நோபல் பரிசு – 2020
ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சேவையை வழங்கியோருக்கு வழங்கப்படுகிறது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு நோபல் விருதாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.
வேதியியல்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோடுனா, ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சேர்ந்து மரபணுத் தொழில்நுட்பத்தில் சிஏஎஸ்9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுன்ணுயிரிகள் ஆகியவற்றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும். லைஃப் சயின்ஸ் பிரிவில் இந்தத் தொழிலநுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்டகாலமாகத் தீர்வு இல்லாத நோய்களையும் தீர்க்க உதவும் என்று இவர்களின் கண்டிபிடிப்பிற்கு நோபல் குழுவினர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மருத்துவம்
2020ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
“ஹெபடைட்டிஸ் சி” வைரஸை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக, பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மென் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இருக்கக்கூடிய ரத்தத்தில் பரவும் ஹெபடைட்டிஸ் என்ற நோய்க்கு எதிராக இவர்கள் ஆற்றிய பங்கே இவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணம்.
விஞ்ஞானிகள் மூவரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸைக் கண்டறியும் முன்புவரை, ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி ஆகிய வைரஸ்கள் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.
இருப்பினும், ஹெபடைட்டிஸ் பாதிப்புக்குள்ளான பலருக்கு அது குறித்த விரிவான விவரங்களைக் கண்டறிய முடியாமல் இருந்தது. எனவே இந்த புதிய ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டறியப்பட்டதன் மூலம் அந்த புதிர் விலகியது.
எனவே அதற்கேற்ப ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பல மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. உலக அளவில் ஹெபடைட்டிஸ் நோய் பாதிப்பால் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாள்பட்ட நோயான அது கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.
இயற்பியல்
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்து), ரெயின்ஹார்டு ஜென்சல் (ஜெர்மனி), ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா) ஆகிய 3 விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். அண்டவெளியின் கருந்துளை உருவாக்கம் என்பது பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என்பதைக் கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோஸ், இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசின் பாதியைப் (50 சதவீதம்) பெறுகிறார். இவர் ஆங்கில கணித இயற்பியலாளர், கணிதவியலாளர், அறிவியல் தத்துவஞானியும் ஆவார். எஞ்சிய பாதியை, நமது நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் இருக்கும் ஒரு அதிசயமான சிறிய பொருளைக் கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் ரெயின்ஹார்டு ஜென்சல்லும், ஆண்ட்ரியா கெஸ்சும் (தலா 25 சதவீதம்) பெறுகிறார்கள். விஞ்ஞானி ரெயின்ஹார்டு ஜென்சல் (68), ஜெர்மனியின் வானியற்பியல் துறை விஞ்ஞானி ஆவார்.
பெண் விஞ்ஞானி ஆண்ட்ரியா கெஸ் (55), கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியர் ஆவார்.
இலக்கியம்
அமெரிக்காவின் மிகப் புகழ்வாய்ந்த வரும் சமகால இலக்கியத்தில் முக்கியமானவராகக் கருதப்பவருமான லூயி க்ளுக், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
வனவிலங்குகளோடு இனிமையாக காலத்தைக் கழிக்கும் ரஷ்யப் பழங்குடிக்கதை Masha and The Bear என்ற கார்டூனாக குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகிறது, இவர் இந்த குழந்தையின் கதாப்பாத்திரத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட பாடல்கள் புகழ்பெற்றவை ஆகும்
கடந்த 1943-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயி, தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1968ஆ-ம் ஆண்டு முதன்முதலில் ஃபர்ஸ்ட் பார்ன் எனும் கவிதையை எழுதினார். அதன்பின் அமெரிக்காவில் மிக விரைவில் புகழ்பெற்ற கவிஞராகவும், சமகால இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகவும் லூயி மாறினார்.
லூயி இதற்குமுன் பெருமை மிகு புலிட்சர் விருதை கடந்த 1993-ஆம் ஆண்டும், 2014ஆ-ம் ஆண்டு தேசியப் புத்தக விருதையும் பெற்றார். இதுவரை லூயி க்ளுக் கவிதை மற்றும் பல கட்டுரைகள் அடங்கிய 12 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஃப்ர்ஸ்ட் பார்ன், தி ஹவுஸ் ஆஃப் மார்ஸ்லாண்ட், தி கார்டன், டிசென்டிங் ஃபிகர், தி டிரம்ப் ஆப் அச்சிலிஸ் உள்ளிட்டவை லூயி க்ளூக்கின் புகழ்பெற்ற படைப்பாகும். கடைசியாக 2017-ஆம் ஆண்டு அமெரிக்கன் ஒரிஜினாலிட்டி எனும் கட்டுரைத் தொகுப்பை லூயி வெளியிட்டிருந்தார்.
அமைதி
2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அவையின் ‘உலக உணவு திட்டம்’ அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசைத் தேர்வுக்குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, ஏலக் கோட்பாடின் மேம்பாடு, ஏலத்திற்கான வடிவமைப்பு உள்ளிட்ட ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட நோபல் பரிசளிப்புக் குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதற்காக மில்க்ரோமை அவரது அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சக ஆராய்ச்சியாளரும் அண்டை வீட்டுக்காரருமான ராபர்ட் வில்சன் இரவு 2:15 மணியளவில் மில்க்ரோம் வீட்டுக்கதவைத் தட்டினார். பின் அவர் வீட்டில் இருந்த பாதுகாப்பு கருவி மூலம் தொடர்பு கொண்டு தகவலை கூறினார்.
தனக்கு நோபல் பரிசு கிடைத்தது குறித்து வில்சன் கூறியதை வியப்புடன் கேட்ட மில்க்ரோமும், அதே நேரத்தில், இந்த அதிகாலை வேளையில் தன் வீட்டு கதவு தட்டப்படு, தனது கணவருக்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியை பாதுகாப்பு கேமரா மூலம் பார்த்த மில்க்ரோமின் மனைவியும் மகிழ்ச்சி அடைந்தார்.