அனுபவ அறிவு : மெழுகுவத்தி உற்பத்தி பயன்பாடு தெரியுமா?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து ஓட்டுப் பெட்டிக்கு ‘சீல்’ வைக்கும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… சுமார் 89000 வாக்குச் சாவடிகள் _ -சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை…
எல்லா வாக்குச் சாவடிகளிலும் மெழுகுவத்தியைத்தான் ஏற்றி ‘சீல்’ வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்… அரக்கைச் சூடு செய்து அதன் மீது முத்திரையைப் பொறிப்பதுதான் சீல் (seal) வைத்தல் என்பது. அதைப்பற்றி பிறகொருமுறை பார்ப்போம். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த மெழுகுவத்திகளெல்லாம் தயார் செய்யப்பட்டது சொல்கேளான் என்ற தாத்தாவால்! அவர் சொந்தமாக உழைத்து மெழுகுவத்தி நிறுவனம் வைத்திருக்கிறார். மின்சாரம் துண்டிக்கப்படும் இந்தக் கோடையில் மெழுகுவத்தியின் பயனை நாம் அறிவோம். ஆனால், மெழுகுவத்தியின் பின்னால் இருக்கும் செய்திகளை சொல்கேளான் தாத்தா சொல்லக் கேட்போமா?
“மெழுகுவத்தி பற்றி பிஞ்சுகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மெழுகுவத்தி நன்றாக எரிய வேண்டுமானால்,
மெழுகின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.
நூல் நடுவில் இருக்க வேண்டும். காற்று இருக்கக் கூடாது. அடிப்புறம் சம தளத்தில் அமைந்திருக்க வேண்டும். மூக்கு உறுதியாக இருக்க வேண்டும். இப்படி பல டெக்னிக்குகள் … சரி, மெழுகு பற்றி பார்ப்போம்…
கச்சா எண்ணெயில் (குரூட் ஆயிலில்) இருந்து எண்ணெய் சுத்திகரிப்பாலையில் பல பெட்ரோலியப் பொருள்கள் -_ பெட்ரோல், -டீசல், – மண்ணெண்ணெய் -போன்ற 20 வகையான பல பொருள்களைப் பிரித்த பின் இறுதியாக வருவதுதான் பாரபின் மெழுகு… இதற்கு அடுத்து வருவது தார்…
இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பாலை அசாமில் உள்ள டிக்பாய் என்னும் இடத்தில் உள்ள அய்.ஓ.சி. (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்) ஆலை….(“வெள்ளைக்காரர்கள் அங்குள்ள தொழிலாளர்களை தோண்டுங்கள்… தோண்டுங்கள்…’’) டிக் பாய்… டிக் பாய் என்று சொல்லியே டிக்பாய் என்று பெயர் வந்ததாக வரலாறு)
சரி, மெழுகுவத்தியை நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால், அது எத்தனை வகையான பொருள்களுக்குத் தேவைப்படுகிறது என்பது அதிகம் பேருக்குத் தெரியாது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
பாரபின் மெழுகு இல்லாவிட்டால்… –
தீக்குச்சி தயாரிக்க முடியாது,
லெதர் கோட்டிங் செய்ய முடியாது,
தார்பாலின் செய்ய முடியாது,
பேப்பர் கோட்டிங் செய்ய முடியாது. (பிரிட்டானியா பிஸ்கட்டில் உள்ளே நமத்துப் போகாமல் இருக்க ஒரு லேயர் கோட்டிங் இருக்கும்…)
டீ கப், ஜுஸ் கப், ஆப்பிள் இவற்றில் எல்லாம் மெழுகு கோட்டிங்தான்.
மரவேலை செய்யும் தச்சர்களுக்கு மக்கு பார்ப்பதற்கு மெழுகுதான்…
தரைதளம் டைல்ஸ் மீது கோட்டிங் கொடுப்பதற்கு மெழுகுதான்…
நீங்கள் போடும் ஷூ பாலிஷ் மெழுகுதான்…
தலைவலிக்கு நீங்கள் போடும் ஜண்டு பாம், விக்ஸ், அமிர்தாஞ்சன் மெழுகுதான்…
5 ரூபாய்க்கு நீங்கள் பால் பாயின்ட் பேனா வாங்கினால் அதன் முனையில் கடுகு அளவு ‘சீலிங்’ இருக்கும்… அதுவும் மெழுகுதான்….
இன்னும் இப்படி பல தொழில்களுக்குத் தேவைப்படுவதுதான் மெழுகு…
சிறப்பு என்னவென்றால்… இன்னும் உலகப் புகழ்பெற்றவர்களின் உருவச் சிலைகளை ‘தத்ரூப’மாக மெழுகில் வடித்துள்ளதையும் அறிந்திருப்பீர்கள்.
அதனால்தான் எப்போதும் மெழுகுக்கு வெளி மார்க்கெட்டில் அதிக டிமாண்ட்….
1972இல் நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கும்போது ஒரு கிலோ மெழுகு ரூபாய் 1.25. இன்றைக்கு … ரூ.100.- வெளிச்சந்தையில் ரூ.105.- இந்த வாரம் இன்னும் டன்னுக்கு பத்தாயிரம் ஏறும் என்று சொல்கிறார்கள்…
தேர்தல் டென்டர் எடுத்து ‘சப்ளை’ செய்த பின் டன்னுக்கு ரூ.10,000 ஏறியிருக்கிறது… நல்லது. நாங்கள் அதற்குள் மெழுகு வாங்கி விட்டோம்…
எங்கள் கோவில்பட்டி மாப்பிள்ளை சொன்னார். “ஓடப்பட்டி பிள்ளையாரால்தான் தேர்தல் ஆர்டர் வந்தது… விலை ஏறுவதற்குள் மெழுகு வாங்கி விட்டீர்கள்.. வந்து பிள்ளையாருக்கு ஒரு பூஜை செய்யுங்கள்’’ என்று.
“பெட்ரோல் விலை மாதிரி மெழுகு விலையும் ஏறுகிறது.. இதற்கு எதற்கு பிள்ளையாருக்கு பூஜை? என்று கேட்டேன் நான்” என்கிறார் சொல்கேளான் தாத்தா.<