வைரலான பெரியார் பிஞ்சு!
உடுமலை
‘என்பார்வையில் பெரியார்!’ என்ற தலைப்பில் 5 வயது பெரியார் பிஞ்சு சித்தார்த்தன் பேசிய காணொலி, அதன் கருத்துக்காகவும், அப்பிஞ்சின் உடல்மொழிக்காவும் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொலி உருவானதே ஒரு சுவையான நிகழ்வு. திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டமும், பாரத மிகுமின் நிறுவனத் தோழர்களும் இணைந்து, 2 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “என் பார்வையில் பெரியார்” என்ற தலைப்பிலும், 6 லிருந்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “பெரியார் பேணிய மனிதநேயம்” தலைப்பிலும் பேச்சுப் போட்டியை அறிவித்தனர். 170 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் சித்தர்த்தனும் ஒருவர். ஆனால், அவன் இந்த இரண்டு பிரிவுகளிலுமே கலந்துகொள்ள முடியாது. காரணம், இனிமேல்தான் சித்தார்த்தன் முதல் வகுப்பே செல்லப்போகிறார். அவனுடைய அம்மா நாத்திகா, “சும்மா ஒரு அனுபவத்திற்காகவாவது பேசட்டும்” என்று வேண்டுகோள் வைக்க, ஒருங்கிணைப்-பாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பயிற்சி எடுக்க அவர் பேசிப் பார்த்த பேச்சுதான், இன்று உலக அளவில் வைரலாகி வருகிறது.
சித்தார்த்தனுக்கு தமிழ்மொழியில் பேசவும், படிக்கவும் மிகவும் பிடிக்கும். இதற்காகவே அவரை தற்போது படித்துவரும் விமானப்படைப் பள்ளியிலிருந்து விலகி, தஞ்சை யாகப்பா பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். காரணம், முதலில் படித்த விமானப் படைப் பள்ளியில் ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டும்தான். இந்த 5 வயதுப் பிஞ்சு “தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளியில், தமிழ் ஏன் இல்லை?” என்று வகுப்பாசிரியரிடமே கேட்டாராம்! வகுப்பாசிரியர் என்ன சொல்லமுடியும்! வேறு வழி? பிள்ளையின் ஆர்வத்தை மதித்த பெற்றோர், பள்ளிக்கூடத்தையே மாற்றிவிட்டனர். பழைய பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்து-கொள்ளும் போது, ஆங்கிலத்தில் பேசிவிட்டாலும், அம்மா, இதையே தமிழில் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாகப் பேசியிருப்பேன்” என்பாராம். அப்படியும் ஏராளாமான பரிசுகளை வென்றிருக்கிறார்.
பெரியார் பெருந்தொண்டர் லால்குடி இ.ச.இராவணன் (தேவசகாயம்) குடும்பத்தாரின் 4 ஆம் தலைமுறையும், இலால்குடி மாவட்ட திராவிடர்கழகத் தலைவர் வால்டேர் அவர்களின் பெயரனும் ஆவார் நம் சித்தார்த்தன். பெற்றோர் அமிர்தகணேஷ், நாத்திகா ஆவர். அர்மெடா இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேசன் நிறுவனத்தை நடத்திவரும் அமிர்த கணேஷ் 600-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். சித்தார்த்தனும் எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர் ஆகவேண்டும் என்கிறார்.
சித்தார்த்தனின் பேச்சு பெரியார் வலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட, நம் ஆசிரியர் வீரமணி தாத்தா, அச் சிறுவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார். அமெரிக்க மருத்துவர் சோம.இளங்கோவன், சித்தார்த்தனைப் பாராட்டி ரூ.1000 பரிசு வழங்கினார்.
என் பார்வையில் பெரியார்! என்ற தலைப்பில் சித்தர்த்தன் பேசியிருந்தாலும், அந்தக் காணொலியைப் பார்க்கிறவர்களுக்கு, ‘ஒரு குழந்தையின் பார்வையில் பெரியார்!’ என்ற தலைப்புதான் சரியானது என்று தோன்றும். <