முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்!
இந்த இதழின் நடுப்பக்கத்தை அலங்கரிக்கும் தந்தை பெரியார் ஓவியம், பதினொன்றாம் வகுப்பு பயிலும் வம்சிக் சிவா வரைந்தது.
குழந்தைகளுக்கான முதல் வடிவமைப்புத் திறன் பள்ளியை ஓசூரில் நடத்திவரும் காசி வைசாலி, சுப்பையா சிவா ஆகியோரின் மகன் வம்சிக் சிவா, ‘மனிதன் தானாகப் பிறக்க வில்லை. ஆகவே அவன் தனக்காக வாழக்கூடாது’ என்று பெரியார் சொன்னது போன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, தான் கற்றுக் கொண்ட கலையின் மூலமாகவே நிதி திரட்டுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சரின் ஓவியத்தை, அவர் முதல் கையெழுத்திட்ட அந்த அரிய தருணத்தையே, “முதலமைச்சரின் முதல் கையெழுத்து’’ எனும் பெயரில் வரைந்து, இணையத்தில் ஏலத்திற்கு விட்டார். அது 50,000 ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அந்த நிதியை, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் சென்று கொடுத்ததும், நெகிழ்ந்து போனார் மாண்புமிகு மானமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பெரியார் பிஞ்சு இதழும் வம்சிக் சிவாவின் பிறருக்காக உதவும் குணத்தால் நெகிழ்ந்து போயுள்ளது. வாழ்த்துகள்!