திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்
18 வயதுக்கு முன் ஜாதி -மதங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்பது உட்பட முக்கிய கருத்துகள் அன்று 29.9.2018 திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் பிரகடனமாக அறிவிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதனை வெளியிட்டு, அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தப் பிரகடனம் வருமாறு:
நம் நாட்டில் குழந்தைகளுக்குச் சட்டப்படி தெளிவான பக்குவம் 18 வயதில்தான் வருகிறது என்று அரசுகள், சட்டங்கள் கூறுகின்றன. அதனால்தான் பெற்றோர்களையோ அல்லது உற்றார், உறவினர்களையோ குழந்தைகளின் காப்பாளர்களாக (Guardians) போடுகிறார்கள்! 18 வயதுக்குப் பிறகுதானே அவர்களுக்கு வாக்குரிமை தரப்படுகிறது – நமது ஜனநாயகத்தில்!
* அப்படி இருக்கும்போது குழந்தைகளை இந்த மதத்தவர், இந்த ஜாதியினர் என்று எப்படி முத்திரை குத்துகிறீர்கள்? சட்டப்படி எப்படி அவ்வாறு குறிப்பிடுகின்றீர்கள்?
* 18 வயதுக்குப் பின் எந்த மதம் என்று தேர்வு செய்யவோ அல்லது எந்த மதமும், ஜாதியும் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் – நாங்கள் மனிதர்கள் என்று அறிவித்திடவோ அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதானே நியாயம் – அதுதானே மனித உரிமையும்கூட!
* அதுவரை குழந்தைகளுக்கு ஜாதி, மத, முத்திரை குத்தாமல் மனிதர்கள் என்று சொல்ல உரிமை தரவேண்டும் என்பது அடிப்படைக் கோரிக்கையாகும்.
* மதச் சுதந்திரம் என்பதில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும். பெற்றோர்கள் விரும்புவதாலேயே அவர்கள் விரும்பும் ஜாதியிலோ, மதத்திலோ இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
* பெரியவர்கள் என்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். எனவே, அவர்களை மத வணக்கக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லுவது தவறு. பள்ளிகளில் கட்டாயமாக மதங்களை அவர்களிடத்தில் ஏன் புகுத்த வேண்டும்?
* குழந்தை மணம் எப்படித் தவறானதோ அது போன்றதே குழந்தைகள் மதமும்கூட!
* இதைத் தடுக்கப் புது சட்டம் தேவையே! பதினெட்டு வயதில் எடுக்கவேண்டிய முடிவுகளை பச்சிளம் வயதில் அவர்கள் மீது திணிக்காதீர்கள்!
* இது மனித உரிமைக்கும் எதிரானது!
* குழந்தைகள் மதமற்றவர்கள்; ஜாதியற்றவர்கள் என்று இம்மாநாடு பிரகடனப்படுத்திக் கொள்கிறது.
* சட்டங்கள் பல இருந்தும் செயல்பாட்டில் முடக்கங்களே அதிகம்.
குழந்தைத் திருமணங்கள்,
குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தல்,
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை,
குழந்தைகள் கடத்தல்
இவற்றின் மீது உடனடியான தீர்ப்புகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் இக்குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. குறிப்பாகப் பெண் குழந்தைகள் பிரச்சினைகள் பற்றி சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் எடுத்துரைக்க பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தைக் குறட்டைத் தூக்கத்திலிருந்து எழுப்பி நிறைவேற்ற வேண்டும்.
* பாடப் புத்தகச் சுமையை குழந்தைகள் முதுகில் ஏற்றி, சிறிய வயதிலேயே முதுகுகளை ஒடிக்கக் கூடாது.
* படிப்பென்றால் பயம் – அச்சுறுத்தல் என்ற நிலையை பிஞ்சு உள்ளத்தில் விதைக்கக் கூடாது.
* படிக்கும் அறிவில் ஒருவன் கெட்டிக்காரன், இன்னொருவன் முட்டாள் என்ற பேதத்தை ஊட்டக் கூடாது.
* கூழாங்கற்களையும் வைரமாக மாற்றுவதற்குத் தானே பள்ளிக்கூடம்.
* இரண்டு வயது, மூன்று வயதுகளிலேயே பள்ளிகளுக்கு பிள்ளைகளை துரத்தாதீர்கள்.
* கண்டிப்பாக பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஏன் யாருமே பிள்ளைகளை அடிக்கக் கூடாது.
* விளையாட்டு, ஆடல், பாடல், கலையம்சத்தோடு பிள்ளைகளை கல்வியின் பால் ஈர்க்க வேண்டும்.
* குழந்தைகளுக்கான நூல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
(மாநாட்டு செய்தி தொடரும்)