தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CONJUNCTION (இணைப்புச் சொல்)
கே.பாண்டுரங்கன்
பிஞ்சுகளே! நிலாச்சோறு உண்டதுண்டா?… கூட்டாஞ்சோறு தின்றதுண்டா?
அக் காலத்தில் அக்கத்தில், பக்கத்தில் கூடித் தொழில் செய்து பாடி மகிழ்ந்தனர். கூட்டாஞ்சோறு ஆக்கிக் கூடியிருந்து உண்டு மகிழ்ந்தனர். கூட்டாஞ்சோறு என்றால் அந்த உணவு அலாதியான சுவை கொண்டதாக இருக்கும். நட்போடும், மகிழ்வோடும், உறவாடும்; நம் மனமும் பசியாறும்.
சுற்றத்தாரும், அவர்களது பிள்ளைகளும் ஒன்றாக முழு நிலவு நாள்களில், நிலா வெளிச்சத்தில் மகிழ்ச்சியுடன் உணவருந்துவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சுடச்சுட செய்த உணவுகளைக் கலந்து, உருண்டை பிடித்து எல்லாரும் சேர்ந்து உண்பார்கள்.
இக்காலத்திலும்கூட, கூடி உணவு அருந்தும் வழக்கம் உண்டு! (‘கரோனா காலத்தில் அதை நாம் சிந்திக்க முடியாது!’)
இப்படி உறவுகள் இணைப்புக்கு அதாவது ஒன்று கூடுவதற்கு ஒரு கூடும் இடம் தேவைப்படுகிறதல்லவா? அதுபோல, சொற்றொடர் இணைப்புக்கும் ஓர் இணைப்புச்சொல் தேவைப்படும்தானே!
நீங்கள் எல்லோரும் ‘ரயில்வே சந்திப்பு’ (Railway Junction) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்… பல ஊர்களிலிருந்து வரும் ரயில்கள்… மய்யமாக ஒரு ரயில் நிலையத்தைச் சந்தித்து (அடைந்து) விட்டுத்தான் சேர வேண்டிய ஊர்களுக்குப் பிரிந்து செல்லும் அந்த மய்யத்தினை ஆங்கிலத்தில் ‘இரயில்வே ஜங்சன்’ (Railway Junction) என்போம்.
அதேபோல இரண்டு, மூன்று அல்லது நான்கு சாலைகள் மய்யமாக ஓரிடத்தில் சந்தித்தால் அதனையும் ‘கூட்டுரோடு’ அல்லது ‘சாலை சந்திப்பு’ (Road Junction) என்றுதான் சொல்வோம்.
அவ்வாறு, எப்படி ஊர்களுக்கு ‘ரயில்வே சந்திப்பு’ (Railway Junction) தேவைப்படுகிறதோ, எப்படி சாலைகளுக்கு ‘கூட்டு ரோடு’ அல்லது ‘சாலை சந்திப்பு’ (Road Junction) தேவைப்படுகிறதோ,
எப்படி உறவுகள் இணைந்து கொண்டாடுவதற்கு அதாவது ஒன்று கூடுவதற்கு ஒரு கூடும் இடம் (Festival/Excursion) தேவைப்படுகிறதோ,
அதுபோல, தமிழ் அல்லது ஆங்கிலச் சொற்றொடர்களை இணைப்பதற்கு கஞ்ஜங்சன் (Conjunction) அதாவது இணைப்புச்சொல் தேவைப்படுகிறது. அதற்கு ‘சொற்றொடர் சந்திப்பு!’ என்றுகூட பெயரிடலாம்.
சரி… இப்போது இணைப்புக்கு வருவோம்… இணைத்தல் என்றால் சேர்த்தல்… இரண்டு கயிறுகளை இணைக்க முடிச்சுப் போடுவோம். அங்குள்ள முடிச்சு போன்றதுதான் Conjunction… அதாவது –இணைப்புச்சொல்.
(தமிழில்) இணைப்புச் சொற்கள்: (எ.கா.)
“அது மட்டுமல்லாமல்’’, “மேலும்’’, “மற்றும்’’, “பிறகு’’, “முன்னர்’’, “பின்னர்’, “ஆனால்’’, “இருந்தபோதிலும்’’, “அதைப்போல’’…
In English: (Examples)
“Moreover”. “As well as”, “then”, “but”, “before”, “after”, “Although”. “like”, “otherthan that”…
அன்னை மணியம்மையார் பெரியாரைப் பேணிக் காத்தார். (Annai Maniammai looked after Periyar)
-_ இது ஒரு தனிச் சொற்றொடர் (Simple Sentence).
அவர் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தார். (She grew up the Dravidian Movement).
_ இது ஒரு தனி சொற்றொடர் (Simple Sentence).
இவ்விரண்டு சொற்றொடர்களையும் சரியாக இணைத்துச்சொல்ல ஓர் இணைப்புச் சொல் (Conjunction) தேவை.
இங்கு “அதுமட்டுமல்லாமல்’’ (“Moreover”), “மேலும்’’ (“and”) போன்ற இணைப்புச் சொற்கள் (Conjunctions) மிகச் சரியாகப் பொருந்தும்; சரியான பொருள் தரும்.
Annai Maniammai looked after Periyar. Moreover She grew up the Dravidian Movement.
அன்னை மணியம்மையார் பெரியாரைப் பேணிக் காத்தார். அது மட்டுமில்லாமல் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தார்.
Annai Maniammai looked after Periyar and She grew up the Dravidian Movement.
மணியம்மை பெரியாரைப் பேணிக் காத்தார். மேலும் அவர் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தார்.
என்றவாறு இவ்விரண்டு சொற்றொடர்களையும் மேலும் அல்லது அதுமட்டுமில்லாமல் வைத்து இணைத்து 2 விதமாக எழுதலாம்.
சொற்றொடர்களை இணைக்கின்ற எந்த ஒரு சொல்லும் இணைப்புச்சொல்தான்!
பொதுவாக ஆங்கிலத்தில் மூன்று வகை இணைப்புச்சொற்கள் (3 types of Conjunctions) பயனில் இருக்கின்றன.
அவற்றைப் பார்ப்போமா?…
ஒத்துழைப்பு இணைப்புச் சொற்கள் (Coordinating Conjunctions)
சார்பு இணைப்புச் சொற்கள் (Sub-ordinating Conjunctions)
தொடர்பு இணைப்புச் சொற்கள் (Correlative Conjunctions)
இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.