திரைப்படம் – ஜோ ஜோ ரேபிட்
இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெர்மனியில் நடைபெற்ற கொடுமையான நிகழ்வுகளை, கொஞ்சம் கிண்டலான நாடகம் போல, நகைச்சுவையாகப் புரிய வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம்.
ஜோஜோ பெட்ஸ்லர் (Jojo Betzler) என்ற ஜெர்மன் சிறுவனின் வாழ்க்கையை மய்யமாகக் கொண்டு நகர்கிறது. ஜோஜோ, நாஜிப் படையில் முக்கியப் பங்கு பெறுவதை தனது இலட்சியமாகவும், ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரை நிஜவாழ்க்கையில் நல்லவராகவும், நட்புள்ளம் படைத்தவராகவும் கற்பனை செய்து கொள்கிறான். அடோல்ப் ஹிட்லர், ஜோஜோவின் கற்பனை நண்பராகவே படம் முழுவதிலும் வருகின்றார். சிறு வயது என்பதால் ஹீரோயிசம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. 10-14 வயதுச் சிறுவர்களுக்கான ஹிட்லரின் இளைஞர் படையில் (Deutsches Jungvolk in der Hitler Jugend – German Youngsters in the Hitler Youth) சேருகிறான். அவர்கள் தரும் குட்டிக் குட்டி வேலைகளை ஒரு போர்வீரனின் மனநிலையோடு செய்கிறான்.
ஜோஜோவின் தாய் (ரோஸி) அவனுக்கு மாறாக போரினை வெறுப்பவராகவும், அமைதியை விரும்புபவராகவும் உள்ளார். தன் மகன் ஜோஜோவுக்கே தெரியாமல், எல்சா என்ற ஒரு யூத இளம் பெண்ணை தனது வீட்டில் மறைத்து வைக்கிறார். ஜோஜோவின் மறைந்த அக்காவின் வகுப்புத் தோழி தான் எல்சா. அவள் ஒரு யூதப் பெண் என்று அறிந்ததும், நாஜிப் படையில் சேரும் ஆசையினால் அப்பெண்ணிடமிருந்து யூதர்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள நினைக்கிறான் ஜோஜோ. அதை யிமீஷ் ஷிமீநீக்ஷீமீts என்ற பெயரில் படங்களுடன் கூடிய ஒரு புத்தகம் போல உருவாக்குகிறான். அப்படி அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டிருக்கும்பொழுது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வருங்காலக் கணவரைப் பற்றி தெரிந்து கொள்கின்றான். எல்சாவின் மீது இரக்கம் கொண்டு, அவளது காதலன் எழுதியதைப் போன்ற போலித் தந்திகளை உருவாக்கி யூதப்பெண்ணிடம் படிப்பதை வழக்கமாக கொள்கிறான். தொடக்கத்தில் ஹிட்லர் இளைஞர் படையில் சொல்லித் தரப்பட்டதன் அடிப்படையில், யூதர்கள் என்றால் மனிதர்களுக்கு மாறானவர்கள், வில்லன்கள், கொடூரமானவர்கள் என்றே கருதி, எல்சாவைக் காட்டிக் கொடுக்கப் போவதாக மிரட்டுகிறான். பிறகு அவள் மீது அன்பு கொள்ளத் தொடங்குகிறான்.
ஒரு நாள் ஜோஜோ, தன் தாய் ரோஸி நாஜிகளுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகிப்பதைப் பார்க்கிறான். அவளுக்கு தேசப் பற்று இல்லையெனக் கூறி அவளிடம் கோபம் கொள்கிறான். பிறகொரு நாள் ரோஸி, ஜோஜோவுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் போது, இயக்குநர் தாய் ரோசியின் காலணியைப் பார்வையாளர்களுக்கு பதிவு செய்கின்றார். இது எதற்காக என்று குழம்பிய பார்வையாளர்களுக்கு, அடுத்த காட்சியில் ஜோஜோ நகரத்தை சுற்றி வரும்போது, அக்காலணி அணிந்த பெண் பொது தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதை காண்கின்றான் என்பதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களின் மனதைப் பதற வைத்த காட்சி அது. அவனது தாயார் நாஜிப் படைக்கு எதிராகத் துண்டுச் சீட்டுகளை விநியோகம் செய்ததால் நாஜிப்படையினரால் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுவிட்டார்.
சோகத்திலும் கோபத்திலும் இருக்கும் ஜோஜோ வீடு திரும்பிய பின் எல்சாவைக் கொலை செய்ய முற்படுகிறான். அதை செய்ய முடியாமல் அவள் முன் கதறி அழுகிறான். விரைவில் ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைய, தன் நண்பன் மூலம் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிகின்றான்.
போர் முடிந்த தருவாயில், வீடு திரும்பும் ஜோஜோ, எல்சாவின் வருங்கால கணவர் எழுதிய போலிக் கடிதத்தைப் படிக்கத் துவங்குகிறான். அப்போது எல்சா, தான் பொய் கூறியதாகவும் தன் வருங்காலக் கணவர் என்று சொன்ன நேதன் காசநோயால் முன்பே இறந்துவிட்டதாகவும் கூறுகிறாள். பின்னர் இருவரும் ஜெர்மனியை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடிவெடுக்கின்றனர்.
யூதப் பெண்ணுக்கும் ஜோஜோவிற்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லாமையால் அவர்களுடைய உரையாடல்கள் சிறுவர்களின் வெகுளித்தனமான குணங்களை வெளிப்-படுத்துகின்றன. மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, படம் நகர்வதால் பார்ப்பவர்களுக்கு எளிமையாகவும், குழப்பம் இல்லாமலும் கதையை உணரமுடிகிறது. யூதப் பெண்ணுக்கு உதவுவதால் தன் கற்பனை ஹிட்லரிடம் ஜோஜோ வாதாடும் காட்சி, எல்சா மாட்டிக் கொள்வாளோ என்ற படபடப்பு ஜோஜோவைப் போல நம்மையும் தொற்றிக் கொள்ளும் காட்சி, கடைசியில் ஜோஜோவை யூதன் என்று சொல்லி நேச நாட்டுப் படைகளிடமிருந்து தப்புவிக்கும் காட்சி போன்றவை சுவாரசியமான காட்சிகளாகும்.
நாம் பாடங்களில் படிக்கும் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் நடந்தது என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு உதவும்.