மெய் சொல்லல்

மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி!
மெய் சொல்லல் நல்லதப்பா!
கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் – நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் – பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்.
மெய் சொல்லல் நல்லதப்பா!…
பின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும், அன்றி
மன்னவரே எதிர் நின்றாலும் – புலி
தின்னவரே னென்று சொன்னாலும் – நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!…
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்