கோமாளி மாமா – 12 : புகழ்
ஓவியம், கதை: மு.கலைவாணன்
விடுமுறை நாள். கதை சொல்ல, தோட்டத்துக்குச் செல்ல வேண்டுமென புறப்பட்டுக் கொண்டிருந்தார் கோமாளி. அந்த நேரம் பார்த்து அவரை சந்திக்க வந்தார் அவரது நண்பர் வேணு. எப்போதும் வராத இந்த மனிதர் எதற்காக நம்மைத் தேடி வீட்டுக்கே வந்திருக்கிறார் என எண்ணியபடி அவரிடம் பேசத் தொடங்கினார் கோமாளி.
நீண்ட நேரம், தான் அவரைத் தேடி வந்ததன் நோக்கத்தைச் சொல்லாமல் கோமாளியின் நாடக நடிப்பைப் புகழ்ந்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார் வேணு. கோமாளி, தான் தோட்டத்திற்குச் சென்று குழந்தைகளைச் சந்தித்துக் கதை சொல்ல வேண்டுமே என்கிற நினைவோடு அவர் பேசுவதைக் கேட்பதும் கடிகாரத்-தில் நேரத்தைப் பார்ப்பதுமாக இருந்தார். பொறுமை இழந்த கோமாளி, “என்ன விஷயமா என்னைத் தேடி வந்தீங்க? அதைச் சொல்லுங்க….’’ எனக் கேட்டேவிட்டார்.
தனக்கு அவசரத் தேவைக்காக ரூபாய் ஆயிரம் தேவை என்பதைச் சொன்னார் வேணு. உடனே தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை வேணுவிடம் கொடுத்தார் கோமாளி. தொகையைப் பெற்றுக் கொண்டதும் “அடுத்த வாரம் சம்பளம் வந்ததும் கொண்டு வந்து தருகிறேன், ரொம்ப நன்றி’’ எனச் சொல்லிப் புறப்பட்டார் வேணு. பெருமூச்சு விட்டபடி வேகவேகமாகத் தோட்டத்தை நோக்கி நடந்தார் கோமாளி.
தோட்டத்தில் நீண்ட நேரம் காத்திருந்த மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும், “இன்று கோமாளி மாமா நாடகத்திற்கு நடிக்கச் சென்றிருப்பார்… அல்லது ஏதாவது அவசர வேலை இருந்திருக்கும் நாம் வீட்டுக்குப் போகலாம்’’ என முடிவு செய்து புறப்பட்ட நேரத்தில் கோமாளி மாமா வந்து சேர்ந்தார்.
“என்ன எனக்காகக் காத்திருந்து பாத்துட்டு வீட்டுக்குப் போலாம்னு புறப்பட்டுட்டீங்களா?” என்றார்.
“ஆமா மாமா! எப்பவும் இவ்வளவு நேரமாகாது இன்னைக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டாள் மல்லிகா.
“என்னுடைய நண்பர் ஒருத்தரு, அவர் பேரு வேணு. அவருக்கு அவசரமா பணத் தேவை. அதுக்காக என்னைப் பார்க்க வந்தாரு” என்றார் கோமாளி.
“உங்களைப் பாக்க வந்தாரா? பணம் கேக்க வந்தாரா?” எனச் சிரித்தபடி கேட்டான் செல்வம்.
“பணம் கேக்கத்தான் என்னைப் பாக்க வந்தாரு. ஆனா, பணம் கேக்குறதை விட்டுப்புட்டு என்னைப் புகழ்ந்து அரைமணி நேரமா பேசிக்கிட்டிருந்தாரு. எனக்கே கூச்சமாயிடுச்சு. அந்த அளவுக்குப் புகழ்ந்தாரு” என்றார் கோமாளி.
“உங்களைப் புகழ்ந்தாருன்னா… நீங்க நாடகத்திலே நடிச்ச நடிப்பு… பாடுன பாட்டு… இதைப் பத்தி தானே புகழ்ந்து சொல்லியிருப்பாரு… இதுல என்ன தப்பு இருக்கு…” என்றார் மாணிக்கம். உடனே கோமாளி, “அது தப்பு இல்லே. அவருடைய தேவை பணம். அதுக்காக என்னைப் புகழ்ந்த மாதிரி எனக்குத் தோணுச்சு” என்றார்.
“அப்ப… ஒருத்தரைப் புகழவே கூடாதா?…” என்றாள் மல்லிகா.
“ஒருத்தர் சிறப்பாச் செய்த செயலை _ அதுவும் பல பேருக்குப் பயன் தரக்கூடிய செயலைப் செய்த வர்களைப் பாராட்டுறது, புகழ்றது தப்பில்லே. அதுக்கு ஒரு நேரம் காலம் வேணாமா.. அவசரத் தேவைக்காகப் பணம் கேக்க வந்தவரு அதைத்தானே முதல்ல கேட்டிருக்கணும்” என்றார் கோமாளி.
“மாமா! ஒருத்தர் சிறப்பான செயல் செய்தா புகழணுமா கூடாதா? அதைச் சொல்லுங்க” என்றான் செல்வம்.
“சிறப்பான செயல் செய்தவங்களைப் புகழ வேண்டியது, பாராட்ட வேண்டியது நம்ம கடமை. அதுவும் அந்தச் செயல் மூலமா பலன் பெற்றவங்க நன்றியோட இருக்கிறது அதைவிட முக்கியம். ஆனா… அந்தப் புகழ், பாராட்டுக்காக மயங்கிடக் கூடாது. நம்மை யாரும் புகழலையேன்னு வருந்தவும் கூடாது. நம்ம வேலையெ நாம செய்துக்கிட்டே இருக்கணும்… அது தொடர்பா ஒரு கதை சொல்றேன்” என்றார் கோமாளி.
“சொல்லுங்க! சொல்லுங்க!’’ என ஆர்வமுடன் மூவரும் கோமாளியைச் சுற்றி அமர்ந்தனர்.
வழக்கமாகக் கோமாளி தான் அமரும் பாறையில் அமர்ந்து கதையைத் தொடங்கினார்.
“ஒரு குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு ஊருல மரத்துலேயே சிற்ப வேலை செய்து பெரிய பெரிய மாடமாளிகையை உருவாக்கக்கூடிய சிற்பி சீராளன்னு ஒருத்தர் இருந்தாரு.
அவரிடம், சிற்ப வேலைப்பாடுகளோட சிறப்பா ஒரு மாளிகையை உருவாக்கித் தரும்படி மன்னர் கேட்டுக்கிட்டாரு.
சிற்பி சீராளனும் தன் கற்பனை வளத்தையெல்லாம் கொட்டி அற்புதமான ஒரு மாளிகை உருவாக்கித் தந்தாரு. அதைப் பார்த்த மன்னர், “இது போலவே இன்னொரு மாளிகையை இதுக்குப் பக்கத்துலேயே உருவாக்கிக் கொடுங்கள்னு சொன்னாரு.
அடுத்த மாளிகையையும் சிறப்பா உருவாக்கி முடிச்சாரு, சிற்பி சீராளன்.
இரண்டு மாளிகைகளுக்கும் ஒரே நாள்லே… திறப்பு விழா. ஊரே திருவிழாக் கோலத்தில இருந்தது. செய்த வேலைக்குத் தரவேண்டிய சன்மானத்தையெல்லாம் முதல் நாளே சிற்பி சீராளனுக்கு கொடுத்துட்டாரு மன்னர். அடுத்த நாள் மக்கள் எல்லாரும் மாளிகையைச் சுத்திப் பாத்து, சிற்பி சீராளனைப் புகழ்ந்து பாராட்டுனாங்க. ஆனாலும், சிற்பி சீராளனுக்கு மன்னர் நம்மள விழா மேடையில கூப்பிட்டு நாலு பேரு முன்னாடி பாராட்டலேயேன்ன மனசுக்குள்ள வருத்தம். அதனாலே வேகவேகமா விருந்து நடக்கிற இடத்துக்குப் போயி அரையும் குறையுமா சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டாரு.
மறுநாள் காலையிலே, “மன்னர் உங்களை உடனே கூப்பிட்டாரு”ன்னு சொல்லி சேவகன் ஒருத்தன் வந்து கூப்பிட்டான்.
சிற்பி சீராளனும் உடனே போயி மன்னரைச் சந்திச்சாரு.
மன்னர் சிற்பி சீராளனைப் பாத்ததும், “இப்ப நீங்க உருவாக்குன இந்த ரெண்டு மாளிகையைப் போலவே நம்ம ஊர் நதிக்கரை ஓரத்திலே இருக்கிற இடத்திலே இன்னொரு மாளிகையை உருவாக்குங்க. அந்த இடத்தை நம்ம அமைச்சர் உங்களுக்குக் காட்டுவாரு. நாளைக்கே நீங்க வேலையைத் தொடங்கலாம். எவ்வளவு விரைவா முடிக்கிறீங்களோ அவ்வளவு நல்லது” அப்படின்னு சொன்னாரு மன்னர்.
சிறப்பா கற்பனை வளத்தையெல்லாம் கொட்டி உருவாக்குன இந்த ரெண்டு மாளிகையைப் பத்தி, புகழ்ந்து ஒரு வார்த்தைகூட சொல்லாம இன்னொரு மாளிகையை உருவாக்கச் சொல்றாரேன்னு மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு, அமைச்சர் காட்டுன நதிக்கரை ஓரத்துல அடுத்த மாளிகையை உருவாக்க உதவி ஆட்களோடு போயிட்டாரு சிற்பி சீராளன்.
இதுக்கு முன்னே உருவாக்குன மாளிகைகளுக்கு எடுத்துக்கிட்ட எந்தச் சிரமத்தையும் மூன்றாவதா உருவாக்கிற இந்த மாளிகைக்கு எடுத்துக்கலே. ஒரு வார்த்தைகூட புகழ்ந்து பாராட்டாத மன்னனுக்கு எதுக்கு ரொம்ப சிரமப்படணும்னு கவனக் குறைவா ஏனோ தானேன்னு உருவாக்குனாரு இந்த மாளிகையை. பெரிய வேலைப்பாடு எதுவும் இதுல இல்லை. கொஞ்ச நாளிலேயே வேகவேகமா வேலையெ முடிச்சு மாளிகையைப் பூட்டி சாவியை எடுத்துக்கிட்டு மன்னர் கிட்ட போனாரு சிற்பி சீராளன்.
“மன்னா! நீங்க சொன்ன மாதிரியே மாளிகையை உருவாக்கிட்டேன். இந்தாங்க அதோட சாவி”ன்னு சாவியை மன்னர்கிட்ட நீட்டுனாரு.
மன்னர், “சிற்பி சீராளன் அவர்களே! இந்தச் சாவியை ஏன் என்னிடம் தர்றீங்க. அதை நீங்களே வச்சுக்கிங்க. அந்த மாளிகையே உங்களுக்குத்தான்.
ரெண்டு மாளிகையை சிறப்பா கலை நயத்தோட உருவாக்கித் தந்த உங்களை வெறும் வார்த்தைகளாலே புகழ்ந்து பாராட்டுறதைவிட இப்படி ஒரு பெரிய பரிசைத் தந்து நீங்க எதிர்பார்க்காதபோது பாராட்டணும்னுதான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்.’’
அப்படின்னு சொல்லி முடிச்சாரு மன்னர்.
“அடடா… அற்பப் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு அரையும் குறையுமா ஒரு மாளிகையை உருவாக்கிட்டோமே…” என்று வருந்தியபடி சாவியை வாங்கிக்கிட்டுப் போனாரு சிற்பி சீராளன்.
“மத்தவங்க புகழணும் பாராட்டணும்கிறதுக்காக நம்ம செயலை செய்யக்கூடாது. எப்பவும் நாம செய்யிறதை ஒழுங்கா, நேர்த்தியா, கவனமாச் செய்யணும்.
அதுக்கான பாராட்டும் புகழும் நிச்சயம் நம்மை வந்து சேரும்.
மத்தவங்க யாராவது சிறப்பா கவனமா ஒரு செயலை செய்தா… கட்டாயம் நாம மனந்திறந்து பாராட்டவும் மறக்கக் கூடாது. புரிஞ்சுதா…?’’ என கதையைச் சொல்லி முடித்தார் கோமாளி.
“புகழ் என்பது மனதை மயக்கும் போதை – அதற்கு
அடிமையானால் தெரியாது – பயணம் செய்யும் பாதை!”
என்றான் மாணிக்கம். அனைவரும் சிரித்தனர்.
– மீண்டும் வருவார் கோமாளி