அறிவியலில் தோல்வி இல்லை
செவ்வாய்கலன் 2 (சந்திரயானுக்கு) என்ன ஆயிற்று?
சரா
செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 – 2:30 மணியளவில் சந்திரயான் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான ‘லேண்டர்’ தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது ‘லேண்டர்’ விக்ரமுடனான தகவல் தொடர்பு இழக்கப்பட்டது. சந்திரயான் 2 திட்டம் இரு கூறுகளை உள்ளடக்கியது. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்ப செயல்பாடு. ஆர்பிட்டர் என்பது அறிவியல் சார்ந்தது. லேண்டரின் தரையிறக்கம் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் தொழில்நுட்ப செயல்பாட்டைச் சார்ந்தவை.
இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர்களைவிட இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வித்தியாசமானது. இது நமக்கு அதிகப்படியான தகவல்களை அளிக்கும். எனவே, லேண்டரின் நிலை குறித்து பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தன. மீண்டும் லேண்டரை தொடர்பு கொள்ளமுடியுமா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சந்திரயான் குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “சந்திரயான் 2 திட்டம் மிகவும் நுட்பமான பணித்திட்டம். இதற்கு முன் இஸ்ரோ முன்னெடுத்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இது ஒரு பெரிய (Foot Step) படிக்கல். ஜூலை 22, 2019இல் சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து இந்தியா மட்டுமல்ல; இந்த உலகமே ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்புகளுடனும், இதன் முன்னேற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தன. இது நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல; மொத்த நிலவையும் ஆராய்வதற்கான நோக்கம் கொண்ட முற்றிலும் வேறுபட்ட திட்டம் இது.
சரியான சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் ஆர்பிட்டர், நிலவில் ஏற்படும் மாற்றங்கள், துருவங்களில் நீர் மற்றும் கனிமங்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து நாம் அதிகம் புரிந்து கொள்ள உதவும். இத்திட்டம் 90-95 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது லேண்டர் எனப்படும் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ஆய்வுக்கலத்தின் நிலை என்ன? 2 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த காரணத்தால் அங்கு ஈர்ப்பு விசை மிகவும் குறைவாக உள்ளதால், குறிப்பிட்ட இடத்தைவிட்டு அதிக தொலைவுவரை சென்று விழுந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அப்படி விழும் போது தூசிகள் அதிகம் இருக்குமானால் அது தூசிகளின் உள்ளே புதைந்திருக்க கூடும் முக்கியமாக நிலவின் தென் துருவம் மிகவும் நிலவு தோன்றிய காலத்தில் இருந்தே சூரிய ஒளிபடாத பகுதி, ஆகவே அங்கு கடுங்குளிர் மற்றும் அதிக கதிரியக்கத் தாக்கம் இருக்க வாய்ப்பு உண்டு. இதனால் ஆய்வுக்கலன் பழுதாகி இருக்கலாம். விழுந்த வேகத்தில் ஆய்வுக் கலனின் சமிக்ஞைக் கருவிகள்(ஆண்டனாக்கள்) உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி உடைந்து இருக்கும் தறுவாயில் அது அப்படியே அடுத்த லேண்டர் கருவி அங்கு செல்லும் வரை புதைந்தே இருக்கும். 18-ஆம் தேதி நாசா ஆய்வுக்கலனும் லேண்டர் கருவியில் இருந்து எந்த ஒரு சமிக்ஞையும் வரவில்லை. அது விழுந்த இடம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று கூறிவிட்டது.<