தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : ’விளக்கும் பெயரடை அல்லது ’ வி(வ)ரிக்கும் பண்புச்சொல்’ [ADJECTIVE] – 18
போன இதழில் Determiners – Adjectives பற்றிப்பார்த்தோம்… (முன்னிடைச் சொற்கள்) Articles (a, an, the) (பிரதிப்பெயர்ச்சொற்கள்) Pronouns (my, your, her, his, their) (எண்ணிக்கை சார்ந்த சொற்கள்) Countable/ Uncountable Nouns (six, some, few, lot) ஆகியவை முகமூடி அணிந்து பண்புச்சொற்களாக [Adjective] செயல்படுகின்றன – அவற்றை நாம் Determiners [தீர்மானிக்கும் பண்புச்சொற்கள்] என்றோம்.
Descriptive Adjectives [வி(வ)ரிக்கும் பண்புச் சொற்கள்] என்பவை நேரடியான Adjectives. [சென்ற இதழில் படித்தோமல்லவா?] நடுக்கம்பி பலமாக இருந்தால் தானே குடை சிறப்பாய் விரியும், அதைப் போலவே வி(வ)ரிக்கும் பண்புச் சொல் [Descriptive Adjective] பலமாய் இருந்தால் தான் சொற்றொடர் (Sentence) சிறப்பான சொற்றொடராய் விரியும்!
“உலகத்தை முழுவதும் பார்த்திருக்கிறீர்களா?’’ என்றால் எல்லோரும் “ஆமாம்’’ என்று சொல்லமாட்டார்கள். உலகம் என்பது மிகப்பெரியது அல்லவா?
எல்லா நாடுகளுக்கும் பயணம் சென்று வந்தவர்கள்கூட எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்த்தேன் என்பார்களேயன்றி உலகத்தை முழுவதும் பார்த்தாக யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட உலகத்தை எல்லோரும் உலக வரைபடமாகப் பார்க்க முடியும் புரிந்துகொள்ள முடியும்.
இலக்கணமும் அதுபோல்தான். வரைபடத்தில் நாடுகளுக்கு எல்லை வகுத்துப் புரிந்துகொள்வதுபோல மொழிக்கும் ‘இலக்கணம்’ என்கிற எல்லை வரையறுத்து மொழியைப் புரிந்துகொள்ளலாம். அதில் ஓர் இலக்கணம்தான் வி(வ)ரிக்கும் பண்புச்சொல் [Descriptive Adjective].
2 பந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று பூப்பந்து, மற்றொன்று கால்பந்து _ இரண்டும் வெவ்வேறு அளவு கொண்டவை. பூப்பந்து சிறியது… கால்பந்து அளவில் பெரியது… என்ற வரையறையால்தான் விளையாட்டின் வேறுபாட்டை அறிய முடிகிறது அல்லவா?
கீழேயுள்ள எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்….
“நாகையார் குள்ளமாக உள்ளார்’’
‘’நாவலர் உயரமாக உள்ளார்”
எந்த ஒரு [general thing] பொதுப்பொருளுக்கும் சிறியது, பெரியது, சரியானது, தவறானது, குழப்பமானது, குழப்பமில்லாதது இப்படி எல்லாவற்றிலும் வரையறுக்க ஒப்புமைப்படுத்த, வேறுபடுத்த, அளவீடு செய்ய, வடிவம் தெரிந்துகொள்ள, வண்ணம் அறிந்துகொள்ள _ அதன் பண்புகளைப் புரிந்துகொள்ள இந்த வி(வ)ரிக்கும் பண்புச்சொல் [Descriptive Adjective] தேவைப்படுகிறது.
இனி… Descriptive Adjective இன் வகைகளைப்பொருத்து அவற்றைப் பிரிப்போம்.
எதையெல்லாம் Descriptive Adjective [வி(வ)ரிக்கும் பண்புசொல்] என்போம்?
¨ ஒப்பீட்டுச் சொற்கள் (Comparison – words)
¨ கருத்துகள் (Opinion)
¨ வடிவங்கள் (Shape)
¨ அளவுகள் (Size)
¨ கால வயது (Age)
¨ வண்ணங்கள் (Colours)
¨ மூலங்கள் (Origin)
¨ உலோகங்கள் (Material)
¨ பயன்பாட்டுக்காரணம் (Purpose)
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ‘வி(வ)ரிக்கும் பண்புச்சொல்’ [Descriptive Adjective] ஆகும்.
இவை அனைத்துக்கும் எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.
1) ஒப்பீட்டுச்சொற்கள் (Comparison – word)
ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் அல்லது ஒரு பொருளை நிறையப் பொருள்களுடன் ஒப்பிடும்போது பயன் படுத்தும் பண்புச்சொற்கள்…
எ.கா:
சூரிய ஒளி நிலவொளியைக்காட்டிலும் வெளிச்சமானது
Sun light is brighter than Moon light.
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வசன எழுத்தாளர்களில் டாக்டர் கலைஞர் மிகக் கூர்மையான எழுத்தாளர்.
Dr. Kalaignar is the sharpest dialogue writer in Tamil Nadu
[[Degrees of Comparison] ஒப்பீட்டு நிலையைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் (next episode-இல்) பார்ப்போம்]
2) கருத்துகள் (Opinion)
பொன்வண்டு மிக அழகான பூச்சி.
Golden bug is a beautiful insect.
3) வடிவங்கள் (Shape)
He cooked round cake.
அவர் வட்டவடிவில் இனிப்பு ரொட்டி சமைத்தார்.
4) அளவுகள் (Size)
House fly is a small Insect.
வீட்டு ஈ என்பது சிறிய பூச்சி.
5) கால வயது (Age)
உடன்கட்டையேறுதல் என்பது பழைய மூடத்தனம்.
‘widow – burning’ is an old stupidity.
6) வண்ணங்கள் (Colours)
Advocates wear Black and white dress.
வழக்குரைஞர்கள் கருப்பு _ வெள்ளை உடையணிகின்றனர்.
7) மூலங்கள் (Origin)
Thirukkural is the basic Tamil philosophical Poetry book.
திருக்குறள்தான் அடிப்படை தமிழ் தத்துவப் பாடல் நூல்.
8) உலோகங்கள் (Materials)
Garden wear velvet (flower) dress in the mornig.
காலையில் பூங்கா மென் பட்டுத் துணியை (பூக்களை) அணிகிறது.
9) பயன்பாட்டுக்காரணம் (Purpose)
குடி(க்கும்) நீரை வீணாக்காதீர்!
Don’t waste Drinking Water!
(தொடரும்)