்வெளித் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன விண்வெளி ஆய்வுகளை விக்ரம் சாராபாய், ஹோமி ஜகாங்கீர் பாபா இருவரும் வழிநடத்தினர். 1826இல் மும்பையில் உள்ள கொலாபாவில் தொடங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப்புலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வானிலையியலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் திரட்டப்பட்டன.
1954ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வானாய்வு மய்யம் நிறுவப்பட்டது. 1957ஆம் ஆண்டில் ஆந்திராவில் அய்தராபாத்தில் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ரங்க்பூர் வானாய்வு மய்யம் நிறுவப்பட்டது. இந்த இரு மய்யங்களும் அய்க்கிய அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின. விண்வெளித்துறை வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பங்கும் இருந்தது. 1962ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (INCOSPAR – Indian National Committee for Space Research )அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டில் இன்கோஸ்பாருக்கு ’இஸ்ரோ’ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ISRO) என்று புதிய பெயர் சூட்டினர்.
இந்தியாவில் உள்ள செயற்கைகோள்
ஆய்வு மய்யங்கள்
இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ள அந்தரிக்ஸ் பவனில் இயங்குகிறது.
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ளது. இங்கு ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில துறைகள்: சூரியக் கோள்களின் இயற்பியல், அகச்சிவப்பு வானியல், புவி- அண்ட இயற்பியல், மின்ம இயற்பியல், வானியற்பியல், தொல்பொருளியல் மற்றும் நீரியல். உதயப்பூரில் உள்ள ஆய்வக-மொன்றும் இந்த மய்யத்தின் கீழ் இயங்குகிறது.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் ஆந்திராவில் உள்ள சித்தூரில் உள்ளது, இங்கிருந்து தான் இந்தியாவெங்கும் புயல், மழை மற்றும் பருவநிலை மாற்ற தகவல்கள் வழங்கப்படுகின்றன. வளிமண்டல அறிவியல், விண்வெளி அறிவியலில் அடிப்படை மற்றும் பயன்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
அகமதாபாத் விண்வெளி ஆய்வு மய்யத்தில் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும் வகையிலான பல கூறுகள்பற்றி ஆராயப்படுகின்றன. அதன் துறைகளில் சில: புவியளவையியல், செயற்கைக்கோள்மூலமான தொலைத்தொடர்பு, அளவியல், தொலையுணர்தல், வானிலையியல், சுற்றுச்சூழல் மேற்பார்வை ஆகியன. கூடுதலாக டில்லி செயற்கைக்கோள் புவி மய்யத்தையும் இந்த மய்யமே இயக்குகிறது.
வடகிழக்கு விண்வெளி ஆய்வு மய்யம் சில்லாங் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமுகமாக தொலையுணர்தல், புவியியல் தகவல் முறைமை, செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு துறைகளில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றை மேற்கொள்கின்றன.
இந்தியா பூமியைச் சுற்றும் செயற்கைக்-கோள்களைத் தவிர நிலவு ஆய்வுக்கலம் (சந்திராயன்), செவ்வாய்க் கோள் ஆய்வுக்கலன் (மங்கள்யான்) போன்றவற்றை சோதனைக்கு அனுப்பியுள்ளது. தொடர்ந்து சந்திராயன் 2 என்னும் ஆய்வுக்கலத்தை 2018இல் அனுப்பத் தயாராகிக் கொண்டுள்ளது. மனிதர்கள் தங்கி பணியாற்ற மிர் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை ருஷ்யா அனுப்பியது, அதன் செயல்படும் காலம் முடிந்த பிறகு அமெரிக்கா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது, தற்போது அதில் முக்கிய நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் தங்கி ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.