அடிக்கிற வெயிலுக்கு..1 : நீர் எப்படி உருவாகின்றது?
நீர் எப்படி உருவாகின்றது என்ற கேள்வியை நாம் மக்களிடம் கேட்டால் 99 சதவீத மக்கள் தவறான பதிலைத்தான் கூறுவர். நீர், பனிப்பாறை உருகி மலையிலிருந்து ஆறாகவும், கடலாகவும் உருவாகின்றது என்று சிலரும், ஆறும், கடலும் ஆவியாகி, மேகமாகி மழை பெய்கிறது என்று சிலரும் சொல்லலாம். ஆனால், இது ‘நீர் எப்படி உருவாகிறது’ என்கின்ற கேள்விக்கு உரிய பதில் கிடையாது. ‘அது எங்கிருந்து உருவாகிறது’ என்ற கேள்விக்கான பதில்தான்.
நீர் எப்படி உருவாகிறது என்று கேட்டால் H2O, அதாவது இரண்டு ஹைட்ரஜனும், ஓர் ஆக்சிஜனும் ஒன்றாகச் சேர்ந்து உருவாகிறது என்பது தான் இதற்கான எளிமையான விடை ஆகும். ஆனால், இதன் விரிவான விளக்கம் உங்களுக்கு வியப்பும், திகைப்பும் கொடுக்கும்.
இந்த வேதிவினையால் ஏற்படுகின்ற மாற்றம் தான் இந்த உலகின் பெரும்பான்மையான இயக்கத்துக்கும் காரணம் சொல்லலாம் H2O என்று சொல்லக்கூடிய இரண்டு ஹைட்ரஜன், ஓர் ஆக்சிஜன் இரண்டையும் பிடித்து ஒரு குடுவைக்குள் அடைத்தால், உடனே அது நீராக மாறி விடாது. அப்படி உடனே மாறினால் என்னவாகும்?
ஓர் இரும்புத் துண்டின் மேல்’ ஒரு துளி நீர் பட்டால் அது உடனே துருப் பிடிப்பதில்லை. பங்கஸ் என்று சொல்லப்படும். பூஞ்சைகள் ஒரு நொடியில் உடனுக்குடன் வளர்வதில்லை. அந்த தனிமங்களின் வினை பொறுமையாகத்தான் நிகழும். எதனால் அப்படி பொறுமையாக நிகழ்கின்றது என்றால், அந்தத் தனிமத்தின் வினைபடு திறன் தான் காரணமாகிறது. ஒரு தனிமம் இன்னொரு தனிமத்துடன் எப்படி வினை புரிகிறது என்பதை அந்தத் தனிமங்களின் வினைபடு திறன் தான் தீர்மானிக்கிறது.
இந்த மாதிரி வேதிவினைகள் வேகமாக நடந்தால் என்ன ஆகும்? பேராபத்தாக முடியும்! கிட்டத்தட்ட இந்த உலகமே அழிந்துவிடும்; கடல்கள் வற்றிப் போய் விடும் என்று சொல்கிறார்கள். இந்த உலகத்தில் உலோகம் அலோகம் இரண்டுமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? உடனுக்குடன் எல்லா தனிமங்களும் வினை புரிந்தால் என்ன ஆகும்?
உயிரிழந்த ஒரு மனிதனை அல்லது உடலை மண்ணுக்குள் புதைக்கிறார்கள். மண்ணுக்கு இருக்கும் வினைபடு திறன் அந்த உடலை ஒரு சில நாட்களில் அல்லது மாதங்களில் மக்கச் செய்து விடுகிறது. இந்த ஆற்றல் வேகமாக இருந்தால், நாம் தரையில் ஒரு நிமிடம் படுத்து எழுவதற்குள் மக்கிப் போய் விடுவோம். அப்படி என்றால் எவ்வளவு பெரிய ஆபத்து விளையும்!
ஆகையால், இந்த வினைபடு திறன் சீராக இருப்பதால்தான் எல்லா வினைகளும் பொறுமையாகவும், தொடர்ச்சியாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. உலகத்தில் இன்றும் இரும்பு துருப்பிடித்து கொண்டுதான் இருக்கின்றது. பூஞ்சைகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மண் அரிப்பும் நிகழத்தான் செய்கின்றன. சரி! அப்படி என்றால் நீரினை உருவாக்க எத்தனை நாள் தான் ஆகும்? செய்து பார்ப்போமா?
ஒரு குடுவைக்குள் இரண்டு ஹைட்ரஜன், ஓர்ஆக்சிஜன் மூலக்கூறுகளை போட்டுவிட்டு, ஒரு நாள் முழுதும் நீங்க உட்கார்ந்து இருந்தாலும், ஓர் ஆண்டு முழுமையாக உட்கார்ந்திருந்தாலும் ஒன்றுமே ஆகாது! உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்க உட்கார்ந்து இருந்தாலும் நீர் உருவாவதற்கான ஒரு சின்ன அறிகுறி கூட தெரியாது! பல நூற்றாண்டுகள் ஆனாலும் அதில் எதுவுமே நடக்காது! அப்படி என்றால் வினை நடக்கின்றதா? இல்லையா? ஒரு சந்தேகம் வரும். வினை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அவசரப்பட்டு அந்த குடுவையை 500 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஊட்டலாம். அப்படிச் செய்தால் உள்ளே நீர்த் திவலைகள் உருவாகலாம். ஆனால் அந்தக் குடுவை 500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்காமல் வெடித்து விடும் வாய்ப்பும் உள்ளது! எனவே, இயற்கையைத் தவிர இதற்கு வேறு வழியே கிடையாது! சரி தண்ணீர் ஏன் இவ்வளவு பொறுமையாக உண்டாகின்றது?
இரண்டு தனிமங்களும் அதாவது இரண்டு ஹைட்ரஜனும், ஓர் ஆக்சிஜனும் பல கோடி முறை மோதிக் கொள்ள வேண்டும். இந்த பலகோடி மோதல்களிலும் ஒரு சில மோதல்களில் மட்டும்தான் நீர் உண்டாகும். அணுமூலக்கூறுகள் பலமிழந்து ஈர்ப்பு விசையில் இருந்து வெளியே வந்தால்தான் மற்ற தனிமத்துடன் வினைபுரியும். வெப்பம் போன்ற இயற்கைச் சக்திகளுக்குத் தான் ஓர் அணுக்கூறின் கட்டமைப்பை உடைக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது. இதற்கு இன்னுமொரு முக்கியச் சூழல் தேவைப்படுகின்றது. அதாவது இரண்டு ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து இயற்கையாக நீர் உண்டாவதை வேறு எந்த சக்தியும் தடுக்க முடியாத ஒரு சூழல் இருந்தால்தான் இந்த நிகழ்வு உண்டாகும். இப்படித்தான் சில துளிகள் நீர் உண்டாக்குவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள், பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. இப்படி உருவாகின்ற நீரை, நாம் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்!