பாய்ச்சல்: விண்வெளியில் வீடுகட்டும் பணி விரைவில்!
பெரியார் பிஞ்சு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதன் தலைப்பு ‘விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க’ என்பது! தற்போது மக்கள் தொகைப் பெருக்கம், அதனால் இட நெருக்கடி காரணமாக ஹாங்காங் நாட்டில் ஒரு கட்டடத்தில் பாதி நகரத்தையே கொண்டு வந்துவிட்டார்கள். சுமார் 27 அடுக்குகளுடன் 12 வரிசையில் கட்டப்பட்ட அந்தக் குடியிருப்பில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் குடியேறி உள்ளன.
அதாவது நமது ஊரில் உள்ள நகராட்சியின் மக்கள் தொகை அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் உள்ளது. இட நெருக்கடியின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இனியும் போகப் போக பூமியில் மனிதர்கள் இருக்க இட வசதியில்லாத நிலையில் மேலும் காடுகளை அழித்து பூமியைப் பாழாக்காமல் இருக்க ஒரே வழி நாம் விண்வெளியில் சென்று குடியேறுவதுதான் என்பதை மய்யக் கருத்தாக வைத்துத்தான், “விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க” என்ற அந்தக் கட்டுரை வெளிவந்தது. 2002ஆம் ஆண்டிலிருந்தே விண்வெளியில் வீரர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். முதலில் ருஷ்யாவின் மிர் விண்வெளி ஆய்வு இல்லம் (மிர் ஸ்பேஸ் ஸ்டேசன்), தற்போது பன்னாட்டு விண்வெளி ஆய்வு இல்லம் (இண்டர்நேசனல் ஸ்பேஸ் ஸ்டேசன்).
ஆனால், அங்கு தகுந்த பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே _ அதாவது விண்வெளி ஆய்வாளர்கள் மட்டுமே செல்ல முடியும்.
பொதுமக்களை அங்கு செல்ல வைக்கும் முயற்சி 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. நீண்ட நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு குறுகிய காலத்திற்கு அதாவது முதலில் விண்வெளிச் சுற்றுலாவைத் துவக்கலாம் என்ற முடிவின்படி விண்வெளியில் நிரந்தரக் குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு சோதனை ஓட்டமாக பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் வேலையைச் செய்து தென் ஆப்பிரிக்க இளைஞரும் தற்போது டெஸ்லா என்ற மிகப் பெரும் கார் நிறுவனத்தின் தலைவருமான எலன் மாஸ்க் தனது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.
‘வர்ஜின் கேலக்டிக்’ நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை ஜூலை மாதம் வெற்றிகரமாக நிகழ்த்தியது. வர்ஜின் கேலக்டிக் நிறுவனத் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழுவினர் விண்வெளிக்குச் சென்று சில நிமிடங்கள் மிதந்து விட்டு பூமிக்குத் திரும்பினர். அதன் பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அந்நிறுவனத் தலைவர் ஜெப் பெஸோஸ் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்.
இந்த வரிசையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவினரை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
‘இன்ஸ்பிரேஷன் 4’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பயணத்தின் செலவு முழுவதையும் அமெரிக்க கோடீஸ்வரரான ஜாரெட் அய்சக்மேன் ஏற்றுக் கொண்டுள்ளார். தன்னுடன் பயணம் செய்யும் வாய்ப்பை சாமானியர்களுக்கு அளிக்க விரும்பிய இவர், முன்னுதாரணமாக விளங்கும் சிலரைத் தேர்ந்தெடுக்க போட்டி ஒன்றையும் நடத்தினார்.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் 29 வயதான ஹேலி ஆர்சனாக்ஸ் (Hayley Arceneaux), சிறு வயதில் எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். தனக்கு சிகிச்சையளித்து குணமடையச் செய்த செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆய்வு மருத்துமனையிலேயே தற்போது பணியாற்றி வருகிறார்.
அடுத்ததாக 2009ஆம் ஆண்டு நாசாவில் விண்வெளி வீராங்கனையாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை இறுதிச் சுற்றில் நழுவ விட்ட சியான் பிராக்டர் (Sian Proctor) பயணக் குழுவில் இடம் பிடித்தார். நான்காவதாக அமெரிக்க விமானப்படை வீரராகப் பணியாற்றிய கிறிஸ் செம்ப்ரோஸ்கி (Chris Sembroski) தேர்வானார்.
முன்னதாக விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக வந்த நால்வருக்கும் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவித்தனர். ஜாரெட் அய்சக்மேன் உள்ளிட்ட நால்வரையும் சுமந்து கொண்டு ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்குப் புறப்பட்டது.
இந்தப் பயணம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது. புறப்பட்ட 12 நிமிடங்களில் விண்கலத்தை சுற்று வட்டப் பாதையில் செலுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்தது. பொதுவாக 100 கிலோமீட்டர் உயரத்தைத் தாண்டினாலே அது விண்வெளி என கணக்கிடப்படுகிறது. ஆனால், ‘இன்ஸ்பிரேஷன் 4’ குழுவினர் 575 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பூமியைச் சுற்றிவர இருக்கின்றனர். இது சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட 160 கி.மீ. அதிக உயரம் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட இலக்கை அடைந்த டிராகன் விண்கலம் பூமியைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில் பூமி சுழலும் காட்சிகள் பதிவாகியுள்ளன. டிராகன் விண்கலத்தில் மூன்று நாள்கள் பயணம் செய்த இந்தக் குழுவினர், சனிக்கிழமையன்று ஃப்ளோரிடா கடற்பகுதியில் தரையிறங்கினர். ‘இன்ஸ்பிரேஷன் 4’ பயணத்தின் மூலம் விண்வெளிச் சுற்றுலாவின் புதிய கதவுகளைத் திறந்திருக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விரைவில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் களமிறங்கவுள்ளது.
அது மட்டுமல்லமால் சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்கு விண்வெளியிலேயே தங்கும் அறைகள் கட்டும் வேலையை துவக்கி உள்ளது, இதற்காக ‘நாசா’வுடன் சேர்ந்து பன்னாட்டு விண்வெளி ஆய்வு இல்லத்தின் மாதிரிகளை பொதுமக்கள் தங்கும் வசதிக்கு ஏற்ப மாற்றம் செய்ய ஆய்வு செய்து வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் தங்கும் அறைகள் தயாராகிவிடும். அப்படி தயாராகும் பட்சத்தில் அங்கேயே தங்கி பணிபுரிய நிருவாகிகள், விருந்தினர்களை வரவேற்கும் பணியாள்கள், சமையற்கலைஞர்கள், இதர பணியாளர்கள் என விண்வெளி நட்சத்திர விடுதி இயங்கும்.
இந்த நட்சத்திர விடுதி விரைவில் நிலவின் மேற்பகுதியில் கட்டப்படும்போது மெல்ல மெல்ல மனிதர்கள் விண்வெளியில் குடியேறும் வேலை துவங்கும். இதன்படி 2030ஆம் ஆண்டு வாக்கில் திங்கள்கிழமை காலையில் நிலவில் உள்ள அலுவலகத்திற்கோ அல்லது விண்வெளியில் உள்ள அலுவலகத்திற்கோ சென்று பணி செய்துவிட்டு வார இறுதியான வெள்ளிக்கிழமை மீண்டும் பூமிக்குத் திரும்பும் நிலை உருவாகும். அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2035ஆம் ஆண்டு பூமியை விட்டு பல குடும்பங்கள் நிலவின் மேற்பரப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று இருக்கும். அதன் பிறகு செவ்வாய்க் கோளிலும் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினம் வாழ்ந்தது போல் மனிதர்களும் அங்கு வாழத் துவங்குவார்கள்.
நிலவில் உள்ள தூசிகளில் இருந்து சிமின்ட் உள்ளிட்ட கலவைகள் தயாரிக்கலாம் என்றும் நிலவின் துருவங்களில் நீர் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் நிலவில் சுரங்கங்கள் தோண்டும் வேளையில், அங்கும் பூமியில் உள்ளதைப்போன்று உலோகங்கள் கிடைக்கும் நிலையில் பாதுகாப்பான அனைத்து கட்டமைப்பும் உருவாக்கப்படும். அப்போது மெல்ல மெல்ல பூமியிலிருந்து அனைத்து மனிதர்களும் விண்வெளிக்கு இடம் பெயர ஆரம்பிப்பார்கள்.
இதனால் மனித இனம் புதிய பல எல்லைகளைக் கடந்து செல்லும்.