தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : பண்புச்சொல் அல்லது பெயரடை [ADJECTIVE] – 17
இணைப்புச்சொல் இனிதே முடிந்தது. போன இதழில் – [வினை உரிச்சொல்] Adverb அய் தெரிந்து கொண்டோம். அதைப்போலவே இந்த இதழில் Adjective பற்றித் தெரிந்துகொள்வோமா!
அதென்ன Adjective?
Adjective என்றால் தமிழில் பண்புச்சொல்… அதாவது பெயர்ச்சொல்லின் பண்புகளைப் பற்றி விளக்கும் சொல். பண்பு இல்லாவிட்டால் மனிதனை மதிப்போமா? என்ன சொல்வோம்?
அவனை ‘மனிதனே இல்லை’ என்று சொல்வோமல்லவா? அதுபோல பண்புச்சொல் ஒரு மொழியின் சொற்றொடருக்கு மிகவும் முக்கியம். இதனைப் பெயரடை என்றும் சொல்லலாம். பெயர்ச்சொல்லுக்கு அடைமொழியாக [சிறப்பு செய்யும் மொழியாக] வருவதால் பெயரடை என்றும் கூறலாம்.
Adverb எப்படி [வினை] Verb பற்றிப் பேசுகிறதோ அதைப்போல Adjective என்பது [பெயர்ச்சொல்] Noun பற்றிப் பேசுகிறது.
தொடர் வண்டியின் இன்னொரு சிறப்புப்பெட்டி போன்றதுதான் Adjective. இதனை வேறு ஓர் ஒப்புமை மூலம் புரிந்துகொள்வோமா?
கீழே உள்ள குடையைப் பாருங்கள்…
இந்தக் குடையிலிருந்து நாம் பல விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். குடை எதற்குப் பயனாகிறது? மழை, வெயில் போன்றவற்றைச் சமாளிக்கத்தானே?
‘குடை’ என்று பொதுவாகக் கூறினாலும், அங்கே குடையின் குறுக்குக் கம்பிகளும், மழை – வெயிலைத் தாங்கும் குடைத்துணியும், கையாளக் கச்சிதமான கைப்பிடியும், ஆணி வேர் போல நடுவில் தாங்கும் நிலைக்கம்பியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது போலத்தான் மொழியின் சொற்றொடரும் அதன் இலக்கணமும். அது தமிழோ, ஆங்கிலமோ, தெலுங்கோ, மலையாளமோ, கன்னடமோ, உருதுவோ எம்மொழியானாலும் அங்கே அம்மொழியைப் பேச, எழுத குடையின் நடுக்கம்பி போன்ற இலக்கணமும், குறுக்குக் கம்பிகள் போன்ற இலக்கணத்தின் வகைகளும், குடைத்துணி போன்ற சொற்றொடர் அமைப்பும் வரம்புகளும் மிகத்தேவை.
குடையை மொழியாக எடுத்துக் கொண்டால், குறுக்குக் கம்பிகளை Pronoun, Noun, Verb, Article, Conjunction, Preposition, Adverb போன்ற இலக்கண வகைகளாக எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் Adjective என்பதை குடையின் நிலைக்கம்பியாக அல்லது நடுக்கம்பியாக எடுத்துக்கொள்ளலாம். நிலைக்கம்பி அல்லது நடுக்கம்பி உடைந்தால் குடையைப் பயன்படுத்த முடியாது அல்லவா? அதுபோல் Adjective இல்லாவிட்டால் மொழியையும் பயன்படுத்த முடியாது சுருங்கிய குடையைப்போல சுணங்கிப்போகும். அதாவது, மொழியின் சொற்றொடருக்கு உயிர்ப்பு இருக்காது. விரிக்கப்பட்ட குடைதான் மழை, வெயிலுக்குத் தேவைப்படும். கம்பிகள் இருந்தால்தான் குடையும் விரியும். அதுபோல Adjective இருந்தால்தான் ஒரு மொழியின் சொற்றொடரும் விளக்கமாகப் புரியும்.
ஆங்கிலத்தில் Adjective இரண்டு வகை
Determiners Adjectives [தீர்மானிக்கும் விளக்கமான பண்புச் சொற்கள்/மொழியடைகள்]
முதலில்,
Determiners [தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் மொழியடைகள்] My, Our, Your, Her, His, This, These, Those = Pronouns [பிரதிப் பெயர்ச்சொற்கள்]
[what, which, whose] = question type words [கேள்விச்சொற்கள்]
[a, an, the] = Articles [சுட்டிடைச்சொற்கள்]
Six, Some, Few, Lot = countable/ uncountable words [எண்ணிக்கைச் சொற்கள்]
மேலே உள்ளவை பிரதிப் பெயர்ச்சொற்கள், கேள்விச்சொற்கள், சுட்டிடைச்சொற்கள், எண்ணிக்கை சார்ந்த சொற்கள் போன்றவையாக இருந்தபோதிலும், அவை பெயர்ச்சொற்களைத் தீர்மானிக்கத் தேவைப்படுகின்றன. அதனால் நாம் அவற்றை [Determiners] தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் அல்லது தீர்மானிக்கும் பெயரடைகள் என்கிறோம்.
அவற்றிற்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
Today is my day.
இன்றைய நாள் என்னுடைய நாள்.
This is his Letter.
இது அவருடைய கடிதம்.
Which goal are you going to achieve?
எந்தக் குறிக்கோளை நீ சாதிக்கவிருக்கிறாய்?
Some trees are dropping flowers in the morning.
சில மரங்கள் காலை வேளையில் மலர்களை உதிர்க்கின்றன.
Abraham Lincoln was an American President.
ஆபிரகாம் லிங்கன் ஓர் அமெரிக்க அதிபர் ஆவார்.
என்னுடைய நாள் = my day
அவருடைய கடிதம் = his Letter
எந்தக் குறிக்கோளை = Which goal
சில மரங்கள் = Some trees
ஓர் அமெரிக்க அதிபர் = an American President
மேற்கண்டவை பெயர்ச்சொற்களுக்கு தீர்மானமான பெயரடையாக [பண்புச்சொல்லாக] வருவது புரிகிறதல்லவா? அதனால் தான் அவற்றை [Determiners] தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் அல்லது தீர்மானிக்கும் பெயரடைகள் என்கிறோம்.
இரண்டாம் வகையான Descriptive Adjective [விளக்கமான பண்புச்சொற்கள்/மொழியடைகள்] பற்றி அடுத்தமுறை அளவளாவுவோம்.
(தொடருவோம்…)