சிறுவர் பகுத்தறிவுக் கதைகள்: பொட்டப்புள்ள..
பாலு மணிவண்ணன்
“பத்துவயசுப் பொட்டச்சிக்கு இம்புட்டுத் தைரியமா!’’
ஊருணியில் கரம்பை மண்ணைத் தேச்சுக் குளிச்சுக்கிட்டிருந்த குமரிப் பொண்ணுகளுக்கு அதுவே பேச்சாக இருந்தது!
சுஜிதா!
டீச்சர் குரல் மாதிரி இருப்பதையறிந்து ஓடிவந்து கதவைத் திறந்தாள் சுஜிதா.
அவளைப் பார்த்ததும் பரவசம் பற்றிக் கொள்ள, நெஞ்சோடு வாரியணைத்து, தலையை வருடிக் கொடுத்தார் டீச்சர். பிறகு அவளது அம்மாவைப் பார்த்து,
“என்னம்மா நடந்தது?’’ என்றார்.
குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்த அவர் மெதுவாக எழுந்து,
“என்னத்தச் சொல்றதுங்க டீச்சர். தலைநாள்ல சுஜிதா பொறந்தா. ரெண்டாவதா இப்பவுமா பொட்டைப்புள்ள பொறக்கணும்? சரி, ஏதோ பொறந்துருச்சு. அந்தப் பொசகெட்ட மனுஷன் என்னடான்னா, அவக ஆத்தா சொல்லைக் கேட்டுக்கிட்டு கள்ளிப்பால் புடிச்சுட்டு வந்துருச்சு. பொகட்டப் போற சமயத்தில் சுஜிதா, சாமி இறங்குனமாதிரி ஓடி வந்து தட்டி விட்டுட்டா! உடனே அந்த மனுஷன் படீர் _- படீர்னு சுஜிதாவை அடிச்சிட்டாரு….
-மேற்கொண்டு பேச முடியாமல் அழத் தொடங்கினார் அவர்.
“பச்ச உடம்புக்காரி அழப்புடாதும்மா’’ என்று தேற்றி, மீண்டும் பேசவைத்தார் டீச்சர்.
“அப்ப சுஜிதா நாக்கைப் புடுங்கிக்கிட்றா மாதிரி, இந்தா பாருப்பா, தங்கச்சிப் பாப்பாவ உங்களால வளர்க்க முடியாட்டி, எங்கிட்ட குடுத்துருங்க. நான் படிச்சு பெரியவளாகி தங்கச்சிய வளத்துக்கிட்றேன்னு கேட்டா பாருங்க, அந்த மனுஷனுக்கே அழுக வந்துருச்சு’’ என்று சொல்லி முடிக்குமுன் தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டியது.
டீச்சர் பெருமையோடு சுஜிதாவைப் பார்த்தார்.
அவள் தங்கச்சிப்பாப்பாவின் விரலைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.