கணக்குனா எனக்கு பிடிக்கும் ; எட்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் எப்போது சந்திக்கும்?
எட்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் பிரச்சினை என்று கடந்த ஆண்டில் ஒரு வதந்தி பரவியது. அது-அறிவுக்கு ஒவ்வாத ஒன்று. அதனைப் புறந்தள்ளி கொஞ்சம் கணிதமும் வானியலும் கொண்டு ஆராய்வோம். சில இணையதளங்களில் அடுத்த நேர்கோடு 2492ஆம் ஆண்டு என கணக்கிடுக்கின்றனர். ஆனால், கணித மாடல்களை வைத்து அணுகினால் அதற்கு வாய்ப்பே இல்லை.
முதலில் எட்டு கோள்களும் முப்பரிமாணத்தில் ஒரே நேர்கோட்டில் வர வாய்ப்பில்லை, ஏனெனில், எல்லாக் கோள்களும் ஒரே மட்டத்தில் சுற்றுவதில்லை, கொஞ்சம் வேறுபாடு உள்ளது. (விளக்கம்: -அறையின் ஒரு புள்ளியினை நான், என் மகள், என் மகன் எல்லோரும் சுற்றுகின்றோம் என வைத்துக்கொள்வோம். எல்லோரும் வேறு வேறு உயரம் வேறு வேறு பாதை, வேறு வேறு வேகம். இப்போது எங்கள் தலைகள் தான் கோள்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரே நேர்கோட்டில் தலைகளை நிற்க வைக்க முடியாது அல்லவா, அது போல)
சரி, இரண்டு பரிமாணத்தில் (2D) சுமாராக 1.8 டிகிரிக்குள் (முன்பின் வேறுபாடு) எட்டு கோள்களும் எப்போது அமையும் என பார்ப்போம்?
முதல் மூன்று கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்க சுமார் 40 ஆண்டுகள் எடுக்கும்.
இப்போது அடுத்தடுத்த கோள்களையும் கணக்கில் எடுத்தால் (அவை சுற்றும் வேகம், சுற்றுப்பாதை) எட்டு கோள்களும் நேர்கோட்டில் வர 396 பில்லியன் ஆண்டுகள் எடுக்குமாம். அதாவது, 396000000000 ஆண்டுகள்.
இதையே 1 டிகிரிக்குள் இருக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்டு கணக்கிட்டால் 13.4 டிரில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்! (13400000000000 ஆண்டுகள்). ஆனால், இதற்குள் சூரியனே எரிந்து முடிந்து இல்லாமல் போயிருக்கும்.<