பொங்கல் வந்தது!
தமிழர்திரு நாளான பொங்கல் வந்தது!
தைமுதலாம் நாளினிலே பொங்கல் வந்தது!
அமிழ்தினிலும் இனியதான பொங்கல் வந்தது!
அனைத்துயிர்க்கும் இன்பமான பொங்கல் வந்தது!
இமைகளோடு விழிகளான பொங்கல் வந்தது!
எருதுழவர் உழைப்பைப்போற்றும் பொங்கல் வந்தது!
சுமைகள்யாவும் களைவதான பொங்கல் வந்தது!
சுகங்கள்யாவும் விளைவதான பொங்கல் வந்தது!
சமயம்ஜாதி மதம்கடந்த பொங்கல் வந்தது!
சமத்துவப்பூ மணம்கலந்த பொங்கல் வந்தது!
அமைதிவாழ்வு மலர்வதான பொங்கல் வந்தது!
அகங்கள்யாவும் மகிழ்வதான பொங்கல் வந்தது!
இமயதீப வெளிச்சமாகப் பொங்கல் வந்தது!
இருண்டமூடப் பழக்கம்போகப் பொங்கல் வந்தது!
கமழும்வாசம் பரப்பும்வாசல் பொங்கல் வந்தது!
கதிரின்வானம் வரைக்கும்வீசும் பொங்கல் வந்தது!
திமிரும்ஏறு தழுவலான பொங்கல் வந்தது!
திறமைவீரம் தருவதான பொங்கல் வந்தது!
குமுறும்கோபத் தழலும்ஆறப் பொங்கல் வந்தது!
குளிரும்ஏறப் பொழியும்மாரிப் பொங்கல் வந்தது!
நமதுஊரை உறவைக்காணும் பொங்கல் வந்தது!
நலங்கள்சூழ வணங்கிவாழ்த்தும் பொங்கல் வந்தது!
குமையும்ஆசை முழுதும்தீரும் பொங்கல் வந்தது!
குறளின்ஆசான் புகழைக்கூறும் பொங்கல் வந்தது!
– தளவை இளங்குமரன்
இலஞ்சி