செப்டம்பர் 16 – உலக அமைதி நாள்
அமைதி காப்போம்!
‘அணுவை ஆக்கப் பணிக்கன்றி
அழிவுக் காகக் கொள்ளாதீர்’
அணுவின் ஆற்றல் அறிந்திட்ட
அய்ன்ஸ்டின் அன்றே உரைத்திட்டார்;
குறுக்கு வழியில் செல்கின்ற
கொடியோ ருக்குத் துணையாகச்
சிறுத்த மதியோர் செய்திட்டார்
சீறி அழிக்கும் அணுகுண்டை!
நஞ்சை நெஞ்சுள் கொண்டோரின்
நாட்டை ஆளும் பேராசை
அஞ்ச வைக்கும் அகிலத்தை;
அவர்தம் கரத்தில் அணுகுண்டு!
வஞ்ச நெஞ்சம் கொண்டோரால்
வன்மு றைகள் வளர்ந்தோங்கும்;
அஞ்ச வைக்கும் அணுகுண்டை
அழித்து அமைதி காப்போம்வா!
அறிவை வளர்க்கும் அறிவியலை
அமைதிக் காகப் பயன்படுத்திச்
செறிவாய் மனித நேயத்தைச்
சிந்தை தன்னில் ஏற்றிடுவோம்!
கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை