புரியாத புதிர் அல்ல! : பூமிக்கு அடியில் பனிக் குகைகள்
சரவணா ராஜேந்திரன்
அய்ஸ்லாந்து நாட்டில் மண்ணுக்கு அடியில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு பனிக்கட்டிகளால் ஆன குகைகள் உள்ளன. இந்தப் பனிக்கட்டிகளின் ஊடே ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து பனியால் உறைந்துபோன சிறிய வகை உயிரினங்கள் ஆங்காங்கே காணப்படும். இதனை மிகவும் அதிசயமானதாகப் பார்க்கிறார்கள். இதையும் வேற்றுக் கோளில் இருந்து வந்தவர்கள் செய்தனர் என்று கூறுவார்கள். காரணம், ஒவ்வொரு குகையிலும் பனிச்சுவர்கள் பல மீட்டர் தடிமன் உள்ளவை.
ஆனால், இது எப்படி ஏற்பட்டது என்றால் எரிமலைக் குழம்புகள் புவியின் ஆழத்திலிருந்து வெளிவரும்போது இந்தக் குகைகள் உருவாகின. பல கோடி ஆண்டுகளாக இந்தக் குகைகளில் லாவா குழம்பு வெளிவராததால் மெல்ல மெல்ல பனிக்கட்டிகள் இந்தக் குகைகளை நிரப்பி மனிதர்கள் செல்லுமளவிற்குப் பாதைகளை உருவாக்கி விட்டன. சில குகைகளின் அடிவாரத்தை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஆழமான குகைகளாக இவை உள்ளன.
இந்தக் குகைகள் குறித்த அறிவியல் பார்வை இல்லாத காரணத்தால் வேற்றுக்கோள் உயிரினம் குறித்த கட்டுக்கதை பரவிவந்தது. தற்போது அறிவியல் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் கட்டுக்கதை பரவி வருகிறது.
இதுபோன்ற லாவா குகைகள் செவ்வாய்க் கோளிலும் நிலவிலும் உள்ளன. ஆழமான குகைகளில் கதிரியக்க ஆபத்து குறைவாக இருக்கும். மேலும், ஆபத்து மிகுந்த தூசுப்புயல், கடுமையான வெப்பம், கடுங்குளிரில் இருந்து நிலவுக்கும் செவ்வாய்க்கும் செல்லும் மனிதர்களைப் பாதுகாக்கும் வாழிடமாக இந்தக் குகைகள் திகழும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். ஆகையால், அங்கு மனிதர்கள் குடியேற்றத்தில் இந்தக் குகைகள் முக்கிய பங்குவகிக்கக் கூடும். அதாவது செவ்வாய்க்கு வேற்றுகிரக மனிதர்களாக நாம் போடும் போது அவை நமக்குப் பயன்படலாம்! எப்பூடி?