இயற்கை; அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்
ஆஸ்திரேலியா எப்படி தனித்தன்மையுடைய கண்டமாகப் பார்க்கப் படுகிறதோ அதேபோல்தான் இந்தியாவில் பாதி அளவு நிலப்பரப்பைக் கொண்ட மடகாஸ்கர் பெருந்தீவு தனித்தன்மையுடன் பார்க்கப்படுகிறது. மடகாஸ்கருக்கும் தென் தமிழகத்திற்கும் பெரும் தொடர்பு உண்டு. இமயமலை தோன்றுவதற்கு முன்பே தமிழக நிலப்பகுதிகளும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் உருவாகிவிட்டன என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இந்தியாவின் தீபகற்பப் பகுதி இமயமலைகளை விட 100 கோடி ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது.
மடகாஸ்கரில் உள்ள பலவற்றைக் கேரளாவிலும் தமிழகத்திலும் இன்றும் காணலாம். லெமூர்கள் என்படும் உயிரினங்களை நாம் தேவாங்கு என்று அழைக்கிறோம் இது தமிழகத்தில் காணப்படுகிறது, அதே போல் பல்லி இனமாக மர உடும்பும் மடகாஸ்கரில் காணப்படுகிறது. அது தமிழகம் கேரளத்திலும் காணப்படுகிறது,
அதை விட நாம் வியந்து பார்க்கும் பயோபாப் மரங்களைக் காண உலகம் முழுவதிலுமிருந்து இயற்கை ஆர்வலர்கள் மடகாஸ்கர் செல்வார்கள் ஆனால், நாம் மதுரை சென்றாலே போதும் மதுரையில் பல இடங்களில் இந்த பயோபாப் மரங்களைக் காணலாம். மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உலகின் பழமையான பெரிய மரங்கள் இருக்கின்றன.
பயோபாப் மரங்கள் ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வாழ்பவை. மரங்களிலேயே மிகப் பெரிய வகை.
தமிழ்நாட்டில் அரிதாக மதுரை, தூத்துக்குடி, ராஜபாளையம், சென்னை ஆகிய நகரங்களில் வளர்ந்திருக்கின்றன. நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். அடன் சோனியா (Adansonia)என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த பயோபாப் மரங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. தமிழில் இவை பெருக்கமரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தனது ஆயுட்காலத்தில் நம்ம கொரோனா போன்று பல பேரிடர்களை அவை பார்த்திருக்கும். ஒரு சிறுவிதையாக பறவைகளின் எச்சத்தில் விழுந்த இம்மரங்கள் இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன.
சாதாரணமாக 20 அடி, 30 அடி என்று மரங்களின் உயரம் அளக்கப்படும்போது பயோபாப் மரத்தின் சுற்றளவு மட்டுமே 30 அடியிலிருந்து 50 அடி வரையிருக்கும்! பயோபாப் பழங்களில் விட்டமின் ‘சி’ அதிகம். இந்த மரங்கள் 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை வேர்களில் சேமிக்கக் கூடியவை. மிகப்பெரிய உருளை போல இருக்கும் மரத்தின் விட்டம் ஏறக்குறைய 7 மீட்டரிலிருந்து 11 மீட்டர் வரை இருக்கும். மரத்துக்கு “வயதான பிறகு” ஏற்படும் பொந்து அல்லது இடைவெளியில் மனிதர்கள் சிறு குடும்பத்தோடு வசிக்கலாம், ஆப்பிரிக்காவில் இவ்வகை வீடுகள் உள்ளன. வயது, தொன்மை, பேருரு காரணமாக சில நாடுகளில் அதைப் ‘பேய் மரம்’ என்று அருகில் நெருங்க மாட்டார்கள்.
தமிழகத்தில் பல இடங்களில் பயோபாப் மரங்கள் இருந்தன. ஆனால், மூடநம்பிக்கை காரணமாக ஏதேனும் தொற்று நோய் வந்தாலோ அல்லது பெருமழை, வெள்ளம், பஞ்சம் வந்தாலோ அதற்கு அந்த மரங்கள் காரணம் என்று கூறி வெட்டிச்சாய்த்துவிட்டனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மூன்று பயோபாப் மரங்கள் வளர்கின்றன. இவை 140 ஆண்டுகளே ஆன கன்றுகள் ஆகும். இவை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வளரும். நெல்லை, விருதுநகர், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் இவ்வகை மரம் ஆனைப் புளியமரம் என்று அழைக்கப்படுகிறது.
ராஜபாளையம் சின்மயா பள்ளியில் ஒரு பயோபாப் இருக்கிறது. 500 வருடம் பழமையானது. 50 அடி சுற்றளவு. பத்துப்பேர் சுற்றி நின்றால் அதை கட்டிப் பிடிக்கலாம்.
சென்னை தியோசபிகல் மன்றத்திலும் ஒன்று இருக்கிறது.
இந்தியாவின் மிகப் பிரபலமான பயோபாப் மரங்கள் கர்நாடகாவில் இருக்கின்றன.
ஹவேரி மாவட்டத்தில் டோதாஹுனாசே மடத்தில் வளர்ந்துள்ள இந்த மரங்கள் 5000 வருடங்கள் பழமையானவை என்று நம்புகிறார்கள். பயோபாப் மரங்களைப் பார்க்கும் கடைசித் தலைமுறை மனிதர்கள் நாமாகவே இருப்போம். படித்தவர்கள் அதிகம் உள்ள காலத்திலும் மூடநம்பிக்கை காரணமாக இம்மரத்தில் ஆணிகளை அடித்து மாலை, சந்தனம், குங்குமம், இதர செயற்கைப் பொருள்களைப் பூசி இதன் மூச்சை தடை செய்கின்றனர். ஆம். இதற்கு இலைகள் மிகவும் குறைவு. இவை தண்டுகள் மூலமும் சுவாசிக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை விழா என்கிற பெயரில் இம்மரங்களுக்கு அருகில் கூட்டம் கூட்டமாகப் பொங்கல் வைத்து, இம்மரத்தின் சுற்றுப்புறத்தை வெப்பமாக்கி, இதன் ஈரப்பதத்தை இழக்கச் செய்கின்றனர். அதே போல் நிலத்தடி நீர் பற்றாக்குறையாலும் மெல்ல மெல்ல இறந்து வருகின்றன.
ஜிம்பாப்வேயில் 2500 ஆண்டுகள் பழைமையான மரம் 2011இல் சரிந்தது.
தென்னாப்பிரிக்காவில் 1400 ஆண்டுகள் பழைமையான மரம் 2016இல் இறந்துபோனது.
இப்படிக் கடந்த 12 வருடங்களில் மிகப் பழைமையான பயோபாப் மரங்களில் பல பட்டுப்போயின. எல்லாமே 1100லிருந்து 2500 ஆண்டுகள் வயதுடையவை. இந்த மரங்கள் அழிந்து வருவதற்கு புவி வெப்பமயமாதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அப்படியென்றால், அதற்கு நாமும்தான் காரணம். டைனோசர்களுக்கு முன்பிருந்தே செழித்து வளர்ந்து கொண்டு இருந்த இம்மரங்கள் மனிதர்களின் மூடநம்பிக்கை, சுற்றுப்புறச் சூழல் அக்கறையின்மை போன்ற காரணங்களால் உயிரிழந்துகொண்டு வருகின்றன.<